HealthIndiaசிவதாசன்

கோவிட்-19 | கேரளா வெற்றியின் இரகசியம்

சிவதாசன்

கோவிட்- 19 வைரஸின் கொட்டத்தை அடக்கிய இந்திய மாநிலங்களில் முதன்மையானது கேரளா. உலக நாடுகளில் முதன்மையானது வியட்நாம். இரண்டின் வெற்றிகளுக்கும் காரணம் பொதுப்புத்தி இருந்தமையும், அதைப் பாவித்தமையும்.

2018 இல் கேரளாவில் ஒரு வைரஸ் தொற்று வந்தது. அதுவும், சார்ஸ் கொவ்-2 வைப் போல, வெளவாலிலிருந்து (பழ வெளவால்) தொற்றியிருந்தது. 19 நோயாளிகளில் 17 பேர் மரணமடைந்திருந்தனர். முதல் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தாதி உட்பட, பெரும்பாலானவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள். நோய் இன்னது என்று அறியமுன்னரே அது தொற்றுக்கள் பரவி விட்டன. அந்த தொற்றுக்குக் காரணமான வைரஸுக்குப் பெயர் நிப்பா.

தற்போதய கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகிய கேரளத்தவர் 39. இறந்தவர் 5. கேரளத்தில் 35 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். நிப்பா வைரஸ் கற்றுக்கொடுத்த பாடத்தை அவர்கள் மறக்கவில்லை.

நிப்பா வைரஸ் மே 2, 2018 திகதி அடையாளம் காணப்பட்டு, ஜூன் 10, 2018 ஒழிக்கப்பட்டுவிட்டதாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 19 தொற்றுக்கள், 17 மரணங்கள். அது தந்துவிட்டுப்போன அனுபவம் இன்று ஆயிரக்கணக்கானோரைக் காப்பாற்றியிருக்கிறது.

அனுபவம்

வட கேரளாவிலுள்ள கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் 2018 இல் நிப்பா வைரஸ் தொற்றியிருந்தது. முதலாவது நோயாளியின் பெயர் மொஹாமெட் சபித். ஆரம்பத்தில் இந் நோயைப்பற்றி எதுவித அனுபவமும் இல்லாத நிலையில், பேரம்பிர உப-பிரிவு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் கோழிக்கோடு அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் மரணமானார். அதைத் தொடர்ந்து அவரது சகோதரர் மொஹாமெட் சாலி கோழிக்கோட்டிலுள்ள பேபி மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சகோதரரின் மரணத்தோடு இதை ஒப்பிட்ட அங்குள்ள மருத்துவர்கள் எடுத்த பொதுப்புத்தி நடவடிக்கையின் பிரகாரம், இரண்டு பேரையும் தாக்கியது நிப்பா வைரஸ் என அடையாளம் காணப்பட்டது. பின்னர் சாலியும் மரணமடைந்தார்.

இதற்கிடையில் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில், முதலில் மரணமடைந்த சாபித்திலிருந்து 18 பேர் தொற்றுக்கு ஆளாகிவிட்டனர். அவருக்குச் சிகிச்சை வழங்கிய லினி புதுசேரி என்ற தாதி உட்பட, முதல் வாரத்திலேயே 10 பேர் மரணமாகினர். கோழிக்கோட்டில் ஆரம்பமாகிய தொற்று அருகிலுள்ள மலப்புரம் மாவட்டத்துக்குப் பரவி, அயல் மாநிலமான கர்நாடகத்தின் மங்களூர் மாவட்டத்துக்கும் பரவிவிட்டது.

நடவடிக்கை

அரசாங்கமும் மருத்துவர்களும் உடனடி நடவடிக்கைகளில் இறங்கினர். கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களிலுள்ள 2,000 பேர் தனிமைப் படுத்தப்பட்டு நோய் கட்டுப்படுத்தப்படும்வரை அவதானிக்கப்பட்டனர். நோயைக் கட்டுப்படுத்த M 102.4 என்ற மனிதரிலிருந்து எடுக்கப்பட்ட பிறபொருளெதிரி (antibodi) அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நிப்பா வைரஸ் ஆராய்ச்சியாளரான கிறிஸ்தோபர் புரோடர் இதை ஒழுங்கு செய்திருந்தார். உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானியான செளம்யா சுவாமிநாதன் நிப்பா வைரஸ் பற்றிய மனிதரிலான ஆராய்ச்சியைத் தொடக்கிவைத்துத் தலைமை தாங்கியும் வருகிறார்.

சபித்தின் மரணத்தைத் தொடர்ந்து மேலும் 16 பேரை நிப்பா பலிகொண்டது. ஜூன் 10, 2018 இல் நோய் ஒழிக்கப்பட்டுவிட்டதென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நிப்பா வைரஸ் தொற்றைத் (தற்போது கையாளும்) RT-PCR பரிசோதனைகள் மூலம் மணிபால் வைரலியல் இன்ஸ்டிடியூட்டும், பூனே யிலுள்ள தேசிய வைரலியல் இன்ஸ்டிடியூட்டும் உறுதி செய்திருந்தன. இவ் வைரஸ் பழ வெளவாலிலிருந்து தொற்றியது என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. ஒரு மாதத்துள் கேரளா இத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.



வெற்றியின் இரகசியம்

19 நோயாளிகளில் 17 பேரைக் கொன்ற வைரஸை ஒரு மாதத்துக்குள் அடக்கிவிடுவது என்பது ஒரு மகத்தான சாதனை. கேரளா எப்படி அதைச் சாதித்தது?

கோவிட்-19 தொற்று அறிவிக்கப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு தொழில்நுட்ப ரீதியில் உச்சத்திலுள்ள பணக்கார நாடுகள் இப்போது பாவிக்கும் நடைமுறைகளையே கேரளா 2 வருடங்களுக்கு முன்னர் கையாண்டிருந்தது. மாவட்ட ரீதியான ஊரடங்கு உத்தரவு, தொற்றாளர்களைத் தேடிப்பிடிப்பதில் அயராத உழைப்பு, சந்தேகிக்கப்பட்ட காவிகளைத் தனிமைப்படுத்தல்.

கோவிட்-19 தொற்றுக்கும் கேரளா இதே நடைமுறைகளையே பின்பற்றியிருந்தது. இந்தியாவின் 36 மாநிலங்களிலும் முதன் முதல் கோவிட் தொற்று வந்தது ஒரு கேரளத்தவருக்கு. ஜனவரி மாதம் வூஹானிலிருந்து திரும்பிய ஒரு மருத்துவ மாணவன் அதைக் கொண்டுவந்திருந்தார். இந்தியாவின் மொத்த தொற்றுக்களில் ஐந்திலொரு பங்கு கேரளாவிலேயே காணப்பட்டது. மார்ச் 24 இல் பிரதமர் மோடி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கிறார். 6 வாரங்களில் கேரளா, தொற்று ரீதியில் நாட்டின் 16வது இடத்துக்கு இறங்குகிறது.

கேரளாவின் 35 மில்லியன் மக்களில் பெரும்பாலானவர்கள் வெளி நாடுகளில் வேலை செய்கிறார்கள். கேரளாவில் இறந்ததைவிட 20 மடங்கு மலையாளிகள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர். இன் நாடுகள் எல்லாம் பெரும்பாலும் பணக்கார, நவீன வசதிகளைக் கொண்ட நாடுகள்.

வியட்நாமிலும் இதே கதை தான். 95 மில்லியன் மக்களுடன் ஒரு இறப்புமில்லாது சமாளித்திருக்கிறது. அதுவும் சீனாவை எல்லையாகக் கொண்ட நாடு. கேரளாவைப் போலவே அதுவும் பொதுப்புத்தியைப் பாவித்திருந்தது. ஊரடங்கு, தொற்றாளரைத் தேடிபிடித்தல், தனிமைப்படுத்தல். அமெரிக்கா, கனடாவில் போல மக்கள் தெருச் சந்திகளில் நின்று பதாகைகளைப் பிடிக்கவில்லை. மாறாக அரச கட்டுப்பாடுகளை மதித்திருந்தார்கள். கேரளாவுக்கு நிப்பா கொடுத்த அனுபவத்தைப்போல, சார்ஸ் (2003), பன்றிக்காய்ச்சல் (2009) வியட்நாமியர்களுக்கு நிறைய அனுபவத்தைக் கொடுத்திருந்தது. கற்றுக்கொண்டார்கள்.

இவ்விரண்டு சமூகங்களும் வைரசியலை அரசியலாக்கவில்லை என்பதுதான் இங்கு கற்றுக்கொண்டிருக்க வேண்டிய பாடம்.