‘கோதா போ ஊரில்’ (GotaGo Gama) பொலிஸ் வண்டிகள் அணி
ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுமக்களை மிரட்டும் முயற்சி?
கோதாவை விரட்டும் முயற்சியில் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்துவரும் பொதுமக்களை மிரட்டும் பாணியில் அங்கு பெரும்தொகையான பொலிஸ் வாகன அணியொன்று நிலை நிறுத்தப்பட்டதாகவும் இது குறித்து சமூக வலைத் தளங்களில் செய்தி பரபரப்பானதை அடுத்து தற்போது அவை அகற்றப்பட்டு விட்டனவெனவும் செய்தியொன்று கூறுகிறது.

இது குறித்து இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் தனது கடு எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. “இந்நாட்டு மக்கள் அமைதியான முறையில் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான தமது எதிர்பைத் தெரிவ்த்து வரும் வேளையில் அதைக் குழப்ப முயற்சிப்பது நாட்டிற்கும் அதன் ஜனநாயகம், பொருளாதாரம், சட்டவாட்சி ஆகியவற்றுக்கு பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என இச் சங்கம் எச்சரித்துள்ளது.
காலியில் கிளைவிட்ட ‘கோதா போவூர்’ ஆர்ப்பாட்டம்
இதே வேளை, இம் மக்கள் போராட்டாம் நாட்டின் இதர பகுதிகளுக்கும் இலங்கையர்கள் வாழும் உலகின் இதர நாடுகளுக்கும் விரைவாகப் பரவி வருகிறது. பெற்றோல் பற்றாக்குறையால் காலிமுகத் திடலுக்கு வர முடியாத மக்கள் நேற்று காலியில் ‘கோதா போவூர்’ கிளையொன்றை அமைத்து அங்கும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
ஆர்ப்பாட்டத்தை ஆதரித்த பொலிஸ் அதிகாரி கைது
இதே வேளை காலிமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக வியாழனன்று (ஏப்ரல் 14) கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியைப் பிணையில் எடுப்பதற்காகத் தமது இலவச சேவைகளை வழங்குவதற்கு பெருந்தொகையான வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர். குட்டிகல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இந்த ‘சார்ஜண்ட்’ தரத்திலான பொலிஸ் அதிகாரி நிலையப் பொறுப்பதிகாரிகளுக்குத் தெரிவிக்காமலேயே காலிமுகத் திடலுக்குச் சென்றிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். “மிகவும் ஒழுக்கமுள்ளதான இலங்கை பொலிஸ் திணைக்களத்தை அவமதிப்பதாக இவ்வதிகாரியின் செயல் அமைந்துவிட்டது” என பொலிஸ் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட இவ்வதிகாரியின் மீதான வழக்கு ஏப்ரல் 29 அன்று நீதிமன்றத்தில் எடுக்கப்படவுள்ளது.