Spread the love

அமெரிக்காவின் பரிதாபம்!

ஜூலய் 26, 2020: அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோவிட்-19 இன் பாதிப்பு கைகளை மீறிப் போய்விட்டது. டெக்ஸாஸ் மாநிலத்தில், எந்த நோயாளிக்கு சிகிச்சை கொடுக்கவேண்டும், எவரைக் கைவிட வேண்டும் எனத் தீர்மானிக்க ஒரு மருத்துவமனையில் ஒரு குழுவொன்று (“death panel”) நியமிக்கப்பட்டிருக்கிறதாம்.

டெக்ஸாஸின் கிராமப்புறமான ஸ்டார் கவுண்டியில் இருக்கும் ஒரே ஒரு மருத்துவமனை மெமோறியல் ஹொஸ்பிட்டல் தான். நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததும் அம்மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களாலும், சுகாதார சேவை வழங்குபவர்களாலும் பெருந்தொகையான நோயாளிகளைக் கையாள முடியவில்லை. எனவே எந்த நோயாளிக்குச் சிகிச்சையளிக்க வேண்டுமெனத் தீர்மானிப்பதற்காக ஒரு குழுவொன்றை அம்மருத்துவமனை நிர்வாகம் நியமித்திருக்கிறது.

ஸ்டார் கவுண்டியின் சனத்தொகை 64,000. ஜூலை மாத ஆரம்பத்தில் நோய்த் தொற்று இக் கவுண்டியில் திடீரென வேகமாக அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவின் தேசிய விடுமுறை நாளான ஜூலை 4 ம் திகதி, பெரும்பாலான மக்கள் சமூக கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்கள். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் ட்றம்ப் ஆதரவாளர்கள். டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுனரும் ஒரு தீவிர வலதுசாரி. அரசாங்கத்தின் கோவிட்-19 பாதுகாப்புக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க மறுப்பவர்கள். இதே போலத்தான் ஃபுளோறிடா மாநிலமும். ஜூலை 24 இல் ஸ்டார் கவுண்டியில் 1769 பேர் தொற்றுக்குள்ளாகியும், 50 பேர் மரணமடைந்துமுள்ளனர். தொற்று அதிகரிப்பிற்கு சமூக ஊடாட்டங்கள் காரணமென நம்பப்படுகிறது.

“நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் போனால் எங்களால் தொடர்ந்தும் செயற்படமுடியாமல் போகலாம்” என ஸ்டார் கவுண்டி சுகாதார அத்தியட்சகர் ஹோஸே வஸ்குவேஸ் தெரிவித்தார்.



அமெரிக்காவில் அரச மருத்துவ மனைகளில் சிகிச்சைக்குப் போபவர்கள் பெரும்பாலும் வறியவர்களும், சிறுபான்மை இனத்தவர்களுமே. வசதியானவர்களும், பெரும்பான்மை இனத்தவர்களும் காப்புறுதி வசதிகளைக் கொண்டிருப்பதால் அவர்கள் தனியார் மருத்துவமனைகளையே நாடுகிறார்கள். இதனால் அரச மருத்துவமனைகள் அரசுகளாலேயே புறக்கணிக்கப்படும் நிலையில் உள்ளன. இங்கு சிகிச்சைக்குப் போபவர்களின் தரம் பார்த்துச் சிகிச்சையளிக்கப்படுகிறதென்றும், பல சிறுபான்மை இனத்தவர் அங்கு போவதைவிட வீட்டில் இருந்தே மரணிக்கலாம் என நம்புவதாகவும் முன்பு செய்திகள் வெளிவந்திருந்தன.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | பிறபொருளெதிரிச் சிகிச்சை பலனளிக்கிறது - விஞ்ஞானிகள்