இந்தியா, வியட்நாம், தாய்வான் மற்றும் பிராந்திய நாடுகளுடன் இராணுவக் கூட்டு. 18 அம்சத் திட்டம் தயார்
கோவிட்-19 தொற்றுப் பரவலின்போது சீனா பல விடயங்களை மறைத்துச் செயற்பட்டதாலேயே அமெரிக்கா உடபடப் பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டன. அதற்கு சீனா தான் பொறுப்பு. சீனா, பொய், ஏமாற்று, மூடி மறைப்பு போன்ற கபட நடவடிக்கைகளால்தான் கோவிட்-19 உலகக் கொள்ளைநோயாகப் பரிணமிக்கவேண்டி வந்தது என, அமெரிக்க செனட்டர் ஒருவர் தெரிவித்தூள்ளார்.
சீனாவுடனான உறவுகளை முறித்துக்கொள்வதுடன் அடுத்து அமெரிக்கா எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்த 18-அம்சத் திட்டமொன்று தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக, சீனாவில் தமது உற்பத்திகளைச் செய்துவரும் அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியா, வியட்நாம், தாய்வான் போன்ற நாடுகளுக்கு நகர்த்திக்கொள்ளும் திட்டம் உள்ளடங்கிய 18-அம்சத் திட்டத்தை செனட்டர் தொம் ரில்லிஸ் நேற்று (வியாழன் 14) வெளியிட்டுள்ளார்.
“கோவிட்-19 அமெரிக்காவிற்கும், உலகுக்கும் அழைப்பு மணியொன்றை ஒலித்திருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம், பொதுச் சுகாதாரம், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் அதே வேளை, பொய்களைக்கூறி உலகத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததற்காக சீனாவைப் பொறுப்பேற்கச் செய்யவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதில் உள்ள இன்னுமொரு அம்சம், பசிபிக் பிராந்திய இராணுவ பாதுகாப்பு விஸ்தரிப்பு. இதற்கான உடனடித் தேவைக்காக US$20 பில்லியனை அமெரிக்க இராணுவம் பெறவிருக்கிறது. அத்தோடு, பிராந்திய நாடுகளான இந்தியா, தாய்வான், வியட்நாம் போன்ற நாடுகளுடன் இராணுவ உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபாட உற்பத்தியை அதிகரிக்க யப்பானுக்கு ஊக்கமளிக்கும் அதே வேளை, யப்பான், ஹென் கொரியா ஆகுய நாடுகளுக்கு அதிக இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்வதும் இத் திட்டங்களில் ஒன்றாகும்.
“சீனாவிலிருக்கும் அமெரிக்க உற்பத்தித் தளங்களை உடனடியாக அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதன் மூலம், பொருள் வழங்களுக்கு சீனாவை நம்பியிருப்பதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இதற்காக அமெரிக்க நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட்-19 இனால் அடைந்த பாதிப்பிற்கான நட்ட ஈடு கோருதலும், வைரஸ் பாறிப் பொய் கூறியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை விதிப்பது, அமெரிக்காவினுள் இயங்கும் சீனாவின் பிரச்சார ஊடகங்களைத் தடை செய்வது ஆகியன இத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு அபிவிருத்தி என்ற பெயரில் கடன்களை அள்ளி வழங்கி அந்நாடுகளை அபகரிக்கும் சீனாவின் திட்டங்களை வெளிப்படுத்தி அதற்கு மாற்று வழிகளைத் தருவதற்குத் தயாராக இருப்பது, நாடுகள் தொற்று நோய்களை எப்படிக் கையாளுகின்றன என்பதை அவதானிக்க ஒரு அமைப்பை உருவாக்குதல் போன்ற திட்டங்களும் இதில் உள்ளடங்கும்.
அமெரிக்கா ஆரம்பிக்கவிருக்கும் கோவிட்-19 பரவல் தொடர்பான விசாரணைகளுக்கு சீனா முழு ஒத்துழைப்பும் வழங்காவிடில், ‘Covid -19 Accountability Act’ எனப்படும் சட்டம் அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பாவித்து சீனா மீதான பொருளாதாரத் தடையை அவர் விதிக்க வழியுண்டு.