Sri Lanka

கோவிட்-19 | இலங்கை ‘கறுப்புப் பட்டியலில்’ இல்லை ஆனால் ‘மறுப்புப் பட்டியலில்’ இருக்கிறது – ஐரோப்பிய ஒன்றியம்

கோவிட்-19 நோய்த் தொற்றுக் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளுக்குள் வெளியார் அவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 105 நாடுகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன.

இருப்பினும், ஒவ்வோர் நாடுகளின் கோவிட்-19 கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பரிசீலித்து அவை வெற்றியளிக்கும் பட்சத்தில் அந்நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை ஐ.ஒ. தளர்த்தியும் வருகிறது. இப்படியாகக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட 15 நாடுகளின் பட்டியலை ஒன்றியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில் இலங்கை சேர்க்கப்படாதது அதன் ஆட்சியாளருக்கு ஒரு வகையில் அவமானமாகப் போய்விட்டது.

கோவிட்-19 நோய்க் கட்டுப்பாட்டில் முதலாவதாக இருந்த நியூசீலந்தையும் இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிட்டுத் இலங்கை முதலிடத்தில் இருக்கிறது எனச் சமீபத்தில் இலங்கையின் ஆட்சியாளர் தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டிருந்தனர். அதே வேளை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் தமது பிரதானிகளின் மூலம் நித்திய புகழாரங்களைச் சூட்டி வந்தனர். அப்படியான முதல் நிலை நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இன்னமும் இருப்பது ஆட்சியாளருக்கு விசனத்தைத் தருவது எதிர்பார்க்கக் கூடியதே.இலங்கையின் இந்த அதிருப்தி ஏதோ ஒரு வகையில் ஒன்றிய பிரதானிகளுக்கு எட்டியிருக்க வேண்டும். அவர்கள் அவசரம் அவசரமாக அறிக்கை ஒன்றை விட்டிருக்கிறார்கள். “கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இல்லை என்பதற்காக, இலங்கை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை” என ஒன்றியம் அறிக்கை விட்டிருக்கிறது.

ஜனாதிபதி கோதாபயவின் வருகையோடு இலங்கை தன்னை ஒரு குட்டிச் சீனாவாகவே feel பண்ணிக்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட சீனாவின் நிகழ்ச்சி நிரலே இலங்கையினதும். இதனால் இலங்கையில், கோவிட்-19 கட்டுப்பாட்டு முயற்சிகளும், அவற்றை மேற்பார்வை செய்பவர்களும், அதன் பெறுபேறுகளைப் பரிசீலிப்பவர்களும் எல்லோருமே இராணுவமாக இருப்பது ஆச்சரியப்படும் விடயமல்ல. அதனால் சீனா இலங்கையைப் புகழ்வது தன்னையே புகழ்வது போலத்தான். அதற்காக சீனா பல கோடி ரூபாய்களை அள்ளி வழங்குகிறது. இப் பின்னணியில் இலங்கை கொடுக்கும் தரவுகளின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படுவது எதிர்பார்க்கப்பட வேண்டியது.

இலங்கையின் கோவிட்-19 நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது எனப் பறைசாற்றப்படவேண்டிய தேவை இலங்கை ஆட்சியாளருக்கு உண்டு. ஆகஸ்ட் 5 பாராளுமன்றத் தேர்தலில் மூன்றி இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்பதை மக்கள் நம்பி பெருந்தொகையாக சாவடிகளுக்கு செல்ல வேண்டும். தேர்தல் ஆணையத்தை நம்பி மக்கள் வாக்களிக்க வருவார்களா என்பது சந்தேகம்.

அதே வேளை, ஜனாதிபதி தேர்தலின்போது பெருந்தொகையான புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தினர் இலங்கை வந்திருந்ததாக ஒரு வதந்தி இருந்தது. சிலர் வாக்களிப்பதற்கும், சிலர் தேர்தல் பிரச்சாரங்களுக்காகவும் வந்திருக்கலாம். அது உண்மையானால், இந்தத் தடவையும் அவர்களது உதவி மஹிந்த தரப்புக்குத் தேவை. இலங்கையில் கோவிட் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது என்பதைக் காரணம் காட்டி சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் 1ம் திகதியே திறப்பதற்கும் இதுவே காரணமாகவிருக்கலாம்.எனவே இந்த மனநிலையில் இருக்கும் ஆட்சியாளருக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பு கடுப்புத் தருவதாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இலங்கையைப் பொறுத்தவரை, ராஜபக்ச தரப்பிடம் பலவிதமான ஆயுதங்கள் பாவனைக்குள்ளன. விமல் வீரவன்ச போன்ற cry babies முதல் ஞான்சார தேரர் போன்ற சண்டியர்கள் வரை பலவித ஆயுதங்கள் அவர்களிடமுண்டு. மஹிந்த ராஜபக்ச போன்ற இரட்டை நாக்குப் புரட்டுவார் இருக்கும்வரை அவர்களுக்கு எச் செய்தியும் நற்செய்திதான்.

– மாயமான்