Spread the love

புயல் கிளப்பும் 11 நிமிட காணொளி 1மில்லியன் காட்சிகளைத் தாண்டுகிறது

கொலிவூட் சுப்பர்ஸ்டார் நடிகர்களையெல்லாம் ஒன்றாக ஒரே திரையில் காணும் அரிய சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறார் மதுரையைச் சேர்ந்த 24 வயதுடைய, கதிர் குமரன். சுயமாகக் கற்ற தன் இயங்குபட (animation) அறிவைக் கொண்டு அவர் தயாரித்த 11 நிமிட காணொளி யூ டியூப்பில் 1 மில்லியன் காட்சிகளையும் தாண்டிவிட்டது.

கதிர் குமரன்
கதிர் குமரன்

படத்தில் எதிரியாக நடிப்பது கோவிட்-19. தளபதி விஜய் தன்னந்தனியனாக கோவிட்டை அழிக்க முற்படும்போது நிலைமை மோசமடையவே இதர நட்சத்திர நணபர்களை அழைப்பதுவே கதையின் மையம்.

ரஜினிகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி மற்றும் தனுஷ் தளபதி விஜய்க்கு backup தருவதாகக் கதை போகிறது. படத்தின் இறுதியில் போடப்படும் சுழிப்புடன் பார்வையாளர்களிடம் ‘இன்னும் வேண்டும்’ மனநிலையைத் தோற்றுவிப்பதன் மூலம் குமரன் ஒரு சிறந்த animator மட்டுமல்ல சிறந்த கதையாளர், இயக்குனர் என்ற விருதுதுகளையும் தட்டிக்கொண்டு போகிறார்.

எதிர்பாராத வெற்றியைக் கண்டு புளகாங்கிதமடையும் குமரன், தனது படைப்பின் பிரபலத்தை செய்தி ஊடகங்களின் மூலமாகவே அறிய முடிந்தது என்கிறார். கடந்த சில மாதங்களாக கோவிட்-19 இனால் மக்கள் படும் இன்னல்களைக் கண்ட போது தனக்கு இந்த யோசனை வந்ததாகவும், மே மாதம் 13 ம் திகதி இந்த புரோஜெக்டை ஆரம்பித்து ஜூன் 5 இல் முடித்துவிட்டதாகவும் இந்தியன் எக்ஸ்பிரெஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் குமரன் குறிப்பிடுகிறார்.கல்லூரிக் காலங்களில் இருந்து சுயமாகக் கற்ற அனிமேஷன் அறிவை வைத்துக்கொண்டு அவர் தயாரித்த சில அனிமேஷன் காணொளிகள் பற்றி நண்பர்கள் விதந்து பேசவே, அவர் தனது படைப்புகளை யூ டியூப் சானல் மூலம் 2016 இலிருந்து வெளியிட்டு வருவதாகக் கூறுகிறார்.

நடிகர் தனுஷின் ‘மாரி’ படம் வெளிவந்து ஒரு வருடத்தின் பின் GTA (Grand Theft Auto, an online video game concept) கருத்தை முன்வைத்து அவரது முதல் காணொளி வெளியாகியது. அதில் முன்னணி பாத்திரத்தைத் தனுஷின் பாத்திரமாக மாற்றியிருந்தார். அக்காணொளியின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடசத்திரங்களையும் வைத்து உருவாக்கிய வேறு பல காணொளிகளையும் குமரன் வெளிட்டிருக்கிறார்.

மாரி
GAP கருத்தில் மாரி

இதுவரை 150 க்கு மேற்பட்ட காணொளிகளை வெளியிட்டுள்ள குமரனது யூ டியூப் சானலுக்கு 300,000 சந்தாதாரர்கள் உள்ளார்கள். திரை நட்சத்திரங்களையும், video games ஐயும் இணைத்துத் செய்யும் படைப்புகள் என்பதால் அவரது படைப்புகளுக்கு இளைய தலைமுறையினரிடம் மிகுந்த செல்வாக்கு ஏற்பட்டு வருகின்றது.

தற்போது, GTA யை மட்டும் பின்பற்றாது, IPL கிரிக்கெட், WWE மல்யுத்தம் போன்ற பொழுதுபோக்கு அமசங்களிலும் அதே வேளை இதர மாநில நட்சத்திரப் பிரபலங்களையும் கொண்டு காணொளிகளை உருவாக்கி வருவதாகக் கூறுகிறார் குமரன்.கோவிட்-19 காணொளி பெற்ற பிரபலத்தைத் தொடர்ந்து, பல திரைப்பட இயக்குனர்களிடமிருந்து புகழ்ச்சிகளும், அவர்களது திரைப்படங்களில் பணிபுரிவதற்கான அழைப்புகளும் வருவதாகக் கூறுகிறார் குமரன். இப்போதைக்கு சிறிய விளம்பரங்கள் செய்வதன்மூலமும், சிறிய பட்ஜட் படங்களில் பணிபுரிவதன் மூலமும் சிறு தொகையை ஈட்டுவதாகத் தெரிவிக்கிறார்.

தற்போது அவர் பணிபுரிந்துகொண்டிருக்கும் பொறோஜெக்ட்? வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு (locusts invasion) பற்றியது.

டிஸ்னி ஸ்ரூடியோஸ் குமரனைப் பறித்துக்கொள்ளுமுன் அவரைத் தமிழ்த் திரை பாவித்துக்கொள்ள வேண்டும்.

Print Friendly, PDF & Email