கோதா, மஹிந்த, பசில் மற்றும் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை?
உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது
பொருளாதாரம் மற்றும் நிதி கையாள்தல் முகாமைத்துவத்தில் தவறிழைத்தமை காரணமாக கோதாபய, மஹிந்த, பசில் ராஜபக்சக்கள் மற்றும் 36 பேர் மீது அடிப்படை மனித உரிமைகள் மீதாக பதியப்பட்ட வழக்குகளை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் பணித்துள்ளது. சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு – இலங்கை (Transparency International Srilanka (TISL)) மற்றும் முன்னாள் இலங்கை வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரட்ண, நீச்சல் வீரல் ஜூலியன் போலிங், ஜெஹான் கனகரட்ண மற்றும் பேரா. மஹிம் மெண்டிஸ் ஆகியோரால் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாகப் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த 36 பேரில் பேரா.டபிள்யூ.டி.லக்ஸ்மன், அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர்.அட்டிகல, பி.பி. ஜயசுந்தர, அலி சப்றி ஆகியோரும் அடங்குவர்.
அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை நாணயத்தின் பெறுமதியை ரூ.203 ஆக உயர்த்துவதற்கு நிதிச்சபையினால் எடுக்கப்பட்ட முடிவினால் இலங்கயின் பொருளாதாரம் சரிய ஆரம்பித்தது எனவும் அப்படியிருந்தும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு அவர்கள் காலத்தைக் கடத்தினார்கள் எனவும் இதனால் தான் நாடு மோசமான பொருளாதார நிலையக்குத் தள்ளப்பட்டது எனவும் கூறி அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வழக்கு பதியப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம் நவம்பர் 03ம் திகதிக்கு முன்னர் கணக்கறிக்கை ஒன்றைச் அமர்ப்பிக்க வேண்டுமென கணக்காளர் நாயகத்துக்குக் கட்டளையிட்டிருக்கிறது. இதைவிட வெளிநாட்டுச் செலாவணி அருகியிருக்கும்போதும் ஜனவர் 18, 2022 அன்று தமது முதலீட்டு நண்பர்களின் US$ 500 மில்லியன்பண முறியை (soverign bond) உடனே கொடுத்து அவர்களைக் காப்பாற்றி விட்டிருந்தமை காரணமாகவும் விசாரணை செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் அப்போதைய ஜனாதிபதி ராஜபக்ச, பிரதமர் ராஜபக்ச, நிதியமைச்சர் ராஜபக்ச மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுடனான தொடர்பாடல்களின் பிரதிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்கவிற்கு நீதிமன்றம் பணித்துள்ளது.