Health

கோவிட்-19 | ஊரடங்கின்போது அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்

Dr. ராஜம் தெய்வேந்திரன், MD

உளவைத்திய நிபுணர்

பேரழிவுகளும், இடர்களும் மானிடத்துக்குப் புதியவையல்ல. ஆனால் விண்ணையே கைக்குள் கொண்டு வந்துள்ள இந்தத் தகவற் பெருயுகத்தில் எம்மைத் தூக்கத்தில் தாக்கியிருக்கிறது இக் கொள்ளை நோய்.

நோய்க்கான சிகிச்சை பற்றியதோ அல்லது தடுப்பு பற்றியதோ அல்ல இக் கட்டுரை. மாறாக இப் பேரிடர் சமூகத்தில், குடும்பங்களில் சுமத்தியிருக்கும் பெருஞ்சுமையின் வலிக்கான வழிமுறைகள் பற்றியது.

செய்திகளும், புள்ளி விபரங்களும் இப்படிச் சொல்கின்றன.

உளநல நிபுணர்கள் ஒலிக்கும் அபாயச் சங்கு

கோவிட்-19 இனை அடுத்து வரவிருக்கும் கொள்ளை நோய் (pandemic), மக்களின் உள நலம் சார்ந்ததாக இருக்கப்போகிறது என எச்சரிக்கிறார்கள், உலக உளநல நிபுணர்கள்.

சமூக விலக்கு (social distancing), வீடுகளில் இருக்கும்படியான கட்டளைகள் (stay-at-home orders) ஆகியன நோய்ப் பரவலை ஓரளவு குறைத்திருந்தாலும், மனப்பதட்டம் (anxiety), மன அழுத்தம் (depression), பேரிடருக்குப் பின்னான மன உளைச்சல் (post traumatic stress disorder), போதைவஸ்துப் பயன்பாடு (substance use), குடும்ப வன்முறை (domestic violence), குழந்தைகள் துஷ்பிரயோகம் (child abuse), தனிமை (loneliness) ஆகிய உளவியல் சார்ந்த பிரச்சினைகளின் பூதாகாரமான வளர்ச்சி, இந்த இரண்டாம் ‘கொள்ளை நோய்’ க்குக் காரணமாகலாம் என்ற அச்சம் கருக்கொண்டு வருகிறது.

ஊரடங்கல் உத்தரவின் விளைவாக மனப் பதட்டம், மன அழுத்தம், மது, போதை வஸ்து துஷ்பிரயோகம் போன்றவை அதிகரித்திருக்கிறது என்பது எம்மில் பலருக்கும் தெரியுமாகிலும், குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான வன்முறையும் பற்றிய தகவல்கள் பலரையும் எட்டியிருக்க நியாயமில்லை.

குடும்ப வன்முறை, துஷ்பிரயோகம் சார்ந்த சம்பவங்களின் அதிகரிப்பு உலகம் பூராவும் நடைபெற்று வருகின்றது. சீனாவின் ஹூபே மாகாணம் தொடங்கி, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், நியூ யோர்க் என ஒன்றையும் அது விட்டுவைக்கவில்லை.

ஹூபெ மாகாணத்தின் சிறுநகர் ஒன்றில் ஊரடங்கின்போது குடும்ப வன்முறை தொடர்பாக காவற்துறையிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் குடும்ப வன்முறை அற நிலையமான ‘றிஃப்யூஜ்’ (Refuge) இற்குக் கிடைத்த தகவல்களின்படி, ஊரடங்கு காலத்தில் உதவி கேட்டு அதற்கு வந்த தொலைபேசி அழைப்புகள் 700% த்தால் அதிகரித்திருக்கிறது. ஸ்பெயினில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக 17 பெண்கள் குடும்ப வன்முறைக்குப் பலியாகியுள்ளார்கள்.

ஊரடங்கின்போது பெண்கள் மீதான வன்முறை
ஊரடங்கின்போது பாதிக்கப்படுவது அதிகம் பெண்களே

கரீனா ஸ்பெயினில் ஊரடங்கின் போது கணவனாற் கொல்லப்பட்ட 17வது பெண்

பி.பி.சி. யின் செய்திகளின்படி, கரீனா என்பவள் ஊரடங்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, ஸ்பெயினில் கொல்லப்பட்ட 17வது பெண். இரண்டு குழந்தைகளின் முன்னால் அவளது கணவனால் கொல்லப்பட்டிருக்கிறாள். அவள் வாழ்ந்த நகரமான அல்மசாரா அவளது இறப்பை நினைவுகூர்வதற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட்டிருந்தது. எதைச் செய்தாலும் இறந்த கரீனாவை எவராலும் மீளக் கொண்டுவந்துவிட முடியாது. ஊரைக் காப்பாற்றப்போய் ஒருத்தியைப் பூட்டிவைத்துப் பலிகொடுத்ததற்கு சமூகமும் தான் பதில் சொல்ல வேண்டும்.

இத்தாலியிலும் இதே நிலைமை தான். பெருங்கனவுகளுடன் வளர்ந்துவரும் ஒரு இளம் மருத்துவப் பெண் அவளது தோழனால் கொல்லப்பட்டிருக்கிறாள். அவளது உடல், பிறந்த நகரான சிசிலிக்குக் கொண்டு செல்லப்படும்போது தெருவரங்கிலுள்ள மாடிகளின் உப்பரிகைகளில் வெள்ளைச் சேலைகளைத் தொங்கவிட்டு அவ்வூர் மக்கள் தமது இரங்கலைத் தெரித்திருந்தார்கள். எஞ்சிய தன் வாழ்நாளில் தூய்மையான வெண்ணாடைகளில் கடமையில் வலம் வர விரும்பிய அவளது தூய ஆன்மாவைப் பிரதிபலிக்கவென அப்படிச் செய்ததாக மக்கள் தெரிவித்தார்களாம்.

கொடுமைகள் எண்ணற்றவை.

பாதிக்கப்படுபவர்களில் 76 % மானோர் பெண்கள்

குடும்ப வன்முறை என்பது வாழ்க்கைத் துணைகளில் ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்த முயலும் நடத்தை முறை. துஷ்பிரயோகம் என்பது உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ அல்லது சூழல் சார்ந்ததாகவோ இருக்கலாம். பாதிக்கப்படுபவர் பால், வயது, இனம், கல்வி,சமூக பொருளாதார அந்தஸ்து ஆகிய எதனாலும் வேறுபட்டவராக இருக்கலாம். குடும்ப வன்முறை ஆண்களையும் பெண்களையும் பாதிக்கிறது எனினும், 76% மான தருணங்களில் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 15 குழந்தைகளுக்கு ஒன்று என்ற ரீதியில் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் குடும்ப வன்முறையைப் பார்த்து வளர்கிறார்கள்.

விடுமுறை நாட்களிலும், குடும்பங்கள் ஒன்றாக இருக்கும்போது, வன்முறை அதிகரிக்கிறதென அறியப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் வன்முறை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. மன அழுத்தம் அதிகமுள்ளவர்கள், நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும்போது விரைவில் சீற்றத்துக்குள்ளாகி பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ எவருமில்லை, தமக்குத் தண்டனை கிடைக்காது என்ற துணிவில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவின்போது வன்முறை அதிகரிப்பதற்கு, பொருளாதராம், வருமான இழப்பு, அழுத்தங்களைத் தீர்ப்பதற்கான வடிகால்கள் இல்லாமை, வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமை, போதை வஸ்துக்களின் பிரயோகம், ஏற்கெனவே தொடர்ந்துவரும் பிரச்சினைகள், பிள்ளைகள் தொடர்ந்தும் வீட்டுகுள் இருப்பது ஆகிய பல காரணங்களுள்ளன.

வருமானக் குறைவும் ஒரு காரணம்

ஊரடங்கு உத்தரவு குடும்ப வன்முறைக்கான சந்தர்ப்பங்களை அதிகரித்துள்ள அதே வேளை, குடும்ப வருமானத்தைக் குறைத்திருப்பதன் மூலம், தேவையான உதவிகளைப் பெறுவதில் சிரமங்களையும் கொண்டு வந்திருக்கிறது. நேற்று (ஏப்ரல் 17, 2020) நியூ யோர்க் டைம்ஸ் செய்தி இப்படித் தலைப்பிடப்பட்டிருக்கிறது: ” குழப்பம் தரும் அமைதி: வன்முறைகள் மற்றிய முறைப்பாடுகள் குறைவடைந்திருப்பதற்குக் காரணம், பாதிக்கப்பட்டவர்கள, ஊரடங்கின் காரணமாக உதவிகளைப் பெற முடியாமலுள்ளமையே” (“Troubling Silence- A decline in reports of violence may reflect the victim’s inability to seek help during the shutdown”)

பொதுவாக, பாதிக்கப்பட்ட பெண்கள், தமது பணிமனை, சகபாடிகள், நண்பர்கள் ஆகியவர்கள் மூலம் உதவிகளைப் பெறுவது வழக்கம். பாடசாலைகள் மூடப்படுவதன் மூலம், ஏற்கெனவே பிரச்சினைகள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் உதவிகளைப் பெறுவதற்கான பாதைகள் தடுக்கப்படுகின்றன.

தமது வாழ்க்கைத் துணைக்கு அஞ்சி, உதவியைக் கோருவதற்கு தொலைபேசியழைப்புகளை மேற்கொள்ளவும் பெண்கள் அச்சப்படுகிறார்கள். மிக அற்ப சொற்பமான வருமானம் போதாமையால் பல பெண்கள் தமது கைத் தொலைபேசிக் கணக்குகளைத் துண்டித்துக் கொண்டவர்களும் ஏராளம்.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலுள்ளபோது எப்படியான உதவிகளைப் பெறமுடியுமென்ற தெளிவின்மையாலும் பல பெண்கள் உதவிகளைக் கோருவதற்கு முன்வருவதில்லை.

பல சிகிச்சையாளர்களும், மருத்துவ ஆலோசகர்களும் தொலைப்பணி (remote working / work at home) நடைமுறைகளைத் தேர்வுசெய்துவிடுவதாலும், ஆதரவு அமைப்புக்கள் குறைவாகவே செயற்படுவதனாலும், சட்ட ஆலோசனைகள், நீதிமன்ற உதவிகள் கிடையாமையாலும் பல பெண்கள் தமது இடர்களைக் கழைவதற்கான பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதாகக் கருதுகிறார்கள்.கோவிட் அச்சத்தால் இடர்த்தங்கல் முகாம்களுக்குப் போக அச்சம்

பெண்களுக்கான இடர்த் தங்கல் முகாம்களுக்கு வரும் தொலைபேசியழைப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், அங்கு நோய்த் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பல பெண்கள் வன்முறையை ஏற்றுக்கொண்டு, வீடுகளில் தங்கி விடுவதுமுண்டு.

இதற்கு என்ன செய்யலாம்? அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையின் (Journal of the American Medical Association – JAMA) ஏப்ரல் 10இல் வெளிவந்த இதழில் வந்த ” கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் தேக விலக்கலினால் ஏற்படும் உளவளத் தாக்கங்கள்” (The mental health consequences of Covid-19 and Physical Distancing) என்ற கட்டுரையில், “குடும்ப வன்முறை, குழந்தைகள் துஷ்பிரயோகம் போன்ற விடயங்களில் கண்காணிப்பு, பதிவு, தலையீடு போன்றவற்றுக்கான உரிய பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்படும் விடயங்கள்

பாதிக்கப்பட்டவர்கள் உதவிகளைப் பெறுவதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான தொலைபேசி இலக்கங்களும், வளங்களும் இலகுவில் எட்டக்கூடிய வசதிகள் செய்யப்பட வேண்டும். பயத்தின் காரணமாக அவர்களால் தொலைபேசிகளைப் பாவிக்க முடியாத தருணங்களில் குறுஞ் செய்திகள் மூலம் விடயப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதிகள் அவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட வேண்டும். சில நாடுகளில் ‘இரகசியத் தீர்வு வசதிகள்’ (Silent Solution System) எனப்படும் முறையொன்றுண்டு. இதன் மூலம், ஒருவர் ஆபத்திலுள்ளபோது அவசரகால இலக்கமொன்றை அழைக்க முடியும். அப்போது அவரால் வாய் மூலம் முறைப்பாடு எதையும் செய்யமுடியாத பட்சத்தில் இன்னுமொரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம், உரிய அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டு, உடனடியான உதவி அந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற நடைமுறை வழக்கிலுண்டு.

மஸ்கறில்லா-19

ஸ்பெயின் நாட்டிலுள்ள கனாரித் தீவில் (Canary Island), ‘சமத்துவத்துக்கான நிலையம்’ ஒரு புதிய நடைமுறையொன்றை மேற்கொண்டு வருகின்றார்கள். ‘மஸ்கறில்லா-19’ (Mascarilla-19 / Mask19) என்ற இம் முறையின்போது, பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருந்தகமொன்றிற்கு அழைத்து ‘மாஸ்க்-19’ வேண்டுமென்று கேட்க வேண்டும். அங்குள்ள மருந்தாளர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ‘ஆபத்திலிருக்கும் பெண்’ பற்றிய தகவலைப் பரிமாறிவிடுவார். தற்போது இன் நடைமுறை ஸ்பெயின் முழுவதிலும், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, ஆர்ஜன்ரீனா ஆகிய நாடுகளால் பின்பற்றப்படுகிறது.

அரசாங்கங்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போதியளவு இலவச இடர் முகாம்களை உருவாக்கிக் கொடுப்பதோடு அப் பெண்களுக்கு நிதி உதவிகளையும் செய்ய வேண்டும்.

வன்முறையாளர்களிலிருந்து பெண்களைக் காப்பதற்கு சட்ட ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்களை அணுகுவதற்கு உகந்த இலகுவான வழிமுறைகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். தற்போதய சூழலில், வன்முறையாளரிடமிருந்து உரிய பாதுகாப்பைப் பெறுவது, பெண்களுக்கான கட்டாய சேவைகளில் ஒன்று என்பது பலருக்குத் தெரியாது.

ஊரடங்கு உத்தரவு அகற்றப்பட்டதும், குடும்ப வன்முறைகள் பற்றிய முறைப்பாடுகள் பாரதூரமாக அதிகரிக்குமெனப் பலர் நம்புகிறார்கள். இன் நிலைமையில், இம் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட வேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட ஆலோசனைகளும் உதவிகளும் இலகுவாகக் கிடைக்க ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்.தொலை உளச்சிகிச்சை (Tele Psychiatry)

பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவள ஆலோசனைகளை மற்றும் சிகிச்சை வசதிகள் இலகுவாகக் கிடைப்பதற்கு, உதாரணமாக, தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கல், தொலைதூர உளச்சிகிச்சை (tele psychiatry) ஆகியன, வசதிகள் செய்யப்பட வேண்டும்.

பிரித்தானியாவில், வன்முறையாளருக்கு உதவிகளை வழங்கும் வகையில் தொலைபேசி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டபோது, அதற்கு வந்த அழைப்புகள் 25% த்தால் அதிகரித்திருந்தது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வன்முறையாளர்களும் கூடத் தங்களது நடத்தைகளை மாற்றிக்கொள்வதற்கு உதவிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுவே. கோபம், போதை வஸ்து துஷ்பிரயோகம், இதர உணர்வுநிலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குடும்ப வன்முறைக்குக் பின்னணிகளாகவுள்ளன.

குடும்ப வன்முறையென்பது, பாதிக்கப்படுபவர்களது பிரச்சினை மட்டுமல்ல. அது குழந்தைகளின் நடத்தை உருவாக்கத்தில் பெரிய பங்கையும் வகிக்கிறது. அது மிக நீண்டகால, தலைமுறை தலைமுறைகளாத் தொடரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சில நாடுகளில் இது, ஏனைய நாடுகளைவிட அதிகமாகவிருக்கிறது என்பது துயரம் தரும் விடயம்.

எம்மிடையேயுள்ள துர்ப்பாக்கியமான சமுதாயத்தின் மீதான கரிசனை எம்மக்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதும், பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு இருக்கக்கூடிய வளங்கள் பற்றி அறியத்தருவதும், ஊடகங்களின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று.

“இக் கொள்ளைநோய்த் தடுப்புக்காகப் பணியாற்றும் அதே வேளை, பெண்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்த வேண்டும்” – அண்டோனியோ கட்டெரெஸ், ஐ.நா. செயலாளர் நாயகம். (மறுமொழி)