Spread the love
சீனாவில் ஆராய்ச்சிக்குழு சாதனை.

இக் கட்டுரைக்கான மூலம் ஜாமா (JAMA) என்ற மருத்துவ / ஆராய்ச்சி விடயங்கள் பிரசுரமாகும் சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டது. Dr. கனக சேனா MD. அவர்களின் ஆலோசனையுடன் இயன்றவரை வாசகர்களுக்குப் புரியும் விதத்தில் மொழிபெயர்த்துள்ளேன். – சிவதாசன்

சீனாவில் கோவிட-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி, சுவாச இயந்திரங்களின் உதவியுடன் மருத்துவமனைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 நோயாளிகள் மீது மருத்துவ, விஞ்ஞானிகள் கொண்ட குழுவொன்று பரீட்ச்சார்த்த சிகிசசையொன்றை மேற்கொண்டது.

இந் நோய்க்கு உலகிலேயே சிகிச்சை என்று எதுவுமில்லாத காலம் (ஜனவரி 2020) அது. சீனாவில் கொத்துக் கொத்தாக மக்கள் மரணித்துக்கொண்டிருந்தார்கள்.

பரிசோதனை

இப் பரிசோதனையின் நோக்கம், ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு ஆளாக்கிக் குணமாகிக்கொண்டிருந்த நோயாளிகளின் வடி கட்டிய இரத்தத்தை (plasma – குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம் ) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 நோயாளிகளுக்கும் ஏற்றுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த முடியுமா என ஆராய்வதே.

ஏற்கெனவே நோய் தொற்றுக்குள்ளாகிகுணமடைந்தவர்களது இரத்தத்தில் அவர்களது உடல்கள் உருவாக்கிய நோயெதிர்ப்பு ஆற்றலுக்குப் பொறுப்பான எதிர்ப்பு பொருட்கள் (antibody) நிறைய இருக்கும். இரத்த பிளாஸ்மாவுடன் இருக்கும் இந்த எதிர்ப் பொருட்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நோயாளிகளிலும் வைரஸ்களைக் கொல்லுமா எனப் பரிசோதிப்பதே இச் சிகிச்சையின் நோக்கம்.இந்த 5 நோயாளிகளும், தீவிர நிமோனியாவுடன், கோவிட-19 என்ற (Acute Respiratory Distress Syndrome (ARDS)) நோய் உறுதி செய்யப்பட்டு செயற்கைச் சுவாச இயந்திரங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள். நிமோனியா உச்சத்துக்குப் போய்க்கொண்டிருந்தது. வைரஸ் எண்ணிக்கையும் (viral load) படு வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அன்ரி வைரல் மருந்தும் (oseltamivir), மீதைல் பிரெட்னிசோன் (methylprednisolone) மருந்தும் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அன்ரி வைரல் மருந்து ஏற்கெனவே H1N1 வைரஸ் கட்டுப்பாட்டில் மிகவும் வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்ட ஒன்று. கோவிட்-19 நோயாளிகளில் அது பலன் தருவதில்லை.

இந்த 5 பேருக்கும் இரத்த பிளாஸ்மா (convalescent plasma transfusion) ஏற்றப்பட்டது.

சீனாவின் செஞ்சேன் மூன்றாம் மனிதர் மருத்துவ மனையில் (Shenzhen Third People’s Hospital) ஜனவரி 20, 2020 முதல் மார்ச் 25, 2020 வரை இந்த ஐவருக்கும் இச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்கள் அனைவரின் வைரஸ் எண்ணிக்கை, வெப்பநிலை, சுவாசத்திறன் (ஒக்சிசனை உள்ளெடுக்கும் திறன் (ECMO), தொடர் உறுப்பிழப்பு (sequential organ failure assessment – (SOFA) போன்ற அளவுகளையும் அறிகுறிகளையம் ஆராய்ச்சியாளர் தொடர்ந்து (முன்னரும் பின்னரும்) அவதானித்து வந்தார்கள். 10 முதல் 22 நாட்களுக்கு இச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Related:  பி.பி.சி. ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையாவுக்குப் புற்றுநோய்

இந்த 5 நோயாளிகளின் வயது 36 – 65 வரை. இருவர் பெண்கள்.

முடிவுகள்

இரத்தம் ஏற்றத் தொடங்கி 3 நாட்களுக்குள் 4 நோயாளிகளுக்கு காய்ச்சல், உறுப்பிழப்பு வீதம் (SOFA) குறைந்துவிட்டது. 12 நாட்களில் ஒக்சிசன் வீதம் (PAO2/FIO2) அதிகரித்திருந்தது. வைரஸ் எண்ணிக்கை குறைந்து 12 நாட்களில் ஒன்றுமே இருக்கவில்லை (negative). 7 வைத்து நாளில் அவர்களது எதிர்ப் பொருட்களின் (antibody) எண்ணிக்கை 40 – 60 இலிருந்து 80-320 வரை அதிகரித்திருந்தது. இரண்டு வாரங்களில் 3 நோயாளிகளுக்கு செயற்கைச் சுவாசம் தேவையற்று விட்டது. 5 பேரில், 3 நோயாளிகள் முறையே 53, 51, 55 நாட்களில் வீடுகளுக்குப் போய்விடடார்கள். மீதி இருவரும் 37 நாட்களுக்குப் பிறகு சுமுகமான நிலைக்கு வந்து விட்டார்கள்.

இது ஒரு நிபந்தனைகளற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முயற்சி மட்டுமே எனவும், இதை வைத்து எதையும் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாதெனவும் அவ்வாராய்ச்சியாளர் அறிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email