NewsSri LankaWorld

கோதாவுக்கு எதிரான விளம்பரம் – ஸ்கொட்டிஷ் தமிழர்களின் போராட்டம்


31 அக்டோபர் முதல், 12 நவம்பர் வரை நடைபெறும் COP26 சூழல் மாநாட்டில் கலந்துகொள்ளவென இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஸ்கொட்லாந்து செல்கிறார். அவரை ‘வரவேற்கவென’ ஸ்கொட்லாந்து வாழ் தமிழர்கள் அங்கிருந்து வெளிவரும் ‘தி ஹெரால்ட்’ பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரமொன்றைப் பிரசுரித்துள்ளார்கள்.

ஸ்கொட்லாந்து ‘தி ஹெரால்ட்’ பத்திரிகையில் வெளியான ‘கோதா’ விளம்பரம்

“கோதாபய ராஜபக்ச உங்கள் நகருக்கு வருகிறார்” என்று ஆரம்பிக்கும் இவ்விளம்பரம் அவர் ஆதாரங்களுடன் நிரூபிக்கக்கூடிய இனப்படுகொலை புரிந்த ஒரு போர்க்குற்றவாளி” என்பதாக வர்ணிக்கிறது.

உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களுடன் ஒன்றிணைந்து ஸ்கொட்லாந்து வாழும் தமிழர்களால் கோதாபய ராஜபக்சவுக்கு எதிராகச் செய்யப்படும் இந்த விளம்பரத்தில் கோதாபயவும் இலங்கையின் ஆயுதப்படைகளும் இனப்படுகொலையாளிகளாகச் சித்தரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘தி ஹெரால்ட்’, உலகில் வெளிவரும் அதி புராதன செய்தித்தாள்களில் எட்டாவது இடத்தில் இருக்கும் பிரபலமான ஒன்று. அகலத் தாள்களில் அச்சடிக்கப்பட்டு வெளிவரும் இப்பத்திரிகை ஸ்கொட்லாந்தில் அதிகமாக வாசிக்கப்படும் ஒன்றாகும். இதன் அச்சுப் பிரதியிலும், இணையப் பிரதியிலும் தமிழர்களின் இவ் விளம்பரம் வெளிவந்திருக்கிறது.

“போர்க்குற்றவாளிகளை ஸ்கொட்லாந்து மக்கள் தமது மண்ணில் கால் பதிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்ற செய்தியை ராஜபக்ச போன்றவர்களுக்கு கொடுப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம்” என்கிறார் இவ்விளம்பரத் திட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான மாலதி.

“ராஜபக்ச இங்கு வருவதற்கு முனைவாரானால், நீதி பொறுப்புக்கூறல் ஆகியன தொடர்பாக அவர்மீது வழக்குப்பதிவது முதல் பலவகையான நடவடிக்கைகளை நாம் முழுமூச்சுடன் மேற்கொள்ளத் தயாராகவிருக்கிறோம். இலங்கயின் ஒவ்வொரு போர்க்குற்றவாளியும் தண்டிக்கப்பட்டு எமது மக்கள் நீதி, சுதந்திரம், விடுதலை ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளும்வரை நாம் எமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

கோதாவுக்கு எதிரான பிறிதொரு விளம்பரம் (Update)

Image Courtesy: Twitter / Tamil Guardian