HealthIndia

கோவிட்-19 சிகிச்சை மருந்துக்கான தடையை நீக்கியது இந்தியா

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கோவிட்-19 நோயைத் தீர்க்க உதவுகிறது எனக் கருதப்படும் ஹைட்றொக்ஸிகுளோறோகுயீன் (Hydroxychloroquine (HCQ)) மருந்து ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியிருக்கிறது.

கடந்த 100 வருடங்களுக்கு மேலாக மலேரிய நோய்ச் சிகிச்சைக்காக உலகம் முழுவதும் பாவிக்கப்படும் இம் மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. கோவிட்-19 நோக்கான சிகிச்சையாகப் பலநாடுகள் பாவிக்கத் தொடங்கியதும் மருந்து பதுக்கப்படுவதும், அதனால் சந்தையில் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதைக் காரணம் காட்டி, ஏப்ரல் மாதம் 4 ம் திகதி, ‘உலகின் மருந்தகம்’ என வர்ணிக்கப்படும் இந்தியா இம் மருந்தின் ஏற்றுமதியைத் தடை செய்திருந்தது.

இம் மருந்து கோவிட்-19 நோயைத் தீர்க்கிறது என அமெரிக்க ஜனாதிபதி சமீபத்தில் பகிரங்கமாகக் கூறியதையடுத்து பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஆனாலும் ட்றம்ப், இம் மருந்தின்மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்தியாவின் தடையால் எரிச்சலடைந்த ஜனாதிபதி ட்றம்ப், ‘தடையை நீக்காவிட்டால் இந்தியா பாரதூரமான விளைவுகளை எதிர்பார்க்க வேண்டி வருமெனெ எச்சரித்ததுமல்லாது, பிரதமர் மோடியை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்துத் தடையை நீக்கும்படியும் கேட்டுமிருந்தார். இதன் பிரகாரம் தடை இப்போது நீக்கப்பட்டுள்லது.

உலகின் கோவிட்-19 மரணங்கள் 75,000 தைத் தாண்டும் நிலையில், பல நாடுகள் இந்த ‘மலேரிய மருந்தைச்’ சிகிச்சைக்குப் பாவிப்பது அதிகரித்து வருகிறது. விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு ஏற்படலாமென்ற எண்ணத்தில் பல நாடுகளில் இறக்குமதியாளர்கள் இம் மருந்தைப் பதுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

இம் மருந்து பல வடிவங்களில் பல தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குளோறோகுயின் என்ற வடிவத்தில் இது மீன் வளர்ப்பு தாங்கிகளைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. அதே வேளை முடக்கு வாதம் (rheumatoid arthritis), லூபஸ் (lupus) ஆகிய சுய நிர்ப்பீடன எதிர்ப்பு நோய்களைத் (autoimmune) தீர்ப்பதற்கு ஹைட்றொக்சிகுளோறோகுயின் என்ற மருந்துக்கூட்டு பாவிக்கப்பட்டு வருகிறது.

“இம் மருந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது, கோவிட்-19 நோயாளிகள், மருத்துவர்களின் ஆலோசனையுடன் இம் மருந்தைப் பாவிக்க வேண்டும்” எனக் கடந்த வாரம் ஜனாதிபதி ட்றம்ப் அறிவிப்பை விட்டிருந்தார்.ஆனால் இதன் பாவனை குறித்தும், சிகிச்சைக்கு உகந்ததா என்பது குறித்தும் நிபுணர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். சிலர், இம் மருந்தைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ட்றம்ப் முதலீடு செய்துள்ளதால் தனது சுய நன்மைக்காக அவர் இதைக் கூறுகிறார் எனவும் கூறுகிறார்கள். ஆனால் இம் மருந்து தயாரிப்பதற்கான உரிமம் (patent) காலவதியாகிவிட்டதைத் தொடர்ந்து (20 வருடங்கள்) இந்தியா அம் மருந்தைத் தயாரித்து (generic versions) மிகவும் மலிவான விலைக்கு விற்கிறது. ட்றம்பிற்கு இதனால் நேரடியான இலாபம் எதுவும் வரப்போவதில்லை எனவும் கூறப்படுகிறது.

தற்போது, “அமெரிக்காவுடனான உறவின் காரணமான நல்லெண்ண ரீதியிலும், மனிதாபிமான ரீதியிலும், தடைக்கு முன்னர் விண்ணப்பிக்கப்பட்ட தொகையான மருந்தை ஏற்றுமதி செய்யத் தாம் தயார் எனவும் அதே வேளை, தம்மை நம்பியிருக்கும், இலங்கை, நேபாளம் போன்ற அயல் நாடுகளுக்கும் பரசிட்டெமோல், HCQ போன்ற மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்குத் தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளதாகவும் மோடி அறிவித்திருக்கிறார்.

அதே வேளை, இந்தியாவின் சுய தேவைகளுக்கு இம் மருந்து போதாமல் இருக்கும்போது, அமெரிக்காவின் மிரட்டலுக்கு மோடி அடிபணிந்துவிட்டார் என இந்தியாவின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராஹுல் காந்தி சாடியிருக்கிறார்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமுள்ள இரு தரப்பு வர்த்தகம் $80 பில்லியனுக்கு மேல் இருக்கும்போது அமெரிக்க உறவைப் பாதிக்க மோடி விரும்பமாட்டார். இருப்பினும் “இது ஒரு தற்காலிக நிவாரணமே தவிர நீண்ட காலத்துக்கு இதைத் தொடரும் உத்தேசமில்லை. நமது நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமில்லாதபடியால் இப்போதைக்கு எங்களுக்கு இது சாத்தியமாகிறது ” என அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதே வேளை இந்தியாவிற்குத் தேவையான அத்தியாவசிய சுவாசக் கருவிகளை (ventilators) ஏற்றுமதி செய்வதற்கு ட்றம்ப் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதே போல, கனடாவுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் முகவாய்க் கவசங்களை ஏற்றுமதி செய்வதை அவர் தடுத்துள்ளார்.

அமெரிக்காவின் கோவிட்-19 நோய்த் தொற்றும், மரணங்களும் மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது, 400,000 தொற்றுக்களும், 13,000 இறப்புக்களும் நிகழ்ந்திருக்கின்றன.