Spread the love

இன்னும் 6 மாதங்களில் பாவனைக்கு வரலாம்

ஆகஸ்ட் 31, 2020: கனடிய மத்திய அரசு, 114 மில்லியன் அளவுகள் (doses) கோவிட்-19 தடுப்பு மருந்துகளை, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இம் மருந்துகள் தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கின்றன எனினும், அடுத்த வருடம் (2021) வசந்த காலத்தில் பாவனைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேரிலாண்டைத் தளமாகக் கொண்ட உயிரித்தொழில்நுட்ப நிறுவனமான ‘நோவாவக்ஸ்’ (Novavax), இன்று வெளியிட்ட அறிக்கையில், 76 மில்லியன் அளவுகள் தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தைக் கனடிய அரசுடன் செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இருப்பினும், கனடிய சுகாதார அமைச்சு அனுமதி கொடுக்கும் பட்சத்திலேயே இது கனடாவில் பாவனைக்கு விடப்படும்.

அதே வேளை, அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் ‘ஜோன்சன் அண்ட் ஜோன்சன்’ (Johnson & Johnson) நிறுவனத்திடம் மேலும் 38 மில்லியன் அளவுகள் மருந்தை வாங்குவதற்குக் கனடிய மத்திய அரசு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

உலகில் நூற்றுக்கு மேலான நிறுவனங்கள் கோவிட்டுக்கான தடுப்பு மருந்தை உறுவாக்குவதில் போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டு வருகின்றன. கனடா வாங்கும் இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் வெவ்வேறு முறைகளில் நோய்த் தொற்றைத் தடுக்கின்றன எனக் கூறப்படுகிறது.

நோவாவக்ஸ் தயாரிக்கும் மருந்து “protein subunit” தடுப்பு மருந்து எனப்படுகிறது. ஏனைய தடுப்பு மருந்துகளைவிடக் குறுகிய காலத்தில் தயாரிக்கக்கூடிய இம் மருந்து, மற்றையவற்றைப்போல் பலமான நோய்த் தடுப்பாற்றலை உடலில் முடுக்கிவிடக்கூடியது அல்ல என்கிறார்கள்.

கடந்த மாதம், சுகதேகிகளில் இம் மருந்தின் இரண்டு அளவுகள் ஏற்றிப் பரிசோதிக்கப்பட்டபோது, அவர்களில், நோய் வந்து தப்பியவர்களின் உடல்களில் இருந்ததைவிட அதிக அளவு நோயெதிர்ப்பு பதார்த்தங்கள் (antibodies) இருப்பது அவதானிக்கப்பட்டது.



அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் மேற்கொள்ளப்பட்வுள்ள இரண்டாவது சுற்றுப் பரிசோதனைகளில், 60-84 வயதுள்ள மேலும் பல தொண்டர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என அறிவிக்கப்படுகிறது.

சுகாதாரத் திணைக்களங்களின் அங்கீகாரம் கிடைத்துவிடுமானால் அடுத்த வருடம் வசந்த காலத்தில் இம் மருந்து மக்கள் பாவனைக்கு வருமென்கிறது ‘நோவாவக்ஸ்’.

பிரித்தானியா,இந்தியா, செக் குடியரசு, தென்னாபிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும், ‘நோவாவக்ஸ்’ இம் மருந்தை வழங்குவதற்கான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும், Ad26.COV2.S எனப் பெயரிடப்பட்டுள்ள தடுப்பு மருந்து, ‘நோவாவக்ஸ்’ சின் தடுப்பு மருந்தைவிட, வைரஸை முற்றிலும் வித்தியாசமான முறையில் தாக்குகிறது. வைரஸை, இனப்பெருக்கம் செய்ய முடியாதவாறு ஆய்வுகூடத்தில் மாற்றியபின் உடலுக்குள் அனுப்பும்போது அவற்றால் பெருக முடியாது அதே வேளை உடல் அதற்கு எதிராகத் தனது தடுப்பாற்றலை விருத்தி செய்துகொள்ளும். இத் தடுப்பு மருந்தின் முதலாம், இரண்டாம் சுற்றுப் பரிசோதனைகள் அமெரிக்காவிலும், பெல்ஜியத்திலும் நடைபெற்று வருகின்றன.

Related:  கோவிட்-19 | இளையோருக்கு எச்சரிக்கை! - அறிகுறிகள் எதுவுமில்லாது தாக்குகிறது

அதே வேளை, கனடிய அரசு, ஃபைசர் (Pfizer), மொடேர்ணா (Moderna) ஆகிய வேறு இரு நிறுவனங்களுடனும், முறையே 20 மில்லியன், 56 மில்லியன் அளவுகள் மருந்துகளுக்கு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. தொழிற்பாட்டு ரீதியில் இவை ஏற்கெனவே குறிப்பிட்ட மருந்துகளுக்கு நிகரானவை.

Print Friendly, PDF & Email
கோவிட்-19 தடுப்பு மருந்து | 114 மில்லியன் அளவுகள் மருந்துகளைக் கனடா வாங்குகிறது
கோவிட் தடுப்பு மருந்து

கோவிட்-19 தடுப்பு மருந்து | 114 மில்லியன் அளவுகள் மருந்துகளைக் கனடா வாங்குகிறது