கோதாவைக் கைதுசெய்ய சர்வதேச பிடியாணையை அறிவிக்க வேண்டும் – பிரித்தானிய பா.உ. சேர் எட்வேர்ட் டேவீ
முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவையும் அவரது சகபாடிகளையும் கைதுசெய்வதற்கு சர்வதேச பிடியாணை ஒன்றை அறிவிக்க வேண்டும் என பிரித்தானிய லிபரல் டெமோகிரட்டிக் கட்சியின் தலைவர் சேர் எட் டேவீ அவர்கள் பாராளுமன்றத்தில் குரலெழுப்பியிருக்கிறார்.
“இலங்கையில் இன்றிருக்கும் மிக மோசமான நிலைமைக்குக் காரணம் ராஜபக்ச கும்பலின் ஊழல், வரி வெட்டு, தேவைக்கதிகமான பாதுகாப்புச் செலவீனம், மோசமான பொலிஸ் அதிகாரம் ஆகியனவே காரணம். அங்கு நிகழும் நிதி மற்றும் அரசியல் சிக்கல்களிலிருந்து முற்றாக விடுபடுவதற்கு சர்வதேச தோழமை நாடுகளுடன் இணைந்து இலங்கையிலுள்ள ஜனநாயக சக்திகளுக்கு உதவி செய்ய பிரித்தானியா முன்வரவேண்டும். இதை நிறைவேற்றுவதற்கு முதலில் ராஜபக்சமீது பிடியாணை ஒன்றை அறிவிக்க வேண்டும்” என சேர் டேவீ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“முதலில் நாம் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன் அடுத்த கட்டமாக அரசியல் திட்டமொன்றையும் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும். இதில் ராஜபக்ச மற்றும் அவரது சகபாடிகளைக் கைதுசெய்வதற்கான பிடியாணை ஒன்றின் அறிவிப்பும் அடங்க வேண்டும். அத்தோடு அங்கு வாழும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் விதத்தில் அரசியல் தீர்வு அமையவும்வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.