கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த உதவுங்கள் – மதத் தலைவர்களிடம் யாழ். சுகாதாரப் பணிப்பாளர் வேண்டுகோள் 

யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவை அதிகாரிகளோடு மதத் தலைவர்கள் ஒத்துழைக்காத பட்சத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவேண்டி ஏற்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஏ.கேதீஸ்வரன் எச்சரித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு மதத் தலைவர்களுடனான சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“புனித தினங்களில் பெருந்திரளான பக்தர்கள் மத வழிபாட்டு நிலையங்களில் கூடுகிறார்கள். ஆனால் அவர்கள் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு விதிகளை அனுசரிக்கிறார்களில்லை. இதனால் வைரஸைக் கட்டுப்படுத்த எங்களால் இயலாமலுள்ளது. இந்நிலை தொடருமானால் யாழ் மாவட்டத்தில் நாங்கள் பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டுமானால் எல்லோரது ஆதரவும் இவ் விடயத்தில் எங்களுக்குத் தேவை. எனவே வைரஸ் தொற்றினால் வரும் ஆபத்துக்கள் பற்றி பக்தர்களுக்கு எடுத்துக்கூறுங்கள். பெருங் கூட்டங்களாக வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதைத் தஹ்விர்க்கச் சொல்லுங்கள்” என டாக்டர் கேதீஸ்வரன் மதத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர்களில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதனன்று (21). பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட 258 தொற்றுப் பரிசோதனைகளுடன், புதனன்று, மொத்தமாக 788 பரிசோதனைகள் யாழ் மாவட்டத்தில் செய்யப்பட்டிருந்தன.

நாடு முழுவதும், சிங்கள-தமிழ் புத்தாண்டு காலத்தில் நோய்த் தொற்றுகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகள் போதாமை அதிகரித்து வருவதுடன், 20% மான நோயாளிகளுக்கு சுவாச உதவிக்கான ஒக்சிசன் போதாமையும் இருக்கிறது என சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.