Sri Lanka

கோதா வென்றால் வடக்கு கிழக்கிற்கு காணி, காவற்துறை அதிகாரங்கள் – கருணா

நவம்பர் 10, 2019

நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தலில் கோதபாய வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சில காணி, காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்படுமென விநாயகமூர்த்தி கருணாகரன் (கருணா) தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தான் பல கோரிக்கைகளை பொதுஜன பெரமுன வேட்பாளர் கோதபாய ராஜபக்சவிடம் முன்வைத்துள்ளதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TUFP) தலைவரான முரளீதரன் ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.

கோதபாய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுபற்றி எதுவுமே குறிப்பிடப்படாத நிலையில், கருணா, பிள்ளையான், வரதராஜ பெருமாள் ஆகியோருடன் செய்துள்ள ஒப்பந்தங்களை வெளியிடும்படி சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுன கட்சியைக் கேட்டுள்ளார். கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை பிரேமதாசவுக்கு வழங்கியது தொடர்பாக, பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளுக்கு விலைபோய்விட்டதாக தேசியப் பாதுகாப்புக் கூக்குரல்களுடன் ராஜபக்ச தரப்பு தேசீய ஜனநாயக முன்னணியை விமர்சித்திருந்தது.

மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களைப் பகிர்வதற்கு வழை செய்த புதிய அரசியலமைப்பை ராஜபக்ச தரப்பு கடுமையாக எதிர்த்து வந்தது.

“எங்களுக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவது காணிப் பிரச்சினை. அதே வேளை, வட கிழக்கு மாகாண மக்களுக்குச் சில காவற்துறை அதிகாரங்களும் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, பயங்கவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலிருக்கும் 124 கைதிகளையும் விடுதலை செய்யவேண்டுமெனவும் கேட்டுள்ளேன். கோதபாய வெற்றிபெற்றவுடன் அவர்களை விடுதலை செய்வார். இவ் விடயங்களில் நடவடிக்கை எடுக்கும்படி அவரை நான் கேட்டிருக்கிறேன் என கருணா தனது பேட்டியின்போது ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

அதே வேளை, யாழ்ப்பாண, மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர்களால் முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாசவிற்கு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவைத் தான் கண்டிப்பதாகவும் கருணா தெரிவித்தார்.