Health

கோவிட்-19 | இளையோருக்கு எச்சரிக்கை! – அறிகுறிகள் எதுவுமில்லாது தாக்குகிறது


தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கோவிட் தொடர்பான பக்கவாத நோயாளிகளில் 45% மானோர் உயிர் பிழைப்பதில்லை

ஆய்வு, ‘நியூரோலொஜி’ சஞ்சிகை

நீங்கள் 50 வயதுக்குக் குறைந்தவரா? “எனக்கு இருமல் இல்லை அதனால் கொறோணாவைரஸ் தொற்று எனக்கில்லை” என்று அசமந்தமாக இருந்துவிட வேண்டாம். சிலரில் முதலாவது அறிகுறியே பக்க வாதம் (stroke). இவர்களில் சுமார் 60% மானோர் உயிர் பிழைப்பதில்லை.

‘நியூரோலொஜி’ என்னும் விஞ்ஞான சஞ்சிகையில் வெளிவந்திருக்கும் சமீபத்திய கட்டுரை ஒன்றின்படி, கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட 160 பக்கவாத நோயாளிகளில் 29 பேர் 50 வயதுக்கும் குறைந்தவர்கள்.

இவர்களில் 45% மானோர் வேறெந்த நோய்களோ அல்லது வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளோ அற்றவர்கள்; 50% மானோருக்கு முதலாவது அறிகுறியே பக்கவாதம் தான்.

“கோவிட்-19 தொற்றுக் கண்ட 50% மானோர் முற்று முழுதான சுக தேகிகள், இளையவர்கள். ஆனால் அவர்களுக்கு திடீரென பக்கவாதம் வந்திருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமானது” என்கிறார் வெஸ்டேர்ண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லூசியானோ ஸ்பொசாட்டோ.

“இப்பொழுதெல்லாம் ஒரு பக்கவாத நோயாளியைப் பார்ப்பதானால் அவருக்கு கோவிட்-19 இருக்கிறதா என்பதையே நாங்கள் முதலில் பார்க்கவேண்டி இருக்கிறது. அவர்களுக்கு வழமையான கோவிட் அறிகுறிகள் இல்லாதபோதும் முதலில் அவருக்கு கோவிட் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. காரணம் அவர்கள் பிழைப்பதற்கான சாத்தியம் குறைவு” என்கிறார் டாக்டர் ஸ்பொசாட்டோ.

‘நியூரோலொஜி’ சஞ்சிகையின் ஆய்வின்படி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கோவிட் தொடர்பான பக்கவாத நோயாளிகளில் 45% மானோர் உயிர் பிழைப்பதில்லை. ஒப்பீட்டளவில், சாதாரண பக்கவாத நோயாளிகளில் 15-30% உயிர் பிழைப்பதில்லை.

உடற் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வியாதிகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருந்து அவர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்றினால் அவர்கள் மிகவும் ‘ஆபத்தான’ குழுவிற்குள் அடங்குவர். இப்படியானவர்களுக்கு பக்கவாதம் வந்தால் 59% வீதமானோர் பிழைப்பது அரிது.



கோவிட்-19 இற்குக் காரணமான SARS-CoV-2 மிகவும் வேறுபட்ட ஒரு வைரஸ். இவை இரத்தக் குழாய்களின் சுவர்களினூடு உள்ளே புகுந்து அழற்சியை (inflammation) ஏற்படுத்துவதால் உடல் அந்த இடங்களில் இரத்தக் கசிவு ஏற்படாமல் செப்பனிடுவதற்காக இரத்தத்தைக் கட்டியாக்கி விடுகிறது. இது ஏற்படுத்தும் அடைப்பினால் பக்க வாதம் ஏற்படுகிறது. இவ்வழற்சி / அடைப்பு இருதயத்திலோ, சுவாசப் பையிலோ, கால்களிலோ ஏற்படுமானால் அது ஆபத்தாக வந்து முடிகிறது என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இப்படியாக உருவாகும் இரத்தக் கட்டிகள் இரத்தோட்டத்தினால் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுவதனால் மூளையின் சில பகுதிகள் செயலிழக்கின்றன. கோவிட் -19 நோயாளிகளில் இக் கட்டிகளின் அளவு, சாதாரண பக்கவாத நோயாளிகளைவிடப் பெரிய அளவில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

“கோவிட்-19 நோயாளிகளில் சுவாசப்பைகளில் இரத்த உறைவினால் அடைப்பு ஏற்படுவதனால் பக்கவாதம் ஏற்படுவது, சாதாரண பக்கவாத நோயாளிகளைவிடப் 14% அதிகம்” என்கிறார் டாக்டர் ஸ்பொசாட்டோ.

திடீரென உணர்ச்சியை இழத்தல், மாறாட்டம், பேசுவதற்குச் சிரமப்படுதல், பார்வை தெளிவின்மை, நடப்பதற்குச் சிரமப்படுதல் போன்றன பக்கவாதத்துக்கான சில அறிகுறிகளாகும்.