HealthNews & AnalysisWorld

கோவிட்-19 காற்றினால் பரவக்கூடியது – ஒத்துக்கொண்டது உலக சுகாதார நிறுவனம்

கட்டிடக் காற்றுவழங்கல் முறைகளில் பாரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்

கொறோணாவைரஸ் மனிதருக்குப் புதியது; அதன் குணாதிசயங்கள் பற்றி இப்போதுதான் கற்றுக்கொண்டு வருகிறோம் என விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதன் பரவும் வழிகளைக் கண்டுபிடித்து அதை அடைத்துவிடவே மருத்துவ சமூகம் முயன்றுகொண்டிருக்கிறது. மனிதரிலிருந்து புறப்படும் நீர்த்திவலைகளில் ஒட்டிக்கொண்டு அவை பரவுகின்றன என்பதில் ஒட்டுமொத்தமாக உலக விஞ்ஞானிகள் கருத்தொருமித்து இருந்தனர். அவர்களின் அபிப்பிராயத்தின்படி உலக சுகாதார நிறுவனமும் முகக் கவசங்கள் மற்றும் இதர பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்திருந்தது.

இருப்பினும், இவ் வைரஸ்கள் காற்றினாலும் பரவக்கூடியவை என்ற கருத்தையும் ஒரு சாரார் கொண்டிருந்தனர். சார்ஸ் தொற்றின்போது (முதலாவது) ஹொங்க் கொங்கில் சில தொடர் மாடிக்கட்டிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிலருக்கு வைரஸ் தொற்றியதை அவதானித்த நிபுணர்கள் கட்டித்துக்கு காற்றையும் உஷ்ணத்தையும் வழங்கும் குழாய்கள் மூலம் வைரஸ் பரவியிருக்க வேண்டுமென்ற அனுமானத்தை எடுத்திருந்தார்கள்.

சார்ஸ்-கொவ்-2 வைரஸும் காற்றினால் பரவ வல்லது என்பதை விஞ்ஞானிகள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகக் கூறிவந்தாலும், சட்டமியற்றும் அதிகார அமைப்புகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது அவர்களும் இக்கருதுகோளை ஏற்றுக்கொண்டுள்ளதாக ‘சயன்ஸ்’ சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்க நோய்க் கட்டுபாட்டு மையமும் தற்போது அங்கீகரித்திருக்கும் இவ் விடயம், நோய்க் கட்டுப்பாட்டு விடயங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுதுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொடர்மாடி வாழிட மற்றும் வணிக கட்டிடங்கள் போன்றவற்றில் மீள் சுழற்சி செய்யப்படும் காற்றினால் நோய்ப் பரவல் துரிதப்படுத்தப்படும் என்பதை அங்கீகரித்தால், அக் கட்டிடங்களில் பாரிய சீரமைப்புக்களைச் செய்யவேண்டி ஏற்படும். இது அரசாங்கங்களுக்கு மேலும் பணச் செலவையும் கட்டிடச் சொந்தக்காரர்களுக்கு வசதிஈனத்தையும் கொடுக்கும். இது போன்று,1800களில் காலரா தொற்று கட்டுப்பாடற்றுப் பரவியபோது நீர்வழங்கல் குழாய்களில் காலரா தேங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதை ஒழிப்பதற்கான மாற்று வழிகள் பிரயோகிக்கப்பட்டன.

வீட்டிலோ அல்லது தொடர்மாடிக் கட்டிடங்களிலோ பாவிக்கப்படும் மீள்சுழற்சிக் காற்று வழங்கலில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு விஞ்ஞானிகள் நீண்ட காலமாகக் குரலெழுப்பி வருகின்றனர். இதனால் மட்டும் நோயைக் கட்டுப்படுத்திவிட முடியாது எனினும், அது பரவலின் தீவிரத்தைக் குறைக்கும் என்பது உண்மை. ஆனால் கட்டிடங்களில் காற்று வழங்கல், வடிகட்டல் போன்ற மாற்றங்களுக்கான செலவு வருடமொன்றுக்கு $50 பில்லியன் ஆகுமென்று ‘சயன்ஸ்’ சஞ்சிகை ஆய்வு தெரிவிக்கிறது.

14 நாடுகளைச் சேர்ந்த 39 விஞ்ஞானிகள் இவ்வாய்வில் ஈடுபட்டிருந்தார்கள். கட்டிடக் காற்று வழங்கல் முறையைச் சீரமைப்பதன் மூலம் சுத்தமான காற்றை வழங்கமுடியுமென்பதை நியமமாக உலகநாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே இவ் விஞ்ஞானிகளது கோரிக்கை. உலக சுகாதார நிறுவனம் இதில் தலையிட்டு, உள்ளக காற்றுத் தரம், காற்று வழங்கல் முறை, வடிகட்டல், கிருமியகற்றல், பரிசோதனை ஆகியவற்றில் நியமங்களை ஏற்படுத்தவேண்டுமென அவர்கள் கோருகிறார்கள்.

காலரா தொற்றினைத் தொடர்ந்து 1842 இல் பிரித்தானிய அரசு சுத்தமான நீர்வழங்கல் தொடர்பாக பாரிய மாற்றங்களைச் செய்யும்படி நகர சபைகளை ஊக்குவித்ததன் பயனாகப் பல கட்டிட, நீர் வழங்கல், கழிவுநீரகற்றல், தேக்கம், சுத்திகரிப்பு ஆகிய விடயங்களில் சர்வதேச நியமங்கள் உருவாக்கப்பட்டன என இவ்வாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல்

சார்ஸ்-கொவ்-2 வைரஸ் தொண்டையில் இருந்து தனது இனப்பெருக்கத்தை ஆரம்பிக்கிறது. இதிலிருந்து, சுவாசித்தல், பேசுதல், பாடுதல், இருமுதல், தும்முதல் போன்ற செயற்பாடுகளின்போது, கிருமி பல அளவுகளில், துணிக்கைகளாகக் காற்றில் பரவுகிறது.

பெரிய, கண்ணால் பார்க்கக்கூடிய திவலைகள் அருகிலுள்ள சுவர்களில், பொருட்களில் ஒட்டிக்கொள்கின்றன. கண்ணுக்குத் தெரியாத சிறு துணிக்கைகள் (aerosols) காற்றில் நீண்ட தூரத்துக்கு மிதந்து செல்கின்றன. அவை எவ்வளவு நேரம் காற்றில் இருக்கும், எவ்வளவு தூரம் காற்றினால் காவிச் செல்லப்படும் என்பவை காற்றின் வெப்பநிலை, ஈரப்பதன், வேகம் ஆகியவற்றில் தங்கியுள்ளது.

இந்த சிறு துணிக்கைகள் எவ்வளவு தூரத்துக்கு காற்றில் தங்கியிருக்கும், எவ்வளவு தூரம் பரவும் என்பதுவே இதுவரை விஞ்ஞானிகள் சமூகத்தைக் குழப்பி வந்த கேள்வி. இதில் மூன்றாம் தரப்பு, வணிக நோக்கமுடையோரது தலையீடுகள் இல்லாதிருக்குமெனக் கூறமுடியாது. ஆனாலும் கடந்த 16 மாதங்கள் நடைபெற்ற பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக விஞ்ஞானிகள், சார்ஸ்-கொவ்-2 கிருமி காற்றினால் பரவும் தன்மையுடையது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் இதர பாதுகாப்பு முயற்சிகளை எடுப்பது போன்ற நடவடிக்கைகள் பரவலையும், தொற்றலையும் ஓரளவு குறைத்திருந்தாலும், வீடுகளிலும், தொடர்மாடிக் கட்டிடங்களிலும் தனி அறைகளுக்குள் இருப்பவர்கள் இப்பாதுகாப்புக்களை அணிவதில்லை. ஆனால் அவர்கள் வீட்டிலோ அல்லது கட்டிடம் முழுவதிலுமோ சுழற்சி செய்யப்படும் காற்றையே சுவாசிக்க நேரிடுகிறது. ஒரு அறையில் இருக்கும் நோய்த் தொற்றுடையவர் இருமும்போது புறப்படும் கிருமிகள் சுழற்சி செய்யப்படும் காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு இதர அறைகளில் இருப்பவர்களையும் தொற்றிக்கொள்கின்றன. வணிக, அலுவலக கட்டிடங்களிலும் இதே நிலை தான்.

கொறோணா தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து, உலக சுகாதார நிறுவனம் இதுவரை இரண்டு தடவைகள் தமது நோய்த்தடுப்பு வழிகாட்டல்களை மாற்றியிருக்கிறது. ஆரம்பத்தில், நோய்க் கிருமி ஒருவருக்கொருவர் தொடுகின்ற போது மட்டுமே பரவுகிறது எனக் கருதப்பட்டது. பின்னர் அது மூன்றடி (1 மீட்டர்) தூரத்துக்குக் காற்றில் காவப்படுமென மாற்றப்பட்டது.

காற்றில் நோய்க்கிருமிகள் பரவுகின்றன என்ற கருத்து விஞ்ஞானிகளிடையே நீண்டகாலமாக நிலவி வந்தாலும், ஆலோசனை வழங்குபவர்களில் பொறியியலளர்களோ, விஞ்ஞானிகளோ, சுகாதார நிபுணர்களோ அல்லது சூழலியலளர்களோ இல்லாதபடியால் அரசாங்கங்க கொள்கை வகுப்பாளர்களால் இதன் தாற்பரியத்தைப் புரிந்துகொள்ள முடிவதில்லை என்கிறார் இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜூலியன் ராங்.