HealthIndia

கோவிட் | இந்தியாவில் தடுப்பு மருந்து விநியோகம் ஆரம்பம்


இந்தியாவின் பாரத் பயோரெக் (Barath Biotech) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் சுகாதாரப் பணியாளர் மற்றும் முன்னணிப் பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்வை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனி) ஆரம்பித்து வைத்தார்.

தரவு: ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் – ஜனவரி 16, 2021

கோவிஷீல்ட் (Covishield), கோவாக்சின் (Covaxin) ஆகிய பெயர்களில் பாரத் பயோரெக்கினால் தயாரிக்கப்பட்ட இம் மருந்துகள் முதலாம், இரண்டாம் மனிதப் பரிசோதனைகள் (Phase 1 & 2) செய்யப்பட்டவை. மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் தற்போது நடைமுறையிலுள்ளன.

தடவை ஒன்றுக்கு ரூ. 200 (கோவிஷீல்ட்), ரூ.206 (கோவக்சின்) என்ற விலைகளில் வழங்கப்படும் இம் மருந்துகள் நாடெங்குமுள்ள பல மருத்துவ நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. ஃபைசர்/பயோஎன்ரெக், மொடேர்ணா மருந்துகளைப் போலவே இவையும் இரண்டு தடவைகள் எடுக்கப்பட வேண்டும். மருந்தை எடுத்ததற்குப் பின்னரும் தொடர்ந்தும் ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் தொற்றுத் தவிர்ப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.



தென்னிந்தியா

தென்னிந்தியாவில் பங்களூர், சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம், விஜயவாடா ஆகிய நகர்களில் இத் தடுப்பு மருந்து விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆர். சரிதா, மருத்துவ பணிப்பாளர், கேரளா மருத்துவ சேவைகள் (படம்: ‘தி நியூஸ் மினிட்)

இம் மருந்துகளின் முதலாம், இரண்டாம் கட்ட மனிதப் பரிசோதனைகளின்போது அவதானிக்குமளவுக்கு அவை பக்க விளைவுகள் எவற்றையும் உருவாக்கவில்லை. இம் மருந்தை எடுப்பவர்களது மருத்துவத் தரவுகளைப் பரிசோதித்த பின்னரே அவர்களுக்கு அவை கொடுக்கப்படுமெனெ மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர். பக்க விளைவுகள் ஏற்படுமிடத்து அவர்களைக் கண்காணித்து சிகிச்சையளிப்பதற்கான தயாரிப்புக்களைத் தாம் மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மருந்து கொடுக்கும் குழுவினர், மருந்து கொடுக்கப்பட்டவர்களை 30 நிமிடங்களுக்கு மிகவும் நெருக்கமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 10.5 மில்லியன் கோவிட் தொற்றுக்களும், 15,158 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.