Spread the love
‘மந்தை அணுகுமுறை’ – பிரித்தானியா vs அமெரிக்கா, கனடா, ஐரோப்பா | ஒரு அலசல்
சிவதாசன்

மார்ச் 16, 2020

கோவிட்-19 வைரசினால் மரணமடைந்தவர்களில் கிட்டத்தட்ட 15 வீதமானோர் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. மரணமான 50 வயதுக்குக் குறைவானவர்கள் 0.4% (அண்ணளவாக). முதியவர்களின் மரணத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகக் காணப்படவில்லையாயினும், அவர்களில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவானதாக இருக்கலாமென்பது மெரும்பாலாரால் நம்பப்படும் காரணங்களில் ஒன்று.

பேராசிரியர் ஸ்ருவார்ட் நியூமன் வித்தியாசமாகச் சிந்திக்கிறார். அதற்கு அவர் 1918 இல் வந்து 50 மில்லியன் உயிர்களைக் கொன்ற கொள்ளை நோயைத் துணைக்கழைக்கிறார். ஸ்ரூவார்ட் நியூமன், Ph.D. , நியூ யோர்க் மருத்துவக் கல்லூரியில் கல உயிரியல் (cell biology) மற்றும் உடற்கூறியல் (anatomy) பாடங்களைக் கற்பிப்பவர்.

1918 இல் வந்த கொள்ளை நோயை ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என அழைத்தார்கள். உலகம் முழுவதும் 50 மில்லியன் மக்களை அது கொன்றிருந்தது. அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 500,000 மக்கள் மரணமாயிருக்கலாமெனக் கூறப்படுகிறது. இவர்களில் 92% மானோர் 65 வயதிற்கும் குறைந்தவர்கள். அதிலும் அரைவாசிப்பேர் 20 வயதுக்கும் 40 இற்கும் இடைப்பட்ட வயதினர்.இவர்களுக்கு நோயெதிர்ப்பாற்றல் குறைவென்றோ அல்லது வேறு மருத்துவக் காரணங்கள் இருந்திருக்குமென்றோ கூறமுடியாது.

இப்படிக் குறிப்பிட்ட வயதினரை மட்டுமே இலக்குவைத்துக் கொல்லும் நோய்க்கிருமிகளைப் பற்றி அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக்குழுவின் முடிவு இதற்கான விடையைத் தர முயற்சிக்கலாம் என நியூமன் கருதுகிறார். அதாவது 1900 களில் ஒரு வைரஸ் தொற்று பரவியிருந்ததென்றும் அப்போது குழந்தைகளாக இருந்தவர்கள்தான் 1918 இல் மரணமான ‘இளம் வயதினர்’ எனவும் அவ்வாய்வுக்குழு கருதுகிறது. சிறுவயதில் அவர்களைத் தாக்கிய வைரஸ், பின்னர் (1918 இல்) தாக்கிய ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ வைரஸுடன் நெருங்கிய குணாதிசயங்களைக் கொண்டிருந்திருக்கலாமென்றும், முதல் தாக்கிய வைரஸ் அப் பால்ய வயதினரைக் கொன்று விடாமல், அவர்களின் நோயெதிர்ப்பு ஆற்றலுக்குத் தம்மைப் பழக்கிக்கொண்டதனால் (primed / adapted / இசைவாக்கமடைந்ததனால்) இரண்டாவது தாக்குதலின்போது அவர்களின் இயல்பான பாதுகாப்பரண்களை இலகுவில் முறியடித்து அவர்களைக் கொல்ல முடிந்திருக்கிறதென அவ்வாய்வுக்குழு கருதுகிறதென பேராசிரியர் நியூமன் கூறுகிறார்.

கோவிட்-19 இன் தாக்கத்தினால் இறந்தவர்களில் நோயெதிர்ப்பு உயர் எதிர்வினையாற்றியதற்கான (immune hyper-reactivity) தடயங்களுண்டென்றும், 1900 குழந்தைகளைப் போல் இவர்களும் 1950 களில் பரவிய நோய்க் கிருமிகளினாற் பாதிக்கப்பட்டு (primed) உயிர்தப்பியவர்களாக இருக்கலாமெனவும் கோவிட்-19 இன் உக்கிரமான தாக்குதலுக்கு இம் முதியவர்களால் ஈடுகொடுக்க முடியாமல் போய்விட்டிருக்கலாமென்றொரு கருதுகோளை பேராசிரியர் நியூமன் முன்வைக்கிறார்.

Related:  கோவிட்-19 | இரண்டு மடங்கு நோயாளிகள் உணவகங்களில் உணவருந்தியவர்கள் - ஆய்வு


தவறான அணுகுமுறை

தற்போதய கோவிட்-19 இன் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க பல உலக நாடுகள் வரிந்துகட்டிக்கொண்டு மக்கள் நடமாடுவதையும், கூடுவதையும் தடுப்பதைப் பேராசிரியர் நியூமன் தவறெனக் கருதுகிறார். அதற்கு மாற்று வழியாக ‘மந்தை நோயெதிர்ப்பாற்றல்’ (herd immunity) என்னுமொரு செயல்முறையைப் பரிந்துரைக்கிறார்.

கோவிட் 'கட்டு' | வெல்லப்போவது யார்? 1

கோவிட்-19 இன் தாக்கத்திலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, தடுப்பு மருந்து ஒன்றுதான். ஆனால் அது விநியோகத்துக்கு வர நீண்ட காலம் பிடிக்கும். அதுவரையில், இளைய சமுதாயத்தினரையும், குழந்தைகளையும், 60 வயதுக்கு உடபட்டவர்களையும் தனிமைப்படுத்த வேண்டாம் என்கிறார் அவர். அவர்கள் இவ் வைரஸை எதிர்கொண்டு அதற்கான நோயெதிர்ப்பாற்றலை அவர்களது உடல்கள் தாமாகவே உற்பத்திசெய்ய விட்டுவிட வேண்டும். அதே வேளை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் (70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக) , மருத்துவ ரீதியாகப் பலவீனமானவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும் என்கிறார்.

நோய்க்கிருமியை எதிர்கொண்டு தப்பிப் பிழைத்தவர்கள் கிருமியைப் பரவச் செய்யப் போவதில்லை. முதியவர்களையும், பலவீனமானவர்களையும் மட்டும் தனிமைப்படுத்தி ஏனையவர்களை நாளாந்த கடமைகளைச் செய்யுமாறு பணிப்பதனால் பொருளாதாரமும் பாதிக்காது. அவர்களுடைய உடல்களும் நோயெதிர்ப்பு ஆற்றல்களைக் கொண்டவையாக மாறிவிடும். அதற்குள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் சமூகம் தப்பிவிடும் என பேராசியர் நியூமன் கருதுகிறார்.எனவே தான், பாடசாலைகளையோ, கல்லூரிகளையோ, திரையரங்குகளையோ மூடுவது சரியான அணுகுமுறையல்ல என அவர் கருதுகிறார். இளையவர்கள் நோய்த்தொற்றுக்குள்ளாகுவார்கள் என்பதில் ஐயமில்லை. முதியவர்கள் பக்கத்தில் அவர்கள் செல்லாமலிருப்பதும் அவசியம். இதர ஃபுளூ, மெனிஞ்ஞைற்றிஸ், நச்சுணவு போன்ரவற்றால் மரணமடைவதைப் போல சிலர் கோவிட்-19 கிருமியால் மரணமடைய வாய்ப்புண்டு தான். இருப்பினும், பாரிய சமூகத் தடைகளையும், போக்குவரத்துத் தடைகளையும் நடைமுறைப்படுத்துவதால் ஏற்படப்போகும் பொருளாதார இழப்பு அதைவிட மிக மோசமான விளைவுகளைக் கொண்டுவருமென அவர் எச்சரிக்கிறார். மூடப்பட்ட பல நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுமென நம்ப முடியாது. பல உண்வகங்கள், கலாச்சார நிலையங்கள் நிரந்தரமாகவே இழக்கப்படும் என அவர் கூறுகிறார்.

அமெரிக்கா, கனடாவைப் போலல்லாது பிரித்தானியா, இந்த ‘மந்தை நோயெதிர்ப்பு’ (herd immunity) அணுகுமுறையைப் பின்பற்றுவதுமல்லாது, அதைத் துரிதப்படுத்தும் வழிகளையும் மேற்கொள்ளுகிறது.

பிரித்தானியாவின் தலைமை ஆலோசகரின் பரிந்துரையின் பிரகாரம் இக் கொள்கைத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியிருந்தாலும் அரசு விடாப்பிடியாக இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அலுவலகங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் மூடப்படவில்லை. இயலுமானவர்கள் நோயை எதிர்கொள்ளவேண்டும் அதனால் அவர்கள் இயற்கையாக நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்பதே இக் கொள்கையின் பின்னணி. இதனால் நாடோ, பொருளாதாரமோ முடக்கப்படாது வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்ரிக்காவில் ஜனாதிபதி ட்றம்ப், கனடாவில் ட்றூடோ, பிரித்தானியா தவிர்ந்த இதர ஐரோப்பிய நாடுகள், இதர பலம் கொண்ட நாடுகள் என அத்தனையும் ஒரு பக்கமும் பிரித்தானியா மறுபக்கமுமாக கோவிட்-19 மீது பந்தயம் கட்டியிருக்கிறார்கள்.

Related:  20 வது திருத்தம் | ஹிட்லர் தானாக உருவாகவில்லை

இது ஒரு விஷப் பரீட்சை என்பதில் சந்தேகமில்லை. வெல்லப்போவது யார் என்பதுதான் கேள்வி.


Print Friendly, PDF & Email
கோவிட் ‘கட்டு’ | வெல்லப்போவது யார்?

கோவிட் ‘கட்டு’ | வெல்லப்போவது யார்?