Sri Lanka

கோவிட்-19 | அரசாங்கத்திடம் 8 கேள்விகள்

கோவிட்-19 நோய்த் தொற்றை அரசாங்கம் கையாண்டுவரும் விதம் பற்றிய பல கேள்விகளை தமிழ்க் குடிமைச் சமூகம் (Tamil Civil Society Forum) முன்வைத்திருப்பதாக கொழும்பிலிருந்து வரும் ஆங்கில ஊடகமான ‘கொலொம்பொ ரெலிகிராஃப்’ தனது இன்றய பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்க் குடிமைச் சமூகத்தின் சார்பில் அருட்தந்தை வீ. யோகேஸ்வரன், கலாநிதி கே.குருபரன் ஆகியோர் இக் கேள்விக் கொத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். அதன் சாராம்சம் கீழே:

கோவிட்-19 நோய்த்தொற்றை அரசாங்கம் கையாளும் விதம் பற்றிய 8 கேள்விகள்

  1. உலகம் பூராவும் அரசாங்கங்கள் விஞ்ஞானத்தின் வழிகாட்டலுடன், மக்கள் முடக்கத்திலிருந்து வெளிவரும் உபாயங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் முக்கிய அங்கம், நோய்ப் பரவல் வீதமும், அதைச் சமாளிக்க அரச வளங்களின் இயலுமை பற்றியதுமாகும். இலங்கையின் தற்போதய நோய்த் தொற்று வீதம் என்ன? எமது பொதுச் சுகாதாரத் திணைக்களத்தின் வளங்களுடன் இதன் ஒப்பீட்டு நிலை என்ன? எந்த த்ரவை வைத்துக்கொண்டு அரசு ஏப்ரல் 20 அன்று ஊரடங்கைத் தளர்த்தியது?
  2. நோய்த் தொற்று வீதத்தைத் தீர்மானிக்க, பரிசோதனைகள் விவாக்கப்படவேண்டுமெனக் கூறப்பட்டது. மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் நாளாந்தம் அதிகரிக்கப்பட்டுக்கொண்டு வரப்படுகின்றதா? பரிசோதனைப் பொதிகளின் கொள்வனவுக்காகப் போதுமான அளவு பண ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? கோவிட்-19 அறிகுறிகள் காணப்படாதவருக்கும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றனவா? இல்லாவிடில், உண்மையான நோய்த் பரவலை அரசு எப்படிக் கணிக்க முடிகிறது?
  3. எந்த அடிப்படையில், ஏப்ரல் 19, 2020 அன்று பல மாவட்டங்களிலுமிருந்தும் ஊரடங்கு உத்தரவு மீளப்பெறப்பட்டது? தேர்தல் திகதியை நிர்ணயிப்பதற்காக, தேர்தல் ஆணையத்தை ஏப்ரல் 20 இல் சந்திப்பதற்காக இவ்வுத்தரவு மீளப்பெறப்பட்டதா? ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்துக்கு மீளப்பெறவேண்டாமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொடுத்த ஆலோசனையை அரசாங்கம் ஏன் உதாசீனம் செய்தது?
  4. இரண்டாவது அலை கோவிட்-19 தொற்று இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளும் அதே வேளை, படிப்படியாக இயல்பு நிலையை அடைவதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? ஊரடங்கு உத்தரவை மீளப்பெறுவதற்கு முன்னரே பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மே 11, 2020 அன்று,பாவனைக்குத் திறக்கப்படுமென அரசாங்கம் அறிவித்தது ஏன்? (இவ்வறிவிப்பு பின்னர் மீளப்பெறப்பட்டு விட்டது). பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மீளத் தொடங்கும்போது சமூக விலக்கல் பற்றிய அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன? சமூக விலக்கலை இன் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதற்குப் போதுமான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதா?
  5. இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு நிலையங்களில் எப்படியான தர நிர்வாகம் கடைப்ப்டிக்கப்படுகிறது? இத் தடுப்பு நிலையங்களை எங்கே நிர்மாணிப்பது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? இதைத் தீர்மானிப்பதில், பொதுச் சேவை அதிகாரிகளுக்கு ஏதாவது பங்குண்டா? அவசரகால நிவாரணப் பணிகளில் பங்கெடுக்காது, ஒரு பொதுச் சுகாதார அதிகாரிகள் கையாளவேண்டிய பிரச்சினையில் இராணுவம் ஏன் தலையிட வேண்டும்? இந் நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்திற்கு தரமோ அல்லது பயிற்சியோ உள்ளதா?
  6. தற்செயலாக இன்னுமொரு தடவை நோய்த்தொற்று வெடிக்குமாயின், அப்போதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமாயின், தினச்சம்பளம் பெறுபவர்களும், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் மக்களும் பாதிக்கபட்டமலிருப்பதற்கு அரசு ஏதாவது திட்டங்களை வைத்துள்ளதா? சமுர்த்தியின் பணம் வழங்கும் திட்டத்தைவிட வறுமையைத் தீர்க்க அரசு என்ன திட்டங்களை வைத்திருக்கிறது?
  7. இதுவரையில், சமூக முடக்க நடவடிக்கைகளினால் எந்தளவுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது? குறுகிய மற்றும் நீண்டகாலக் கடன்களின் தாக்கம் என்ன? அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள அரசு வைத்திருக்கும் திட்டங்கள் என்ன?
  8. சட்டபூர்வமற்ற ஊரடங்கு உத்தரவைப் பிறபித்தமையை அரசு எப்படி நியாயப்படுத்துகிறது? பாராளுமன்றத்தின் அனுமதியின்றிப் பொதுமக்கள் பணத்தைச் செய்வதை அரசு எப்படி நியாயப்படுதுகிறது? இந் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அபாயகரமான முன்னுதாரணங்களாகப் பாவிக்கப்படலாமல்லவா?

கோவிட்-19 பிரச்சினையை அரசு கையாளும் விதத்தில் விஞ்ஞானத்தைவிட அரசியலே முன்னிற்பதாக நாம் அஞ்சுகிறோம். இக் கேள்விகளுக்கு உறுதியான பதில்களைத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இதுவரை இப் பிரச்சினையை அரசு கையாண்ட விதம் பற்றியும், எதிர்காலத்தில் அது எப்படிக் கையாளவிருக்கிறது என்பது பற்றியும் அரசு வெள்ளை அறிக்கை ஒன்றைப் பகிரங்கமாக வெளியிடவேண்டுமென நாம் நிர்ப்பந்திக்கிறோம்

ஒப்பம்

அருட்தந்தை வீ.யோகேஸ்வரன் , கலாநிதி கே.குருபரன்

தமிழ்க் குடிமைச் சமூகத்தின் இணைப் பேச்சாளர்கள்