Spread the love

நோயறிகுறிகள், சிகிச்சை, தடுப்பு மருந்து போன்றவற்றைத் தீர்மானிக்க முடியாது மருத்துவ சமூகம் திணறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் புதியதொரு வினாவையும் அவர்களிடம் தள்ளிவிட்டிருக்கிறது. பலரது கால் விரல்களில் தோன்றும் கிரந்தி (rash) போன்ற அறிகுறி கோவிட்-19 நோய்க் கிருமியால் ஏற்படுகிறதா?

பல தோல் வைத்திய நிபுணர்கள் தமது நோயாளிகளிடம் சந்திக்கும் இன் நிலைமை பற்றிக் கேள்வியெழுப்பி வருகிறார்கள். இவ்வறிகுறிகள் பற்றி எந்தவித ஆராய்ச்சிகளோ அல்லது அறிவிப்புகளோ வராத நிலையில் இது ஒரு வாய்வழிச் செய்தியாகவே புறக்கணிக்கப்பட்டு விடுமா என அவர்கள் கேட்டு வருகிறார்கள்.

மேற்கு நாடுகளிலுள்ள பல தோல் வைத்திய நிபுணர்கள் இவ் விடயம் பற்றிப் பொது வெளியில் சந்தேகங்களை எழுப்பி வந்தாலும் கிழக்கு நாடுகளிலிருந்து இது பற்றிய செய்திகள் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை.

கால் விரல்களின் தோல், இளஞ் சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில், நாட்கள் போக ஊதா நிறத்தில் மாறுவது, எரிச்சல் (burning) உணர்வை உண்டுபண்ணுவது ஆகியன சிலரில் காணப்பட்ட அறிகுறிகள் என பொஸ்டனிலுள்ள மசசூசட்ஸ் பொது மருத்துவ மனையில் பணியாற்றும் தோல் வைத்திய நிபுணர், டாக்டர் எஸ்தெர் ஃப்றீமன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வழர்ச்சி (inflammation) இரண்டு மூன்று வாரங்களில், எந்தவித சிகிச்சைகளுமின்றி மறைந்துபோவதாக அவர் தெரிவிக்கிறார்.

இதுவரையில், ‘கோவிட் விரல்களைக்’ கொண்ட நோயாளிகளில் சிலருக்கு கோவிட்-19 நோயின் அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை எனவும், சிலரில் சாடையான தொற்று அவதானிக்கப்பட்டதெனவும், இது அனேகமாக சிறிய பிள்ளைகள், 20-30 வயதுடையோரில் மட்டுமே காணப்பட்டதாகவும், ஃபிறீமன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்களைக் குழப்பமடைய வேண்டாமென்றும், இவ் வறிகுறிகள் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டுமென்றும் எச்சரிக்கை தரும் அதே வேளை, இதர சுகாதார சேவைப் பணியாளர்கள் இப்படியான அறிகுறிகளோடு நோயாளிகளைச் சந்திக்கும் பட்சத்தில் அவ்விபரங்களைப் பதிவு செய்வதற்காக online COVID-19 dermatology registry என்ற ஒரு இணையப் பதிவுத் தளத்தையும் உருவாக்கியுள்ளார்.

‘கோவிட் விரல்கள்’ பற்றிய சஞ்தேகம் முதன் முதலில் பிரஞ்சு மருத்துவர்களால் ஏப்ரல் ஆரம்பத்தில் எழுப்பப்பட்டிருந்தது. அதே வேளை, பெல்ஜியத்திலும் 23 வயதுடைய ஒருவரில் இது காணப்பட்டதாக அமெரிக்க தோல் மருத்துவம் சம்பந்தப்பட்ட சஞ்சிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கைக்கு சீனா, மேலும் US$ 140 மில்லியன் கடனுதவி!