• Post category:HEALTH
  • Post published:May 23, 2020
Spread the love

கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதில் வைட்டமின்-D துணைபோகிறாதா?

வைத்தியன் – நமது உடல் பாகம் 4

எலும்பின் நலம், இருதய நலம் போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக வைட்டமின்-D அவசியமானது எனப் பலரும் கூறக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இக் கோவிட்-19 சூழலில் அது இன்னுமொரு முக்கியத்துவத்தையும் பெற்று வருகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

எமது உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து பல வைரஸ் தொற்றுக்களிலுமிருந்தும் எம்மைப் பாதுகாக்க உதவுகிறது. அத்தோடு, எமது நோயெதிர்ப்பு ஆற்றலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து உடல் மேலதிக அழற்சிக்குள் (hyper inflammation) போகவிடாமல் உடலைப் பாதுகாக்கிறது எனவும் கூறப்படுகிறது.

அழற்சி (inflammation) என்றால் என்ன? ஏன் உண்டாகிறது?

Inflammation என்றால் எரிவு என்பதே பொருள். (flame=சுவாலை). உடலின் கலங்கள் தீப்பற்றி எரிவதுபோன்ற உணர்வை இச் சொல்லால் குறிக்கலாம். ‘கலங்களினுள் போர் நடக்கும்போது’ அவையும் சேர்ந்து தாக்கப்படுவது வழக்கம். சிலர் inflammation ஐக் கல வீக்கம் என்றும் அழைப்பர்.Cytokines

ஒருவரின் உடலில் பிறபொருட்களோ அல்லது கிருமிகளோ புகுந்தவுடன் உடலின் நோயெதிர்ப்புத் தொகுதியான காவற்படைக்குத் தகவல் கிடைத்ததும் அது முதற் செய்யும் காரியம் cytokines எனப்படும் ஒருவகைப் புரதத்தை உற்பத்தி செய்வதற்குப் பணித்துவிடுகிறது. நிர்ப்பீடனக் கலங்களுட்பட (immune cells) உட்படப் பல கலங்கள் இவற்றை உற்பத்தி செய்கின்றன. இந்த cytokines (காவற் படை) நோய்க்கிருமியுள்ள இடத்துக்கு விரைகின்றன. உதாரணத்துக்கு SARS-CoV-2 வைரஸ் சுவாசப் பைகளிலுள்ள கலங்களில் தொற்றிக்கொண்டால் அவ்விடத்தை நோக்கி இக் கலங்கள் போகும்.

Cytokine Storms

சில வேளைகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தை உடல் அதிகமாக நினைத்துக்கொண்டு தேவைக்குமதிகமான cytokines களை உருவாக்கிவிடுகிறது. இதற்குப் பெயர்தான் cytokine storm. இதை immune system overdrive எனவும் கூறுவார்கள். நோய்த்தொற்று காணப்படாத இடங்களில் உற்பத்திசெய்யப்பட்ட cytokines கூட தொற்றுள்ள இடத்துக்கு விரந்துவிடும். இதன் விளைவாக நோய்த்தொற்றுள்ள சிறிய இடத்தில் பாரிய போர் நடைபெறுவதால் உருவாகுவதே உடல் அழற்சி அல்லது கல அழற்சி. இவ்வழற்சி கட்டுபடுத்தாவிடின் அது மரணத்தில்தான் முடிகிறது. வைட்டமின் – D யிற்கு இந்த cytokines உருவாக்கத்தை ந்றிப்படுத்தும் தன்மை உண்டு என விஞ்ஞானிகள் தற்போது கருதுகிறார்கள்.

வைட்டமின்-D யின் இந்த தொழிற்பாட்டை ஆவுகூட கலவளர்ப்புப் பரிசோதனைகளின் (cell culture) மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். அதே வேளை, நோய்த்தொற்றுள்ளவர்களின் இரத்தத்தில் 25-hydroxy-vitamin D யின் அளவு குறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை, மூன்று வித்தியாசமான தென்னாசிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற கோவிட்-19 நோயாளிகளைப் பரிசோதித்ததில், அவர்களில் பலருக்கு வைட்டமின்-D குறைபாடு இருக்கக் காணப்பட்டது. வைட்டமின்-D குறைபாடற்றவர்களுக்கு நோயின் தாக்கம் அவ்வளவு பாரதூரமாக இருக்கவில்லை.இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை (BMJ) வந்த கட்டுரையொன்றில் வைட்டமின்-D மாத்திரைகளை உண்பவர்களில் சுவாசத் தொற்றுகள் 12% குறைவாக இருப்பது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. வைட்டமின்-D மாத்திரைகளை உண்பவர்கள் 70% நோய்த்தொற்றைத் தடுக்கமுடியுமென அப்போதைய ஆய்வு தெரிவித்திருந்தது.

பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, தென்னமெரிக்கா போன்ற நாடுகளில் கோவிட்-19 நோய்ப்பாதிப்புக்குள்ளாகி வருபவர்கள் பலர் வெள்ளையரல்லாதோராக இருப்பதற்கு வைட்டமின்-D போதாமை காரணமாகவிருக்கலாமோ என்ற சந்தேகம் பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனாலும் அதுபற்றிய ஆராய்ச்சிகள், தரவுச் சேகரிப்பு எதுவும் முற்றுப்பெறாத நிலையில், தற்போது வைட்டமின்-D யிற்கும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கும் இருக்கும் தொடர்பு பற்றிச் சில ஆய்வுகள் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.

ஹார்வார்ட் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ஜோஆன் மான்சன் இதுபற்றி ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதே வேளை மருத்துவ சஞ்சிகையான ‘லான்செட்’ இதுபற்றிய கட்டுரையொன்றையும் வெளியிட்டுள்ளது.

வைட்டமின்-D உற்பத்தி

எமது உடலில் சூரிய ஒளி படும்போது, உடலில் இருக்கும் கொலெஸ்ரெறோலில் இருந்து வைட்டமின்-D உருவாக்கப்படுகிறது. சூரிய ஒளியிலிருக்கும் புற ஊதாக் கற்றைகள் (ultra violet rays) தோற்கலங்களில் இருக்கும் கொலெஸ்ரெறோலிலிருந்து வெளியேற்றும் சக்தியைக் கொண்டு வைட்டமின் -D உருவாக்கப்படுகிறது.

மேற்குநாடுகளில் வசிக்கும் உஷ்ணவலய மக்கள் பெரும்பாலும் வெளியே போவதோ அல்லது சூரிய வெளிச்சத்தில் குளிப்பதோ குறைவு. அதே வேளை வெள்ளைத் தோலுள்ளவர்களில் குறைந்தளவு சூரிய ஒளியுடன் போதுமான வைட்டமின் -D உருவாக்க முடியும். கறுப்பு அல்லது மண்ணிறத் தோலுடையவர்கள் போதிய அளவு வைட்டமின் -D யைப் பெற, அதிக நேரம் சூரிய ஒளியில் நிற்கவேண்டும். அத்தோடு, தோலில் இருக்கும் (கறுப்புத் தோல்களில் அதிகம்) மெலனின் என்னும் பதார்த்தம சூரிய ஒளி வைட்டமின் -D தயாரிப்பதைத் குறைத்துவிடுவதும் இன்னுமொருகாரணம்.

வைட்டமின் -D யைத் தரும் உணவு வகைகள்

தற்போது அநேகமாக எல்லா உணவுப் பொதிகளிலும் லேபல்கள் ஒட்டப்படுகின்றன. அவற்றை வாசித்து எப்படியான உணவு வகைகளில் எவ்வளவு வைட்டமின் – D அளவு இருக்கிறது என்பதைப் பார்ப்பதை வழக்கமாகக் கொள்வது நல்லது. அனேகமான பால் தயாரிப்புகள், பல தானிய உணவுகள் (cereals), தற்போது வைட்டமின் – D ஊட்டம் பெற்று வருகின்றன. சூரிய ஒளியில் காயவிடப்பட்ட காளான்கள் வைட்டமின் – D சத்துக் கொண்டவை.மாத்திரைகள்

வைட்டமின் – D மாத்திரைகளை எடுப்பதானால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றபின்னர் உட்கொள்வது நல்லது. பரிந்துரைக்கப்பட்ட நாளாந்த அளவு 600-800 IU. இன் நோய்த்தொற்றுக் காலத்தில் நாளாந்தம் 1000-2000 IU ஏற்றுக்கொள்ளக்கூடியது எனச் சில மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். வாயினால் உட்கொள்ளும் மாத்திரைகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைவு. சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகளில் வியாதிகள் உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவரது ஆலோசனையைப் பெற்றே மாத்திரைகளை உட்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Print Friendly, PDF & Email