Spread the love

சிவதாசன்

இலங்கையின் புதிய அமைச்சரவையும், கூடவே ராஜாங்க அமைச்சரவையும் இன்று (புதன் ஆகஸ்ட் 12) பதவிப்பிரமாணம் எடுத்திருக்கின்றன. பல பெயர்கள் எதிர்பார்க்கப்பட்டன, பல புதிய முகங்கள். தேர்தல்கள் முடிந்து ஒரு வாரத்துக்குள் இந் நிகழ்வு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட கண்டி அரச மாளிகை மண்டபத்தில் கனகச்சிதமாக நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்வு முழுவதையும் முகநூல் நேரடி ஒளிபரப்பில் காட்டினார்கள். பொறாமைப்படும்படியாக இருந்தது.

ஒரு தமிழனென்ற வகையில், கம்பீரமாக முன்வரிசையில் வீற்றிருக்கும் முள்ளிவாய்க்கால் கொலைகார இராணுவத்தினர் எரிச்சலையூட்டினாலும், மிகவும் நேர்த்தியான ஆடை அலங்காரங்களுடன், ஒழுக்கமான முறையில், பிசகேதுமின்றி, வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள், அழுது குழறிகள் எவருமின்றி, இந்நிகழ்வு நடந்தேறியிருந்தது. ஒப்பீட்டுக்கு என் மண்டையின் பின்னணியில் வடமாகாணசபையில் சிவாஜிலிங்கம் செங்கோலை உலக்கையெனக் கொண்டோடித் திரிந்த காட்சி மனதை நெருடியது.

வசதியுள்ளவர்கள், அதிகாரமுள்ளவர்கள் எப்படியும் செய்யலாம் என்ற மன்னிப்பைத் துணைக்கழைக்க முடியாது. நாங்களும் வசதியானவர்கள், எங்களிடமும் 2000 வருடங்களுக்கு முந்திய வாழ்வியல் இருக்கிறது. ஒழுக்கமுடமை பற்றி வள்ளுவனே உரைத்துவிட்டுப் போயிருக்கிறான். பின்பற்றத்தான் ஆட்களில்லை. மனம் குமுறியது, குறுகியது. சரி அதை விடுவோம்.

இவ் விழாவில் சில விடயங்களை அவதானித்தேன். போரின் வெற்றிக்குப் பிறகு கோதாபய தன்னை ஒரு modern துட்ட கெமுனு போன்ற நினைப்புடன் நடக்க முற்படுகிறாரா என்று இருந்த சந்தேகம் இப்போது வலுப்படத் தொடங்கியிருக்கிறது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் அவர் தான் கெமுனுவின் மறு அவதாரம் என்ற வகையில் அவரது பரிவாரம் அவரைப் பல்லக்கில் சுமந்து திரிந்தது. அப்போது கோதாவின் அதிகாரம் வெள்ளைவான் இராச்சியத்துக்கு அப்பால் இருக்கவில்லை. இப்போது நிலைமை வேறு. கோதா உண்மையிலேயே தீக்குளித்து பாவம் கழுவி வந்தவர் போல நடந்த நடந்து கொள்கிறார். முகத்தில் கோபம் கொப்புளிக்கவில்லை, சாந்தமும் புன்னகையும், பணிவும், தன்னடக்கமும், எளிமையும் என மனிதர் ஒரு குணமாற்றத்துக்குள்ளால் (metamorphosis) போயிருக்கிறாரோ அல்லது மிகவும் சிறப்பாக வேடம் தரித்திருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.இந் நிகழ்வில் அவர் ஒரு சிறந்த தலைவருக்குரிய, ஒரு அரசருக்குரிய மிடுக்குடன் தென்படுகிறார். அவரைச் சுற்றியுள்ளவர்கள், மதத் தலைவர்கள், படைத் தலைவர்கள் எல்லோரும் அவரவர் இடத்தில் வாய்மூடி மெளனிகளாக, ஏவலுக்குக் காத்திருப்பவர்கள் போல் இருக்கிறார்கள். அண்ணர் மஹிந்த இழப்பு வீடுகளில் ஓரமாகக் கதிரை போட்டு இருத்திவிட்ட வயோதிபர் போல் அவ்வப்போ காலில் விழுபவர்களை ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் போல மிடுக்காக ‘சண்டிக்கட்டுடன்’ ஏவல்களைச் செய்துகொண்டு திரியவில்லை. I am in very much control எனக் கோதா சொல்வதுபோல் நிகழ்வு இருந்தது, தெரிந்தது.

19 வது திருத்தத்துக்குப் பிறகு இந்த அதிகாரப் போட்டி முன்னுக்கு வந்திருக்கிறது என்கிறார்கள். ஜனாதிபதியின் பற்களை 19 வது திருத்தம் பிடுங்கிவிட்டதுமல்லாலமல், பெட்டிக்குள் பதுங்கியிருந்த பிரதமருக்கு அதிகாரங்களை அள்ளிக்கொடுத்தமை அண்ணன் தம்பிக்குள் கொஞ்சம் கச முசவை உண்டுபண்ணியுள்ளதாகவும், இளவரசர் நாமலுக்கு வரவேண்டிய முடி கோதாவினால் வேறு யாருக்காவது போய்விடக்கூடுமென முன்னாள் பட்டத்து ராணியார் ஷிராந்தி இதற்குக் காரணமெனவும் பல வேலிக் கதைகள் முன்னர் வந்திருந்தன. என்னவோ, இன் நிகழ்வில் மஹிந்த ஓரங்கட்டப்பட்டதுபோல ஒரு feeling.

அமைச்சரவைத் தெரிவிலும் கொஞ்சம் confusion. தேர்தலுக்கு முன் பல்டி மன்னர் சிறிசேன மஹிந்தவோடு ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார். நல்லாட்சி அரசைக் குழப்பி, ரணில் அரசைக் கவிழ்த்தது மட்டுமல்லாது ஐ.நா.வைத் திருப்திப்படுத்த பல பாதுகாப்பு படையினரை உள்ளே தள்ளியது ரணில் தான், நானில்லை என அட்டாங்கமாகக காலில் விழுந்த சிறிசேன எதிர்பார்த்தது, முதலில் தேசியப் பட்டியலில் இடம், அது போகின் ஒரு அமைச்சர் பதவி. இதற்காக அவர் பேரம் பேசியிருந்தது, மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான ஆசனங்களைத் தர சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஒத்துழைப்பது. மூன்றிலிரண்டு ஏறத்தாளக் கிடைத்துவிட்டது ஆனால் மஹிந்த காலை வாரிவிட்டார். பலத்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் இன்றய நிகழ்வில் சிரீசேன missing. ‘தம்பிக்கு விருப்பமில்லையடாப்பா’ என மஹிந்த தொலைபேசியில் அழுதுகொட்டியிருக்கலாம்.

தேசியப் பட்டியலில் இன்னுமொரு notable absentee கருணா அம்மான். முத்தம் கொடுக்காத முறையாகக் கட்டிப்பிடித்து ஆரத்தழுவிய ஒருவருக்கு இந்த நிலை வந்திருக்க வேண்டாம். After all, அம்பாறைத் தமிழாசனத்தை சிங்கள ஆசனமாக மாற்றுவதற்காகக் கடுமையாக உழைத்து வெற்றிகண்ட கருணாவுக்கு இது நடந்திருக்கக்கூடாது. எங்கேயோ தவறு நடந்திருக்கிறது.

பிள்ளையான் விடயத்தில் ராஜபக்ச தரப்பு ‘வைச்சுக்கொண்டு வஞ்சகம்’ செய்திருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே அவருக்கு மந்திரிப்பதவி தருவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கலாம். அம்பாறை, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை மாவட்டங்களில் போல, மட்டக்களப்பிலும் த.தே.கூட்டமைப்பைத் தோற்கடிப்பதுவே ராஜபக்சக்களின் குறியொழிய, பிள்ளையான் வெல்வது அவர்களது நோக்கமல்ல. பாவம் பிள்ளையான் வஞ்சிக்கப்பட்டுவிட்டார். தடுப்புக் காவலில் இருந்து வெளியே வந்தால் அமைச்சுப்பதவி தயாராக இருக்கிறது என ‘அழைப்பு’ வேறு விடுக்கப்பட்டிருந்தது. பிள்ளையனை விட அவரது ஆதரவாளர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். பாவம், நினைத்திருந்தால், கோதாபய பிள்ளையானை விடுதலை செய்திருக்கலாம். ட்றம்ப் நிறைவேற்றுக் கட்டளைகளை (executive orders) எழுதித் தள்ளுவதுபோல், கோதாபய வர்த்தமானி அறிவித்தல்களை (gazette notifications) எழுதித் தள்ளுபவர். பிள்ளையானுக்காக ‘அமைச்சுப் பதவி’ காத்திருக்கிறது என்கிறார்கள். Yeah right தான் மறுமொழி.வியாளேந்திரனுக்கு ராஜாங்க அமைச்சுப் பதவி, தபாலமைச்சு, ஊடகம். என்னவோ இலண்டன், கனடா மட்டுமல்ல இலங்கையிலும் எங்கட மக்களுக்கு நல்லாக ஓடக்கூடிய தொழில்கள் இந்த இரண்டும்தான். டக்ளஸ் மீன்பிடியோடு very happy என்றாலும், அது ‘கபினெட்’ அந்தஸ்து உள்ளது. இராணுவத்தின் அனுமதி பெற்று, பத்து பேருக்கு வேலை வழங்கினாலும் பரவாயில்லை. அத்தோடு அங்கஜன், டக்ளஸ், திலீபன் ஆகியோருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாகப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கஜன் தேர்தலுக்குச் செலவழித்ததை எடுக்க முடியுமோ தெரியாது. முயற்சி இவர்களிடையே பிவினையாக்காதவரைக்கும் சரி, ஒருங்கிணைப்பைப் பிறகு பார்க்கலாம்.

தென்னிலங்கையில் பரபரப்பாகப் பேசப்படும் இன்னுமொரு விடயம், ‘வியாத்மக’ குழு பற்றி. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட 8 பேருடன், தேசியப் பட்டியல் மூலம் சேர்க்கப்பட்ட ஒருவருடன் மொத்தம் 9 பேர் இக்குழுவில் உள்ளனர். இவர்கள் எல்லோரும் ‘மெத்தப் படித்த நிபுணர்கள்’. கோதபய ராஜபக்சவினால் ‘நாட்டைக் கடியெழுப்புவதற்கென’ வடிகட்டியெடுக்கப்பட்ட மூளைசாலிகள். இவர்களது influence ஜனாதிபதி தேர்தலில் இருந்து தொடர்கிறது. பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் கொண்ட இப் புத்திமான்கள் இப் பாராளுமன்றத்தில் ஆங்காங்கே ‘நாட்டப்பட்டிருக்கிறார்கள்’. இவர்கள்தான் கோதாவின் ‘Think Tank’.

உதாரணத்திற்கு மட்டும்: இந்த 9 பேர்களில் ஒருவர், ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரி, Rear Admiral (Retd.) Sarath Weerasekera. ஐ.தே.கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தில் 328,092 அதியுச்ச வாக்குகளைப் பெற்று சாதனை புரிந்தவர். இன்னுமொருவர்டாக்டர் நாளக கொடஹேவா. கம்பஹா மாவட்டத்தின் அதியுச்ச 328,092 வாக்குகளைப் பெற்றவர். இவையொன்றும் தற்செயலான காரியங்களல்ல.

தேசியப் பட்டியல் உறுப்பினரைத் தவிர ஏனையோர் எல்லோரும் அந்தந்த மாவட்டங்களில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள். டாக்டர்கள், எஞ்சினியர்கள், தொழில்நுட்பத் துறையினர் எனப் பல்வகை நிபுணத்துவம் கொண்டவர்கள். கோதாவின், நவீன சிங்கள-பெளத்த தேசத்தின் கனவை நிறைவேற்ற இவர்கள் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஏற்கெனவே கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், வழிப்பறிக்காரரும் தான் அதிகம். அவர்களை வெளியில் விட்டுவிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது. எனவே இது கோதாவின் ஒரு ரகசியத் திட்டம் எனப் பேசப்படுகிறது.

இவர்கள் எல்லோரும் கடும் சிங்கள பெளத்த தேசியவாதிகள், ஒரு வகையில் இனவாதிகள். கோதாவின் இரக்கமற்ற இராணுவச் சீர்மை (military discipline) யை இவர்கள் பாவிக்கிறார்களா அல்லது இவர்களது திறமைகளை கோதா பாவிக்கிறாரா தெரியவில்லை; இது ஒரு தற்போதைய சீனாவின் ஆட்சி மொடெல். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘இன, மத அடையாளமாற்ற’ பிறப்புப் பதிவு இக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று. மியன்மார் முன்னெடுப்பதைப்போல இலங்கையையும் ஒரு சிறுபான்மையினரற்ற நாடாக ஆக்குவதில் கோதாவின் நீண்டகாலத் திட்டத்தின் ஆரம்பம் இந்த அமைச்சரவை நியமனங்களில் தெரிகிறது.இவர்கள் ஒருவருக்கும் கபினெட் அந்தஸ்துள்ள அமைச்சரவைகள் கொடுக்கப்படவில்லை. அது அவர்களுக்குத் தேவையுமில்லை. அவர்கள் ‘பிழைப்பிற்காக’ உள்ளே வரவில்லை. அர்ப்பணிப்போடு வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஏறத்தாழ, ministers without portfolios தான். ஆனாலும் நான்கு ராஜாங்க அமைச்சுகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மஹிந்தவின் பாராளுமன்றம் பாராளுமன்றம் வெறுமனே உலகநாடுகளுக்குக் காட்டப்படும் ஜனநாயகம் மட்டுமே. Welcome to the new Sri Lanka order!. இந்த வியாத்மகவின் கிளைகள், ரொறோண்டோ உடபடப் பல வெளிநாடுகளிலும் உண்டு.

வியத்மக குழுவில் தமிழர்களோ, முஸ்லிம்களோ இல்லை என்பது எதையோ சொல்கிறது.

மஹிந்த ராஜபக்சவோ அல்லது கட்சியின் மூத்த தலைவர்களான ஜி.எல்.பீரீஸ் போன்றவர்களோ அல்லது முன்னாள் மந்திரிகளோ. பெயருக்குப் பதவிகள் பெற்றுள்ளனரே தவிர அதிகாரங்கள் அவர்களிடம் இருக்குமென்பதில்லை. இதனால் சாமல், நாமல், ஷதீந்திரா எனப் பல ராஜபக்ச குடும்பத்தினர் பலர் அமைச்சுப் பதவிகளுடன் ஆடம்பர வாகனங்களில் திரியலாம். ஆனால் ஆட்சியின் மையம் பாராளுமன்றத்தில் இருக்கமாட்டாது என்பது உத்தரவாதம்.

எனவே தான் 19வது திருத்தத்தை மாற்றி எழுத கோதாபய விரும்பவில்லை என பசில், ஜி.எல்.பீரிஸ் போன்றோர் தெரிவிக்கிறார்கள். இப் பாராளுமன்றம் ஒரு கவசமாக மட்டுமே இருக்கும்.

கோதாவின் இராச்சியம் இன்னுமொரு ‘சிகிரியாவில்’ இருக்கிறது. தமிழர்கள் தாங்கள் செய்த தவறுகளுக்காய் இன்னுமொரு 30 வருடங்கள் வனவாசம் செய்யவேண்டும்.

Print Friendly, PDF & Email