கோவிட்-19 இலிருந்து விடுதலை எப்போது?

Spread the love

மார்ச் 19, 2020

“கொறோனாவைரஸ், ஏனைய இன்ஃபுளுவென்சா வைரஸ்களைப் போலவே பரவுகிறது – அதாவது காற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் சளித்துகள்களில் ஒட்டிக்கொண்டு மிதந்து செல்கிறது. ஆனால் அவை காலக்கிரமத்தில், சூழல் வெப்பநிலை, ஈரப்பதன் ஆகிய நிலைகளிற்கு ஏற்ப தமது கட்டமைப்பு உறுதியை இழந்துவிடுகின்றன. அவற்றின் உறுதிக்கேற்பவே அவற்றின் தொற்றும் இருக்கும்” என்கிறார் யூற்றா பல்கலைக்கழகத்தில் கோவிட்-19 வைரஸ்கள் பற்றி ஆராய்ந்துவரும் விஞ்ஞானி சவீஸ் சஃபாறியன்.

இதற்காக அவர் கோவிட்-19 வைரஸின் உடற் கோதுகளை ஆராய்கிறார். உடற்கட்டமைப்பு ரீதியாக அவை வித்தியாசமான வெப்பநிலை, ஈரப்பதன் மற்றும் இதர சூழல் மாற்றங்களுக்கு அவை எப்படித் தங்களை நிலைநிறுத்திக்கொள்கின்றன என்பதே அவரது ஆராய்ச்சி.

வழமையாக இன்ஃபுளுவென்சா வைரஸ்கள் குறிப்பிட்ட பருவகாலங்களில் (flu season) தாக்குவதுண்டு. கோவிட்-19 வைரஸும் இந்த வகையினதானால் வரும் கோடை காலத்தில் அதுவும் ஏனைய பருவகால வைரஸ்களைப் போல மறைந்துவிடும்.

இதுவரை அறியப்பட்ட வைரஸ்கள் எல்லாம் அநேகமாகத் தங்களைச் சுற்றி பாதுகாப்புப் போர்வையைக் கொண்டிருப்பது வழக்கம். இதுவும் அப்படித்தான். ஆனால் இதன் உட் கட்டமைப்பு (genetic sequence) இதற்கு முன்னர் வந்த சார்ஸ் வைரஸின் கணிசமான அளவு ஒத்திருந்தாலும் இது விங்ஞானிகளுக்குப் புதிய ஒன்று என்பதனால் அதன் வெளிப் போர்வை எவ்வளவு உறுதியானது என்பதை அறிந்தால் அதன் வாழ்காலத்தையும் ஊகித்துவிடலாம் என்பதே தற்போதைய ஆராய்ச்சியின் நோக்கம்.

இவ்வாராய்ச்சியில் சஃபாறியனுடன் மைக்கேல் வேர்ஷினின் என்னும் இன்னுமொரு விஞ்ஞானியும் இணைந்து பணியாற்றுகிறார். இதற்காக அவர்களுக்கு அமெரிக்க தேசிய விஞ்ஞான அமைப்பு $200,000 பணத்தைக் கொடுத்திருக்கிறது.

நோயாளியின் உடற் கலத்துக்குள் சென்றாலே தவிர இவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. ஆகையால் காற்றில் இருக்கும் ஒரு வைரஸ் தன்னுடைய வாழ்காலத்தில் இன்னுமொரு மனித உடலில் தொற்றிக்கொண்டாலே தவிர அதனால் தொடர்ந்தும் உயிர்வாழ முடியாது. எனவே அது வெளியில் இருக்குமட்டும் அது சூழற் காரணிகளால் பலமிழந்து போகிறது. சில வைரஸ்கள் மணித்தியாலக் கணக்கில் மட்டுமே உயிர் வாழும். கோவிட்-19 பற்றிய ஆராய்ச்சிகள் முழுமையடையும்வரை அதன் வாழ்காலத்தை எவராலும் உறுத்திப்படுத்த முடியாது என்கிறார்கள்.

கோவிட்-19 வைரஸின் வெளிக்கோதை (shell) மாதிரி எடுத்து (dummy) அதன் இயக்கம், தாங்கு திறன், ஸ்திரம் போன்ற பெளதீகத் தன்மைகளை இவ் விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள். “உடலின் உட்புறம் இல்லாமையால் நோய்த் தொற்று வருமென அஞ்சவேண்டியதில்லை” எனக் கூறுகிறார் வேர்ஷினின்.

இவ் வைரஸ்கள் மிகச்சிறிய (nano-sized) துணிக்கைகளாகையால் அவற்றைக் கையாள்வதற்கு ஒளிச் சாமணத்தை (optical tweezers – focused beams of light) பாவிக்கிறார்கள். இதன் மூலம் மூலக்கூறு அளவில் அவர்களால் ஆராய முடிகிறது.

Related:  சுவை, மணம் திடீர் இழப்பு | கோவிட்-19 வைரஸ் காரணமா?

வெவ்வேறு சூழல்களில் வைரஸ் எப்படி நகர்வுகளை மேற்கொள்கிறது என்பதோடு வெப்பமான கோடையில் வெளிப்புறச் சூழலிலும், குளிரூட்டப்பட்ட அறைகளிலும் அது எப்படி இயங்கிக்கொள்கிறது என்பதை அறிவதன் மூலம் சமூகமாக எடுக்கப்படும் தனிமைப்படுத்தல், நடமாட்டத் தடை ஆகியவற்றை எத்தனை நாட்களுக்கு அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது போன்ற விடயங்களைத் தீர்மானிப்பதற்கு உதவியாகவிருக்கும் என்பதே இவ்வாய்வுக்குக் காரணம் என இவ்விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

“இது ஒரு தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சியல்ல. இதர ஆராய்ச்சிகளுக்கு இது உதவலாமென்றாலும், முக்கியமாக கொள்கை வகுப்பாளர்களுக்கானதே இவ்வாராய்ச்சி” என்கிறார் வேர்ஷினின்.

Source: Live Science Image Credit: Getty Images

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>