NewsSatire | கடி-காரம்Sri Lanka

கோவிட்டைத் துரத்திய ராஜ மருத்துவர் எலியந்த வைட்டை இப்போது கோவிட் துரத்துகிறது?


விசேட செய்தியாளர் ‘கிசு கிசு’ கிருஷ்ணானந்தா

இலங்கையிலும் இந்தியாவிலும் பெயர் போன ராஜ மருத்துவர் எலியந்த வைட்டைத் தெரியாதவர் இருக்க முடியாது. இருப்பினும் அப்படி இருப்பவர்களுக்காக ஒரு சிறிய முன்னோட்டம்:

கோவிட் அலை-1 றின்போது இலங்கையில் ஏகப்பட்ட கடற்படை முகாம்களில் வீரர்கள் பலர் அள்ளு கொள்ளையாக கோவிட்டினால் மோசமாகத் தாக்கப்பட்டிருந்தனர். அம் முகாம்களில் பணிபுரியும் சிலர் மட்டும் இறந்ததாக அப்போது செய்திகள் வந்திருந்தன. யூக்கிரெயினிலிருந்து விசேடமாகத் தருவிக்கப்பட்ட ‘இளம் பெண் சுற்றுலாவாசிகள்’ தமது விடுமுறைகளை இம் முகாம்களில் இனிதே கழித்தார்கள் என்பது இன்னுமொரு கிசு கிசு.

இப்படியாக ‘மோசமாகத்’ தாக்கப்பட்ட வீரர்களைக் காப்பாற்றியவர் என்ற பெயரைப் பெற்றவர் தான் நமது எலியந்த வைட். இவரது மருந்துக்குப் பெயர் ‘வீணாபதி’. குண்டலினி யோகாசனம் கலந்த ஒருவகை சிகிச்சை முறை. மந்நர் மஹிந்தர் சிபார்சு செய்யும் ஆட்களுக்கு மட்டுமே அவரது வைத்தியம் அளிக்கப்படும்.

அப்போதய மன்னர் பெருமான் மகிந்த ராஜபக்சருக்கு அரண்மனை வைத்தியராக இருந்ததால் எலியந்தருக்கு நாட்டு மக்களிடையே ஏகப்பட்ட கிராக்கி. அவரது பெயர் கடல் கடந்து சென்று இந்தியாவிலும் பரவலாகப் பரவியிருந்தது. இவரிடம் சிகிச்சை பெற்ற பல பிரபலங்களில் சிலர்: சச்சின் ரென்டுல்கார்,சல்மான் கான், முகேஷ் அம்பானி ஆகியோர். இவர்களை விடப் 10 முதல் 15 வரையான அரசியல் தலைவர்களும் தன்னிடம் சிகிச்சை பெற்றதாக வைட் தெரிவித்திருந்தார்.



இச்செய்தி ஜூலை 21, 2013 ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரெஸ்‘ பத்திரிகையில் வந்த செய்தியில் ஒரு பகுதி:

“The President is very keen that I treat Indians. They are our brothers. In the case of some VVIPs (like Tendulkar) the President insists that the treatment be given in Sri Lanka, and at his residence, because he believes that Sri Lanka’s soil is blessed,” White affirmed.

இப்படி உலகப் புகழ் பெற்ற வைத்தியர் குடும்பத்தில் ஒன்றாக கோவிட் புகுந்துகொண்டிருக்கிறது என நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் – குண்டலினி யோகாசனமற்ற முறையில் – அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் நிலைமை அவ்வளவு திருப்திகரமாக இல்லை எனவும் கேள்வி. பாவம் உதவி செய்பவர்களுக்குத்தான் எப்போதும் உபத்திரவம் வந்து தொலைக்கிறது.

இந்தியாவில் கோவிட்டை முற்றாக ஒழிப்பதற்காக அந்நாடு தன்னை அழைத்திருக்கிறது என எலியந்த சமீபத்தில் கூறியிருந்தார். இவர் அங்கு வந்து தன்னை ஒழிப்பதற்கு முன்னர் ஒரு pre-emptive strike ஆக கோவிட் தனது Delta Force ஐ அனுப்பி அலுவல்களைக் கவனிக்கிறதோ தெரியாது. எப்படியோ இந்த விடயத்தில் நான் எலியந்த வைட் பக்கம் தான்.

ஓ..இன்னுமொரு விடயம். முன்னாள் மன்னருக்கும் வயிற்றில் புற்றுநோய் என்றொரு கிசு கிசுவும் நகரில் உலாவுகிறது. அவர் சகல பிணிகளிலுமிருந்து விரைவில் குணம்பெற நாடு பிரார்த்திக்க வேண்டும். இதுபற்றி ஓடித் திரிந்த காணொளி ஒன்று வலையிலிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது என நம் உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.