கோவிட் பெருந்தொற்று நிவாரண உதவி – அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) முன்னெடுக்கிறது
இலங்கையில் வேகமாகப் பரவிவரும் கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக பல நாட்கூலிப் பணியாளர்கள் தமது வாழ்வாதரங்களை இழந்து பட்டினியை எதிர்நோக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, கோவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்களோடு கூடவே இதர மருத்துவ, உளநலக் காரணங்களுக்காகவும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன.
இதைத் தவிர்க்கும் நோக்குடன், நம்பகமான இதர பங்காளிகள், அதிகாரிகளுடன் இணைந்து, அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO USA) பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள குடும்பஙகளுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத் திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மலையகப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு தற்காலிக நிவாரணங்களை வழங்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருட ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்திந்போது இப்படியான நிவாரண சேவையை அனைத்துலக மருத்துவநல அமைப்பு செய்திருந்தமையும் அதனால் பல பாதிக்கப்பட்டமக்கள் பலனடைந்திருந்தமையும் பற்றி வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும். இந்தத் தடவை அனைத்துலக மருத்துவநல அமைப்புடன், மனித நேயம் போன்ற இதர தொண்டு நிறுவநங்களும் இணைந்து மேலும் விஸ்தரிக்கப்பட்ட திட்டமொன்றை நடைமுறைபடுத்த உள்ளன.
இத்திட்டத்தில் கைகோர்த்து நமது மக்களுக்கு உதவிகளைப் புரிய விரும்புபவர்கள் https://theimho.org/donation/ என்னும் இணையத் தொடுப்பின் மூலம் தமது நிதிப்பங்களிப்பைச் செய்துகொள்ளலாம்.
அனைத்துலக மருத்துவநல அமைப்பினால் கடந்தமாதம் மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான கொரோணாச் சிகிச்சை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன.
அதேவேளை, இந்நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்கென ‘அரோகரா’ என்னும் பெயரில், வட அமெரிக்க முருகன் ஆலயம் இணையவழி இசை நிகழ்ச்சித் தொடர் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது.
