Spread the love

சிக்காக்கோ பல்கலைக் கழகத்திலிருந்து ‘கடத்தப்பட்ட’ காணொளி கோவிட்-19 நோயாளிகளுக்கு நல்லதொரு செய்தியைக் கொண்டு வந்திருக்கிறது!

கோவிட்-19 தொற்றியிருந்த சில நோயாளிகளில் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து வெற்றியளித்திருக்கிறது. அம் மருந்தினால் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில், கிட்டத்தட்ட அனைவருமே, ஒரு வாரத்துக்குள் குணமடைந்திருக்கின்றனர் எனத் தெரிய வருகிறது.

இங்கு பாவிக்கப்பட்ட மருந்து ஒன்றும் சந்தைக்குப் புதியதல்ல. ஏற்கெனவே ஈபோலா மற்றும் மார்பேர்க் வைரஸ் நோய்களுக்குரிய சிகிச்சை மருந்தாகப் பாவிக்கப்பட்டு வந்தது. ‘கைலீட் சயன்செஸ்’ என்ற அமெரிக்க நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட இம் மருந்து பல்வேறு நாடுகளிலுமுள்ள ஆராய்ச்சியாளர்களால் கோவிட்-19 நோயாளின்மீது பரீட்சிக்கப்பட்டு வந்தது. தற்போது இதன் வெற்றி பற்றி சிக்காக்கோ பலகலைக்கழக விஞ்ஞானிகளிடமிருந்து ‘கடத்தப்பட்ட’ காணொளி பற்றி ‘தி நியூ டெய்லி’ என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 நோயைப் பரப்பும் SARS-CoV-2 என்ற வைரஸ் மனிதக் கலங்களுக்குள் தனது ‘உடலுள்’ இருக்கும் RNA சுருளைத் திணிப்பதன் மூலம் இஅன்ப்பெருக்கத்தைச் செய்கிறது என்பது விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த remdesivir என்ற மருந்து அந்த RNA சுருளை உடைப்பதன் மூலம் அவ்வைரஸைக் கொன்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. நோய்த்தொற்றுள்ளவர்கள் என அறியப்பட்டவர்கள் மீது பரீட்சார்த்தமாக இம் மருந்து பாவிக்கப்பட்டபோது இது அமோக வெற்றியைத் தந்துள்ளதாக இச் செய்தி தெரிவிக்கிறது.

சிக்காக்கோ பல்கலைக் கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், அதன் முதன்மை விஞ்ஞானியும், தொற்றுநோய் நிபுணருமான, டாக்டர் கத்லீன் முல்லேன் அவர்கள் கூறுகையில் ” நல்ல செய்தி என்னவென்றால், எங்களது நோயாளிகளில் பலரும் ஏற்கெனவே வீடுகளுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். இரண்டு நோயாளிகள் மட்டும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விட்டார்கள்” என அக் காணொளியில் தெரிவிக்கிறார்.

பரிசோதனையின் பெறுபேறுகள் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இவற்றிலிருந்து அவசரப்பட்டு தீர்மானங்களை எடுத்துவிடக் கூடாது என்பதிலும் டாக்டர் முல்லேன் அவதானமாக இருக்கிறார்.

புதிய மருந்துகள் பாவனைக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகள் (Randomized controlled trial: (RCT)) மேற்கொள்ளப்பட்டு பெறுபேறுகள் பல துறைசார் நிபுணர்களால் பரிசீலிக்கப்பட்டு அமெரிக்க மத்திய மருந்துகள் நிர்வாகம் ( FDA) அங்கீகாரம் பெற்ற பின்னரே நோயாளிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றன. இதற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை பிடிக்கும். ஆனால் இந்த மருந்தைப் பொறுத்த வரையில், இது ஏற்கெனவே வேறு ஒரு நோய்க்குச் சிகிச்சையளிக்கப் பாவிக்கப்பட்டு வந்த படியாலும் (off label) கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசரம் இருப்பதாலும் முற்று முழுதான சில பரிசோதனைகளைச் செய்யாமலேயே மனிதரில் அவற்றை நேரடியாக மேற்கொண்டு வருகிறார்கள். இப்படியான ஒரு பரிசோதனை placebo group tests என்று சொல்லப்படும் ஒன்று. அதாவது நோயாளிகளுக்கு மருந்தென்று சொல்லி வெறும் ‘இனிப்புத் திரவத்தைக்’ கொடுப்பது. டாக்டர் முல்லேன் செய்த பரிசோதனைகளில் அது செய்யப்படவில்லை என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார். ஆனாலும் இம் மருந்து நோயாளிகளில் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான பெறுபேறுகளைக் கொடுத்திருக்கிறது என்கிறார் டாக்டர் முல்லேன்.

Related:  குவைத் | 8 இலட்சம் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படலாம்

“எங்களைப் பொறுத்தவரை, கடும் காய்ச்சலுடன் வந்த நோயாளிகள், சிகிச்சை அளிக்கப்பட்டதும் அவர்களது வெப்பம் தணிந்ததும், சுவாசக் கருவிகள் (ventilators) பொருத்தப்பட்டவர்கள் ஒரு நாட் சிகிச்சைக்குப் பின்னர் கருவிகள் தேவையற்றுப் போனவர்களும் என்று பெறப்பட்ட தரவுகள் ஊக்கம் தருவதே பெரிய விடயம். மொத்தத்தில், பெரும்பாலான எங்கள் நோயாளிகள் குணமாகியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி” என்கிறார் டாக்டர் முல்லேன்.

அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனமான FDA, இம் மருந்தை (remdesivir) ஒரு அவசர தேவைக்காக, மனிதாபிமான ரீதியில், கடைசி முயற்சியாக, கோவிட்-19 நோயாளிகளில் பாவிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. இம் மருந்தின் தயாரிப்பாளரான கைலீட் சயன்செஸ் மனிதரின் மீதான பரிசோதனைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. இதற்காகச் சீனாவிலும், பிரான்சிலும் நோயாளிகள் தேர்வு நடைபெறுகிறது என அந் நிறுவனம் தெரிவிக்கிறது.

இச் செய்தியை முதலில் வெளிக் கொணர்ந்தது பொஸ்டன் குளோப் பின் சகோதர பத்திரிகையான STAT News. அது டாக்டர் முல்லேனின் குணமடைந்த நோயாளி ஒருவரை நேரடியாகத் தொடர்புகொண்டு அவர் குணமடைந்தது உண்மையென நிரூபித்துள்ளது.

Print Friendly, PDF & Email