Healthமாயமான்

கோவிட்டின் ஆரம்பம் – உண்மை கசிகிறதா?

மாயமான்

கோவிட்-19 நோய்க்குக் காரணமான சார்ஸ்-கொவ்-2 வைரஸ் விலங்கிலிருந்து மனிதருக்குத் தாவியது என்றும் சீனாவின் ஆய்வுகூடத்திலிருந்து தவறுதலாக மனிதருக்குத் தாவியது என்றும் கிருமிப் போருக்கான பரிசோதனைக்காக அமெரிக்க உளவு / பாதுகாப்பு நிறுவனங்களின் திட்டமிட்ட தயாரிப்பு எனவும் பல கதைகள் கடந்த சில வருடங்களாக உலவி வருகின்றன. இவற்றில் எதுவொன்று உண்மையாக இருந்தாலும் மேலும் சோடிக்கப்படும் கதைகளால் உண்மை மீது சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இக் கதை சோடிப்பில் முன்னணியில் இருப்பவை அமெரிக்க, பிரித்தானிய, இஸ்ரேலிய உளவு நிறுவனங்கள். இதில் அமெரிக்க உளவு நிறுவனங்களின் பங்கு இருக்கிறதென ஒருவர் உள்ளகத் தகவலை வழங்கியதால் தற்போது அதுபற்றி அமெரிக்க கான்கிரஸ் ஒரு விசாரணையைச் செய்து வருகிறது.

விசாரணைக்கான காரணம் இதுதான். கோவிட்-19 இன் மூலத்தை அறிய அமெரிக்க உளவு நிறுவனம் சில விஞ்ஞானிகளை நியமித்திருந்தது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கான வைரஸ் ஆய்வுகூடத்திலிருந்து தற்செயலாக தப்பி வந்ததல்ல அது இயற்கையாக ஏற்பட்ட ஒரு நிகழ்வு என்று கூறும்படி இக்குழுவில் 6 பேருக்கு பெருந்தொகையான பணம் கொடுக்கப்பட்டது என்பதை அக்குழுவிலிருந்த ஒருவர் ‘ஊதிக்’ கெடுத்துவிட்டார். அமெரிக்க காங்கிரஸில் இரண்டு குழுக்கள் செவ்வாய் முதல் விசாரணையை ஆரம்பித்துள்ளன. விசிலை ஊதியவர் அமெரிக்க உளவு நிறுவனத்தில் பல தசாப்தங்களாகப் பணியாற்றும் ஒரு மூத்த அதிகாரி என அறியப்பட்டுள்ளது.

கோவிட் மூலத்தை ஆராய்ந்த 7 விஞ்ஞானிகளில் ஒருவர் மட்டுமே வைரஸ் விலங்கிலிருந்து மனிதருக்குத் தொற்றியது எனவும் மீதி ஆறு பேரும் சீனாவின் வூஹான் ஆய்வுகூடத்திலிருந்து தப்பியது என்றும் தீர்மானித்திருந்தார்கள் எனவும் ஆனால் சீ.ஐ.ஏ. அவர்கள் ஆறு பேருக்கும் பணத்தைக் கொடுத்து வைரஸ் ஆய்வுகூடத்திலிருந்து புறப்படவில்லை என ஏகமனதாக அறிவித்துவிட்டார்கள் எனவும் இப்போது தெரியவந்திருக்கிறது. வைரஸை ஒரு போராயுதமாகப் பாவிக்கும் நோக்கில் பல நாடுகளிலும் ஆய்வுகூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. வூஹான் ஆய்வுகூடத்தில் நடைபெற்ற பரிசோதனைகளுக்கு அமெரிக்கா பண உதவி செய்தது என்ற செய்திகளும் முன்னர் வந்திருந்தன. இவ்வைரஸ் அமெரிக்காவில் ‘தயாரிக்கப்பட்டு’ சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது என்ற கருத்தையும் சிலர் கூறிவருகின்றனர். சமீபத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலாளரும் “கோவிட்டின் மூலம் குறித்து திட்டவட்டமான பதில் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் செப்டெம்பர் 26ம் திகதி இந்த ஏழாவது நபரும் விசிலை ஊதிய மூத்த சீ.ஐ.ஏ. அதிகாரியுமான ஆண்ட்றூ மக்றிடிஸ் சாட்சியமளிக்கவுள்ளார் என அறியப்படுகிறது. இவ்விடயத்தை மூடி மறைக்க உளவு நிறுவனம் படுகின்ற பாட்டைப் பார்த்தால் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்றவாறே இதையும் பார்க்கவேண்டி இருக்கிறது.

வூஹான் ஆய்வுகூடத்தில் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செய்த இப்பரிசோதனையின் போது வைரஸ் தப்பியது என்ற விடயத்தை இரண்டு நாடுகளுமே மிகப் பலமாக மறுத்துவருகின்றன. ‘ஆய்வுகூட விவகாரம்’ பற்றிய எந்த செய்திகளையும் சமூக மற்றும் பிரதான ஊடகங்களில் வெளிவராது சீனா தடுத்துவிடுகிறது. அமெரிக்காவிலோ மேலும் பல நம்பமுடியாத கதைகளைச் சோடித்து அவற்றின் மூலம் உண்மைகளை மூழ்கடிக்கச் செய்வது ஒரு ஜனநாயக உத்தியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் வைரஸ் ஆய்வுகூடத்திலிருந்து ‘லீக்’ ஆகியது போல் உண்மை ‘சீ.ஐ.ஏ.’ ஆய்வுகூடத்திலிருந்து ‘லீக்’ ஆகியிருக்கிறது. வாழ்க ‘லீக்கிங்’!