• Post category:WORLD
  • Post published:June 21, 2020
Spread the love

ஓக்லஹோமா, அமெரிக்கா, ஜூன் 20, 2020: இது நகைச்சுவையல்ல, உண்மை. சனியன்று, ருஸ்லா, ஓக்லஹோமாவில் 2020 ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தை ஜனாதிபதி ட்றம்ப் ஆரம்பித்து வைத்துப் பேசியபோது மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று அதிகரித்துக்கொண்டு போவது தெரிந்ததே. இது அவரது நிர்வாகத்தின்மீது பலவிதமான விமர்சனங்களையும் கொண்டுவந்துகொண்டிருக்கிறது. இதுவரை அவர் தனது ஆட்சியின் சாதனைகள் என்று பீற்றித் திரிந்த பொருளாதார முன்னேற்றம், வேலையின்மைக் குறைப்பு போன்றவை அவரைக் கைவிட்டுச் செல்ல, இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வரும் அவரது கனவு கைகூடாமற் போய்விடுமோ என்ற அச்சம் அவரைப் பீடித்திருப்பது தெரிகிறது.

சனியன்று நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் திரளவில்லையாயினும் வந்தவர்கள் அலவுகடந்த ஆரவாரத்தோடு குரல்களையெழுப்பி அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இதனால் அளவில்லா மகிழ்ச்சியடைந்த ட்றம்ப் பதிலுக்கு அவர்களை மகிழ்விக்கத் தனது வழக்கமான பாணியில் ஆரம்பித்தார்.



“நமது நாட்டில் இவ்வளவு கோவிட்-19 தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்குக் காரணம் நாம் அளவுக்கதிகமாகப் அரிசோதனைகளைச் செய்வது தான். இதுவரை 25 மில்லியன் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அலவுக்குப் பரிசோதனைகளைச் செய்தால் நீங்கள் அதிகம் நோயாளிகளைக் காணத்தான் போகிறீர்கள். எனவே நான் எனது குழுவிற்கு கூறினேன் ‘தயவு செய்து பரிசோதனை செய்வதைக் குறையுங்கள்’ என்று”

மீண்டும் ஆரவாரமும் கரவொலியும் வானைப் பிளந்தது. மக்களாதரவு அவருக்கு இப்போதும் இருக்கிறது.

அவர் தொடர்ந்தார். “பரிசோதனை என்பது இரட்டைக் கூர்க் கத்தியைப் போன்றது. அதனால் அதிக தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன” என மேலும் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் நிலைமைகளைச் சமாளிக்க, “ட்றம்ப் அதை ஒரு நகைச்சுவையாகவே கூறினார்” என்று பொழிப்புரை தந்தார்.

“பரிசோதனை விடயங்களில், நாங்கள் உலகத்திலேயே முதலாமிடத்தில் இருக்கிறோம். 25 மில்லியனுக்கும் மேலாக” என்றார் அந்த அதிகாரி.

அவரது முதலாவது கூட்டத்தில் 10,000 த்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டார்கள்.

Print Friendly, PDF & Email