கோவிட் தொற்றின் மூலம் பற்றிய புலனாய்வு அறிக்கை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் – அமெரிக்க ஜனாதிபதி

சீனாவின் வூஹான் வைரஸியல் ஆய்வுகூட ஆரய்ச்சியாளர் சிலர் நவம்பர் 2019 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் என வால்ட்ஸ்றீட் ஜேர்ணல் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து கொறோணாவைரஸின் மூலம் பற்றி அறிவதில் புதிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, 90 நாட்களுக்குள் அமெரிக்க புலனாய்வுத் துறை தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கட்டளையிட்டிருக்கிறார்.

இந்த வருடம் மார்ச் மாதம், கோவிட்-19 தொற்றின் மூலம் பற்றி விரிவான அறிக்கையொன்றைத் தயாரிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவனைக் கேட்டிருந்தார். அதில் குறிப்பாக இரண்டு சாத்தியங்கள் பற்றி அவர் கேட்டிருந்தார். அதாவது, வைரஸ் விலங்கிலிருந்து மனிதருக்குத் தாவியதா அல்லது வூஹான் ஆய்வுகூடத்திலிருந்து மனிதருக்குத் தாவியதா என்பதே அவரது கேள்வியாக இருந்தது. இவ்வறிக்கை இம் மாத ஆரம்பத்தில் கையளிக்கப்பட்டதோடு, இவ்விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டுமிருந்தது.

ஆனால், புலனாய்வுத் துறையினால் இதுவரையில் உறுதியான ஒரு மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டுசாத்தியங்களுக்கும் புலனாய்வுத் துறையினரிடையே ஆதரவு காணப்பட்டாலும் எவரும் இவற்றில் ஒன்றின்மீதும் உறுதியான நம்பிக்கையைக் கொண்டவர்களாக இல்லை. ஒரு மூலத்தைத் தெரிவுசெய்யுமளவுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லையென அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வைரஸ் இயல்பாகவும் இயற்கையாகவும் உருவாகியது என சீனா ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தாலும், வூஹான் ஆய்வுகூடப் பதிவுகளை உலக சுகாதார நிறுவன விசாரணையாளர்களோடு பகிர மறுத்ததைத் தொடர்ந்து வைர்ஸின் மூலம் பற்றிய விசாரணைகள் ஸ்தம்பித்த நிலையில் இருந்தன.

இந்நிலையில், வூஹான் ஆய்வுகூடப் பணியாளர்கள், நவம்பர் 2019 இல் திடீர் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை பற்றிய தகவல்களை வால்ஸ்ட்றீட் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. சீனாவின் ஆராய்ச்சியாளர் சிலரது அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட இத் தகவல் தற்போது ‘ஆய்வுகூட மூலம்’ பற்றிய சர்ச்சைக்குப் புத்துயிர் கொடுத்திருக்கிறது. இச் சம்பவம் நடைபெற்ற வேளை அமெரிக்க உளவு நிறுவனங்கள் இவ் விடயங்களை அறியமுடியாமற் போய்விட்டது தொடர்பாக ஜனாதிபதி பைடன் விசனம் தெரிவித்துள்ளதுடன், புதிய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தடவை விசாரணையாளருடன் சீனா முற்றான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அதே வேளை, ஜனாதிபதி ட்றம்ப் நிர்வாகத்தின்போது ஆய்வுகூட மூலம் பற்றி விசாரணை செய்யவென நியமிக்கப்பட்டிருந்த விசேட குழுவை ஜனாதிபதி பைடன் கலைத்துவிட்டிருந்தார்.

கோவிட் மூலம் பற்றி உலக சுகாதார நிறுவனத்தினால் நடத்தப்பட்ட முதலாம் கட்ட விசாரணைகளின் அறிக்கையின் பிரகாரம், ” வூஹான் மருத்துமனைகளின் பதிவுகளின்படி, டிசம்பர் 2019 இற்கு முன்னர், கோவிட் தொற்று போன்ற சுவாசப் பிரச்சினைகளுடன் எவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படவில்லை” எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், உலக சுகாதார நிறுவனத்தின் இவ் விசாரணை தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் சந்தேகங்களை எழுப்பியிருந்தன. உலக சுகாதார நிறுவனத்தின் இந்த விசாரணை அறிக்கையை, அரசுடன் தொடர்புடையவர்கள் உட்பட 17 சீன விஞ்ஞானிகள் இணைந்து தயாரித்திருந்தார்கள்.

“வைரஸ் மூலம் பற்றிய விசாரணையில் இது ஆரம்பமே தவிர முடிவல்ல. மூலம் கண்டுபிடிக்கப்படும்வரை விசாரணைகள் தொடரும்” என முதலாம் கட்ட விசாரணை தொடர்பாக உலக சுகாதார நிறுவன பணிப்பாளர் நாயகம் ரெட்றோஸ் அடனொம் கெப்றியீசஸ் தெரிவித்திருந்தார்.