HealthUS & Canada

கோவிட்-19 இற்கு சிகிச்சை மருந்து கனடாவில் கண்டுபிடிப்பு!


கொறோணாவைரஸ் தொற்றினால் உருவாகும் கோவிட்-19 நோய்க்குச் சிகிச்சை மருந்தாக கொல்ச்சிசீன் எனப்படும் மருந்து பலனளிக்கிறது எனக் கனடாவில் மொன்றியால் நகரில் இயங்கிவரும் மொன்றியால் இருதய நிலையத்தைச் (Montreal Heart Institute) சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.

வாய் மூலம் எடுக்கப்படும் இம் மாத்திரை ஏற்கெனவே வேறு வியாதிகளௌக்குச் சிகிச்சையளிக்கப் பாவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாய்வின் முதன்மை விஞ்ஞானியாக இருக்கும் டாக்டர் ஜான் – குளோட் ரார்டிஃப் இன் கருத்துப்படி, இக் கண்டுபிடிப்பு பெரியதொரு சாதனை எனவும், ஒரு கோவிட் நோயாளிக்கு மருத்துவமனைக்கு வெளியே வைத்து வழங்கப்படக்கூடிய முதலாவது சிகிச்சை எனவும் கூறப்படுகிறது.

“கியூபெக் மாகாணத்திலிருந்து இம் மருந்தை உலகுக்குத் தருவதற்காக நாம் மெருமகிழ்ச்சியடைகிறோம்” என அவர் தெரிவிக்கிறார்.

‘கொல்கொறோணா ஆய்வு’ என்ற பெயரில் செய்யப்பட்ட இவ்வாய்வில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட 4,159 நோயாளிகள் பங்குபற்றியிருந்தனர்.



இவர்களில் சொல்ச்சிசீன் மருந்தை எடுத்தவர்களில் 25% மானோர் மருத்துவமனைக்கே போகவேண்டி ஏற்படவில்லை எனவும், 50% மானோருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தவேண்டி ஏற்படவில்லை எனவும், 44% மானோர் மரணத்திலிருந்து தப்பியுள்ளார்கள் எனவும் அவ்வாய்வு தெரிவிக்கிறது.

இதுவரை கோவிட் நோயாளிகள் சிகிச்சைக்கென உட்கொள்ளக்கூடிய மாத்திரைகள் என்று எதுவும் இருக்கவில்லை. இம் மாத்திரைகளைச் சிபார்சு செய்வதன் மூலம் மருத்துவமனைகளில் நோயாளிகள் நெருக்கடிப்படுவதைத் தவிர்க்க முடிவதோடு, அரசாங்கத்தின் மருத்துவச் செலவுகளையும் குறைக்க முடியும் என்கிறார் டாக்டர் ரார்டிஃப்.

கோவிட் தொற்றின்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதீதமாகச் செயற்படுவதனால் ஏற்படும் அழற்சியே (inflammation) நோயாளிகளின் மரணத்திற்குக் காரணமாகிறது கொல்ச்சிசீன் மருந்து அதீத அழற்சி ஏற்படுவதைத் தடுக்கிறது என்கிறார் டாக்டர் ரார்டிஃப்.

‘கவுட்’ (gout) எனப்படும் பாதங்களில் ஏற்படும் வலியைக் குறைக்க கோல்ச்சிசீன் பல்லாண்டுகாலமாகப் பாவிக்கப்பட்டுவரும், மருந்தகங்களில் கிடைக்கும் ஒன்று. இதற்கான புதிய ஆரய்ச்சிகள் ஒன்றும் வேண்டியதில்லை. எந்தவொரு மருத்துவராலும் இதைப் பரிந்துரைக்க முடியும் எனக் கூறுகிறார் அவர்.



கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, தென்னமெரிக்கா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் செய்யப்பட்ட இந்த கொல்கொறோணா ஆய்வு உலகில் செய்யப்பட்ட பரந்துபட்ட ஆய்வுகளில் ஒன்று என கியூபெக் மாகாண முதல்வர் லெகோ தெரிவித்துள்ளார்.

மொன்றியால் இருதய நிலையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆய்வில், நுண்ணுயிரியலாளர் (microbiologists), தீவிர சிகிச்சைப்பிரிவு நிபுணர்கள் (intensive care specialists), புள்ளிவிபர வல்லுனர்கள் (statisticians), கணனியியலாளர் (computer scientists), தொற்றுநோயியல் நிபுணர்கள் (epidemiologists) ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.