கோவிட் பெருந்தொற்று | இலங்கை எதிர்நோக்கும் மனிதப் பேரழிவு

மீண்டுமொரு பொது முடக்கம் அறிவிக்கப்படலாம்?

கோவிட் பெருந்தொற்று இலங்கை முழுவதிலும் மிகவும் வேகமாகப் பரவி வருவதாகவும் நாடு மனிதப் பேரழிவின் எல்லைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன எனவும் குறிப்பாக மேற்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கைகளின்றி வாசல்களிலும், கட்டிடத்துக்கு வெளியேயுள்ள புற்தரைகளிலும் படுத்துறங்கவேண்டிய நிலையிலுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தினமும் நோயாளிகள் வந்து குவிந்த வண்ணமுள்ளனர் எனவும் அரசாங்கம் இது தொடர்பாக இன்று அவசர கூட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

சுகாதார சேவைப் பணியாளர்கள் பலர் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருப்பதனால் சேவைகளை வழங்குவதற்கு பணியாளர் இல்லாமையால் எல்லாமே மிகவும் குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இங்கு இணைக்கப்பட்டுள்ள படங்கள் களுபோவில வைத்தியசாலையில் எடுக்கப்பட்டவை. அடுத்து வரும் நாட்கள் இன்னும் மிக மோசமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளை, இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கும், ஜனாதிபதி ராஜபக்சவுக்குமிடையே இன்று அதி முக்கிய சந்திப்பு ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாகவும் நாடு இன்னுமொரு தடவை பூரண முடக்கத்துள் கொண்டுவரப்படுமா என இச் சந்திப்பில் தீர்மானிக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.