Short Storiesசிறுகதை

கோப்பை

சிறப்புச் சிறுகதை

குமார் மூர்த்தி

மறைந்த எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் குமார் மூர்த்தி அவர்களது இச் சிறுகதை 25 வருடங்களுக்கு முன்னர் ரொறோண்டோவில் இருந்து வெளிவரும் ‘காலம்’ சஞ்சிகையில் வெளிவந்தது. ‘மறுமொழி’யில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘சிறப்புச் சிறுகதைகள்’ என்ற வரிசையில் அவரது சிறுகதையைப் பிரசுரிப்பதில் நாம் பெருமையடைகிறோம். இச் சிறுகதை ‘கோப்பை’ என்ற பெயரில் மாமூலன் அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டு ரொறோண்டி சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருந்தது. இதில் பிரதான பாத்திரமேற்று ‘தாய்வீடு’ ஆசிரியர் திலிப்குமார் சிறப்பாக நடித்திருந்தார்.

குமார் மூர்த்தி

மூடியைத் திறந்ததும் ஆவி பக்கென்று வந்து கையில் அடித்தது. ஒரு கணம் துடித்துப் போனேன். …..ல் மிசின் என்று என்னையுமறியாமல் ஒருமுறை கத்தி விட்டேன். பக்கத்தில் நின்ற ஸ்பானிய நண்பன் “ஆ….அது.. மிசினா…” என்று முறிந்த ஆங்கிலத்தில் நான் சொன்ன வார்த்தையையும் திருப்பிச் சொல்லிக் கேட்டான். வலியையும் மறந்து எனக்குச் சிரிப்பு வந்தது. இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம். எனது மொழியிலிருந்த அனைத்து தூஷண வார்த்தைகளும் அவனுக்கு அத்துபடியாகத் தெரிந்திருந்தது. நேற்று நான் வேலைக்கு வந்ததுமே எல்லாவற்றையும் சொல்லிச் சரிபார்த்துக்கொண்டான். யாரோ என் கண்ணுக்குத் தெரியாத, எனக்கு முன் வேலை செய்த முன்னாள் என் நாட்டுக் குடிமகனும், இந் நாள் டமில் கனேடியனுமான ஒரு பிரகிருதி சொல்லிக் கொடுத்ததாகச் சொன்னான். கொலை பண்ணி ஒரு பெயரையும் சொல்லி, “தெரியுமா?” என்றான். யாரை என்று நினைப்பது? புருவத்தைச் சுருக்கி இல்லை என்றேன். ஏதோ டமிலை இந்தளவாவது வாழவைக்கிறார்கள் என்று புறுபுறுத்துக்கொண்டே வேலையில் இறங்கி விட்டேன்.

வேலை என்றால் கையை ஒரு நிமிடமும் ஓயவைக்க முடியாது. கோப்பைகள் வந்து குவிந்துகொண்டே இருக்கும். சின்னதும் பெரிதும் குஞ்சும் குருமனுமாக ஏகப்பட்ட தினுசுகளில் வரும். அதைவிடக் கரண்டி, கத்தி, பிச்சுவா என்று உயிரை வாங்கும்.

கொஞ்சம் இசகு பிசகாகக் கையை வைத்தால் போச்சு இரத்தத்தைக் கண்ணாரக் கண்டு களிக்கலாம். கோப்பையிலுள்ள மிச்ச சொச்சம் கச்சவடங்களைக் குப்பையில் தட்டிக் கொட்டிவிட்டு அந்தத் தட்டத்தில் தினுசு தினிசாக அடுக்கி மிசினுக்குள் தள்ளி மூடிவிட வேண்டும். மிசின் வேலை செய்யும் நேரத்தில் மற்றக் கூடையைத் தயார் செய்ய வேண்டும். மிசின் நின்றதும் உள்ளிருக்கும் கூடையை மறுபுறமாக ஆவி படாமல் சுடுதண்ணீர் ஊற்றாமல் வெளியில் எடுத்து சூட்டோடு சூடாக சமையல்காரன் முன் அடுக்க வேண்டும். அதைவிடக் குப்பை கொட்ட வேண்டும். கூட்ட வேண்டும். அடைப்பு எடுக்க வேண்டும். வெங்காயம், உருளைக்கிழங்கு வெட்ட வேண்டும். இன்னும் பல சில்லறை வேலிகளும் உண்டு. ஆனால் வேலை கேட்டு வந்த அன்று ‘டிஷ் வாஷிங்க்கில்’ (கோப்பை கழுவுவதில்) முன்னனுபவம் உண்டா என்று மட்டும் மனேஜர் கேட்டான். முப்பைத்தைந்து வருடமாகக் கோப்பை கழுவித்தான் சாப்பிடுகிறேன் என்று சொல்ல வாயெடுத்தவன், வேலை முக்கியம் என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டேன். பின்னால் அவனால் எனக்குத் தரப்பட்ட அறிவுறுத்தல்களில் ஏதோ நான் கோப்பை கழுவப் பிறந்தவன் என்ற நினைப்பை எனக்குள் ஏற்படுத்தி விட்டிருந்தது.

சிறு வயதில் கோப்பை கழுவுவதென்பது ஒரு கெளரவப் பிரச்சினையாக இருந்தது எனக்கு. அண்ணனுக்கு மட்டும் கோப்பை கழுவிச் சோறு போட்டுக் கொடுக்கும் அம்மா என்னைப் பார்த்து கோப்பையைக் கழுவிக்கொண்டு வாடா தம்பி என்று சொல்லும்போது ‘சீ’ என்று வெறுத்தே போகும். அதைவிடத் தங்கச்சி இருக்கிறாளே தொட்டாச் சிணுங்கி. அண்ணனுக்கு மட்டும் வலு பவ்வியமாகக் கழுவிக் கொடுப்பாள். நான் கேட்டால் மட்டும் முறைத்துப் பார்ப்பாள். கையை ஓங்கினால் போதும் இல்லாத் பொல்லாததெல்லாம் சொல்லி அண்ணனிடம் அடிவாங்க வைத்து விடுவாள். கோப்பை கழுவிச் சாபிடவேண்டுமென்பதற்காகவே பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் படுத்த நாட்களும் உண்டு. பாவம் அம்மா முடக்குவாதத்தோடு சிரமப்பட்டாலும் இருக்கும் வரைக்கும் என் விருப்பம் அறிந்தே நடந்து கொண்டாள். இப்படி ஆகுமென்று அப்போதெ தெரிந்திருந்தால் பாவம் அம்மாவைக் கஷ்டப்படுத்தியிருக்க மாட்டேன். வீட்டில் என்ன? ஊரிலுள்ள கோப்பைகளையே கழுவிக் கொடுத்திருப்பேன்.

முதலில் எங்கள் வீட்டில் இருந்தது தகரக் கோப்பைகள் தான். வெள்ளை வெளேரென்று மக்குப் பூசி கரைகளில் வேலைப்பட்டும் கொண்டவை. பின்னாளில் பட்டணத்துக்குப்போய் பீங்கான் வாங்கி வந்ததும் தகரக் கோப்பைகளில் ஒன்றை நாய்க்கு ஒதுக்கிவிட்டார் அம்மா. மற்றது எப்போதாவது வந்து வேலை செய்துவிட்டுப் போகும் முனியாணிக்கு ஒதுக்கியாயிற்று. அடுத்தது கட்டாடிக்கும், பாபருக்கும் பொதுவில் ஒதுக்கப்பட்டது. இரண்டும் குசினித் தாழ்வாரத்தில் எதிரும் புதிருமாகச் செருகப்பட்டிருக்கும். வீட்டில் யாரும் அதைத் தீண்ட மாட்டார்கள். சம்பந்தப்பட்ட பெர்வழிகள் யாராவது வந்தால் அவர்களே எடுத்துக் கழுவிச் சாப்பிட்டுவிட்டு பின் கழுவி இருந்த இடத்தில் வைத்துவிடவேண்டுமென்பது அம்மாவின் கண்டிப்பான உத்தரவு. இன்னொன்று, தங்கச்சி மூலையில் இருக்கும்போது அவளுக்குச் சாப்பாடு போட்டுக் கொடுப்பது. அது எப்போதும் பரணுக்கு மேல் உட்கார்ந்திருக்கும். அவளுக்கு என்மீது இருக்கும் சந்தேகத்தில் முனியாண்டியுடைய கோப்பையை மாற்றி வைத்துவிட்டேன் என்று ஒருநாள் அண்ணனிடம் மூட்டிக் கொடுத்து வாங்கிய அடியை ஜென்பத்திலும் மறக்க முடியாது.

“என்ன தூக்கமா” என்றான் ஸ்பானிய ந்ண்பன். நினைவை அறுத்துக் கொண்டு பார்த்தேன். ஏகப்பட்ட கோப்பைகள் குவிந்து கிடந்தன. பயப்படாதே நானும் உதவி செய்கிறேன் என்று முறுவலித்தான் அவன். உண்மையில் இங்கு வரும் வாடிக்கையாளர் தொகைக்கு இரண்டு பேரைக் கோப்பை கழுவப் போட்டாலுங்கூடக் காணாது. ஒரு ஆளைப் போட்டுச் சமாளிக்க முயல்கிறான் மனேச்சர் தடியன். “எல்லோரும் நன்றாக வேலை வாங்கிப் பழகிவிட்டார்கள் இப்போது” என்று சொல்லி என்னபி பார்த்தான். நான் தோளைக் குலுக்கிவிட்டு முகட்டைப் பார்த்தேன். அவன் மெளனமாகி விட்டான். பாவம் அவனுக்கும் வேலை அதிகம் தான். வாடிக்கையாளர் மேசையிலிருக்கும் கோப்பைகளைக் கொண்டுவந்து மிசினுக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். மேசைகள் துடைக்க வேண்டும்.இன்னும் எத்தனை சில்லறை வேலைகள். இருந்தும் எனக்கு உதவுகிறேன் என்று வந்து நிற்கும் அவனைப் பார்த்ததும் இதயம் கனைத்தது. ‘தேசம், இனம், மொழி, மதம், எதுவுமே உண்மையான மனிதனைக் குறுக்கிவிடாது’ என்ற வாசகம் ஞாபகத்திறு வந்தது.

எல்லாவற்றையும் தட்டிக் கொட்டி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வரத் தாமதமாகி விட்டிருந்ததது. ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என்று முணுமுணுத்தபடியே கதவைத் திறந்தேன். மனைவி ரீ.வி.யுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள். தமிழ்ப் படம் போட்டிருப்பாள், எல்லாம் கலங்கலாக இருந்திருக்கும். எதுக்கு வம்பு என்று வாயை மூடிக்கொண்டேன். “ஏனப்பா இவ்வளவு நேரம்” என்றாள் அவளே. “கடையில் நல்ல வியாபாரம், பூட்ட நேரமாகிவிட்டது” என்றேன். ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, “சரி, சரி மேலைக் கழுவிக்கொண்டு வாங்கோ சாப்பிட” என்றுவிட்டு மறுபடியும் ரீ.வி.க்குள் புகுந்து கொண்ஆள். நான் குளித்துவிட்டு வரும்போது “சாப்பாடு போட்டிருக்கு, பிள்ளை அழுகிறான்” என்றுவிட்டுப் போய் விட்டாள். சாப்பிட்டு முடிந்ததுமெனக்குள் பெரிய போராட்டமே உருக் கொண்டது. சாப்பிட்ட கோப்பையைக் கழுவுவதா? வேண்டாமா?. நீண்ட நேரம் அப்படியே இருந்தேன். பின் எழுந்து கோப்பையை அப்படியே வைத்துவிட்டு கையைக் கழுவிவிட்டு, ப்டுக்கை அறைக்குப் போனேன். மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். (நன்றி: காலம் சஞ்சிகை)