Spread the love

சுவாசப் பைகள் பாதிப்பு, இரத்தம் கட்டியாகுதல் எனச் சில..

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மீண்டும் மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டு வருவதாகவும் சிலருக்கு வீடுகளில் வைத்தே ஒக்சிசன் வாயு வழங்கப்பட்டு வருவதாகவும் இந்திய மருத்துவர்கள் அறிவ்ப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கோவிட் தொற்று 1 மில்லியனைத் தாண்டும் வேளையில், நோயாளிகள் புதிய அறிகுறிகளுடன் அனுபதிக்கப்பட்டு வருவது மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

சுவாசப் பைகள் சேதமடைவது (lung fibrosis), சுவாசப்பை நாடிகளில் இரத்தம் உறைவது (Pulmonary Thrombo Embolism or PTE) போன்றன குணமடைந்த முன்னாள் தீவிர நோயாளிகளில் அவதானிக்கப்படும் சில அறிகுறிகள் என இம் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகிக் குணமடைந்த பல நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமப்படுவதால் மருத்துவமனைகளுக்குத் திரும்பிச் செல்கிறார்கள் என்ற விடயம் உலகம் முழுவதும் பல நுரையீரல் நிபுணர்களால், கடந்த சில வாரங்களில், அறிவிக்கப்பட்டு வருகிறது.

சுவாசப் பைகள் பழுதடைதல் (scarring of the lungs)

சுவாசப் பைகளில் நிமோனியா போன்ற நோய்கள் பாதிக்கும்போது அதன் சுவர்கள் பழுதடைந்து நார்த்தன்மையாகுவதால் நோயாளி சுவாசிக்கச் சிரமப்படுவது என்பது முன்னரே அறியப்பட்ட விடயம். இச் சேதம் அதிகரித்துக்கொண்டு போகும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவதால் பல சுவாச நோயாளிகள் ஒக்சிசன் தாங்கிகளைச் சுமந்து செல்லவேண்டியும் ஏற்படுகிறது.

தீவிரமான கோவிட் நோயாளிகள் பலரிந் சுவாசப் பைகள் இப்படியாகச் சேதமுறுவதால் அவர்களும் நிரந்தரமான சுவாசப்பை சேதத்துக்குள்ளாகிறார்கள். சேதமடைந்த சுவாசப்பைகளினால் உடலுக்கு போதுமான ஒக்சிசன் வழங்கப்பட முடியாமற் போகும்போது விரைவில் களைப்பு ஏற்படுவதும், மூச்சுத் திணறுவதும் ஏற்படுகிறது. இதன் நேரடி விளைவாக இருதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படவும் வழிகளுண்டு.

கோவிட்-19 நோயாளிகளில் வைரஸ் தொற்றினால் சுவாசப்பைகளின் சிறிய அறைகளில் நீர் தேக்கமுறும்போது ஒக்சிசன் உள்ளெடுக்கப்படும் அளவு படிபடியாகக் குறைகிறது. இதனால் தான் அவர்கள் சுவாசிக்கச் சிரமப்படுகிறார்கள். இதன் எதிர்வினையாகச் சிலருக்கு இருமலும் உண்டாகிறது. ஆனால் குணமாகிய கோவிட் நோயாளிகளில் இப்படிச் சேதமுற்ற சுவாசப்பைகள் பழைய நிலைக்குத் திரும்புமா என்பது பற்றி இன்னும் தீர்க்கமாக எதையும் கூறமுடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.



சுவாச நாடிகளில் இரத்தம் கட்டியாதல் (Pulmonary Thrombo Embolism (PTE))

Sars-Cov-2 வைரஸின் புதிய தாக்குதல் முறைகளில் ஒன்றெனச் சமீபத்தில் அறியப்பட்ட விடயம் சுவாசப் பை நாடிகளில் இரத்தத்தைக் கட்டியாகச் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தைத் தடைசெய்வது. சுவாசப்பைகளில் சிறியதும் பெரியதுமான பல நாடிகள் இரத்தத்தில் ஒக்சிசனை ஏற்றி இறக்கும் வேலைகளைச் செய்கின்றன. முக்கியமான பெரிய நாடிகளில் இரத்தம் உறையும்போது சிலவேளைகளில் மரணமும் ஏற்படலாம். இதுபற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related:  கோவிட் அமெரிக்கா | எந்த நோயாளி காப்பாற்றப்படவேண்டும் எனத் தீர்மானிக்க மருத்துவமனையில் ஒரு குழு!

வைரஸினால் இரத்த நாடிகளின் சுவர்களில் சேதம் விளைவிக்கப்படுகிறதென்றும் (அழற்சி /inflammation) அதைச் செப்பனிட உடல் எடுக்கும் முயற்சியால்தான் இரத்தம் கட்டியாகின்றதென்றும் சில விஞ்ஞானிகள் இச் செயற்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அதே வேளை இவ் வைரஸ்களை அழிப்பதற்கெனெ உடல் எடுக்கும் எதிர் முயற்சியினால் தேவைக்குமதிகமான நோயெதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் (cytokine storm) அழற்சி ஏற்படுகிறதென்ற கருத்தும் பரவலாக உண்டு. எப்படியானாலும் இரத்தம் கட்டியாதல் என்பது கோவிட் நோயாளிகளின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று.

தடுப்பும் சிகிச்சையும் (prevention and treatment)

பொதுவாக இரத்த ஓட்டத்தை இலகுவாக்க மருத்துவர்கள் பாவிக்கும் மருந்துகளான, அஸ்பிரின் போன்ற, இரத்த மென்மையாக்கிகள் (anticoagulants) தான் தற்போது இதற்குச் சிகிச்சையாகவும் தடுப்பாகவும் பாவிக்கப்படும் மருந்துகள்.அதே வேளை சுவாசப் பை நார்ப்படுதலைத் தடுக்க anti-fibrotic drugs மருந்துகளும், ஒக்சிசன் வழங்கிகளும் பாவிக்கப்படுகின்றன. அதே வேளை சுவாச அப்பியாசங்கள் மூலம் பைகளின் கொள்ளளவை அதிகரித்து சுவாசத்தை இலகுவாக்கவும் முடியும்.

Print Friendly, PDF & Email