News & AnalysisSri Lanka

கோதாவின் பாதை | அனுரகுமார திசநாயக்காவுக்கு வீரசேகர, சேனாதிபதி கொலை மிரட்டல்

இலங்கையில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது என்பதை உறுதிசெய்யும் வகையில் பல சம்பங்கள் நடந்துவருகின்றன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா மற்றும் அவான் கார்ட் ஆயுத வியாபாரியான முன்னாள் இராணுவ ஜெனெரல் சேனாதிபதி ஆகியோர் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்காவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள செய்தி தலைநகர் கொழும்பில் பலத்த அதிர்ச்சியலைகளை எழுப்பி வருகிறது.

“அரசாங்கத்தின் தோல்விகள் மற்றும் இயலாமையினால் அதிருப்தியடைந்துவரும் மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ‘புஸ் வெடிகளை’ விட்டுக்கொண்டிருக்கிறார். நாடு எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்வதை விட்டுவிட்டு மக்கள் அவற்றில் கவனத்தைச் செலுத்தாதிருக்கும் வகையில் உணர்வுபூர்வமான அறிக்கைகளை விடுத்து அதனால் ஊடகங்களைப் பரபரப்பாக ஆகிவிட்டுச் சில நாட்களின் பின்னர் அவ்வறிக்கைகளை மீளப்பெறும் நடவடிக்கைகளையே அமைச்சர் செய்துகொண்டிருக்கிறார்” என்ற கருத்தில் சமீபத்தில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்கா பேசியிருந்தமைக்குப் பதிலளிக்கும் வகையில் வீரசேகராவும் சேனாதிபதியும் இக் கொலை மிரட்டல்களை விட்டுள்ளனர்.

 

லசந்த விக்கிரமதுங்க, கீத் நொயாஹர், பிரகீத் எக்நெலியகொட

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சரத் வீரசேகர ” உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையை ஜே.வி.பி. தனது தேசியப் பட்டியலில் சேர்த்துக்கொண்டமைக்கான பரிசை அவர் விரைவில் பெற்றுக்கொள்வார். அரசாங்கம் ‘வெற்றுச் சன்னங்களைப்’ பாவிக்கிறதா அல்லது உண்மையான சன்னங்களைப் பாவிக்கிறதா என்பதை ஜே.வி.பி. யின் தலைவர் விரைவில் புரிந்துகொள்வார்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதே போன்று, இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ பிரிவின் முன்னாள் மேஜர் நிசாங்க சேனாதிபதியும் ஜே.வி.பி. தலைவரை மிரட்டியுள்ளார். “அரசாங்கத்துக்கு எதிரான கெட்ட பெயரைக் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டிவரும் ஜே.வி.பி. தலைவருக்கு எனது எச்சரிக்கை. எனக்கு கீழே பணி புரிந்த உணர்ச்சி மேலிட்ட 6,000 இரண்டாயிரம் இராணுவத்தினரைத் தன்னால் இனிமேலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் போய்விடும்” என சேனாதிபதி மிரட்டியுள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான நிசாங்க சேனாதிபதி நிர்வகிக்கும் நிறுவனமான அவான் கார்ட் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனமாக இயங்கி வருகிறது. இதில் பணி புரிபவர்கள் பெரும்பாலும் முன்னாள் இராணுவத்தினர். போர் முடிந்த கையோடு இந் நிறுவனம் கோதாபயவின் இலக்குக்குள் வந்ததென்றும் இதன் மூலம் அவர் பெருந்தொகையான பணமீட்டியுள்ளதாகவும் முன்னர் பேசப்பட்டது. நாட்டின் தேசிய பாதுகாப்பின் தேவைக்காக அது இயங்குவதாக அப்போது கூறப்பட்டது. அவான் கார்ட்டுக்குச் சொந்தமான கப்பல்கள் ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன எனவும், மாலைதீவில் மேற்கொள்ளப்பட்ட சதியொன்றில் இது சம்பந்தப்பட்டிருந்ததெனவும் பேசப்பட்டது. இப்படியான மர்மமான சூழ்நிலைகளில் இயங்கும் நிறுவனத்தின் அதிபர் சேனாதிபதி மக்களால் தெரியப்பட்ட பா.உ. திசநாயக்காவை எச்சரிக்க வேண்டிய தேவை என்ன?

இந்த வாரம் வெளியான ஒரு ஊடக நேர்காணலில் சேனாதிபதி ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்காவிற்கும், சமாகி ஜன பலவேகய கட்சியைச் சேர்ந்த அசோகா அபயசிங்கவிற்கும் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘தனது ஆட்களை’ த் தேவையில்லாமல் பரீட்சிக்க வேண்டாமென அவர் எச்சரித்திருக்கிறார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் கோதாபயவும் பசிலும் இருப்பதாகவும் அக்குண்டுத்தாக்குதலுக்குப் பணம் வழங்கியது அவான் கார்ட் தலைவர் சேனாதிபதியே எனவும் அபயசிங்க சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்காக அவரைக் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரித்திருந்தனர்.

அபயசிங்காவின் இப் பேச்சின் மூலம் அவர் நாட்டில் கலகத்தைத் தூண்டுவதற்கு முயற்சிக்கிறார் எனவும் அவரின் கூற்றுக்கு எதிர்வினையாற்றத் தனது ‘ஆட்கள்’ தயாராகியபோது தான் தடுத்து நிறுத்தியிருந்ததாகவும் சேனாதிபதி கூறியிருந்தார்.

“அசோகா அபயசிங்க அண்ட் கோ கவனமாக இருக்கவேண்டும். எனது ‘வீரர்கள்’ மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அவர்களைக் கட்டுப்படுத்த நான் மிகவும் சிரமப்படவேண்டி வந்துவிட்டது” என அவர் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ஜே.வி.பி. நாட்டின் ஒரு கொள்ளைநோய் எனவும் அடுத்த தேர்தலில் அவர்களது வாக்குகளைப் பூச்சியமாக்கி விடுவேன். அவர்களில் ஒருவர்கூடப் பாராளுமன்றம் போகமாட்டார்கள். இதைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். இதைச் சாதிக்க நான் எனது சொத்து முழுவதையும் செலவழிக்கத் தயார்” என அவர் தெரிவித்தார்.

கோதாபய ராஜபக்சவின் பாதையில்

சமீபத்தில் எதிர்க்கட்சி பா.உ. ஹரின் ஃபெர்ணாண்டோவின் ‘நந்தசேன’ பேச்சினால் ஆத்திரமடைந்த கோதாபய பொதுக்கூட்டமொன்றில் பேசும்போது ” என்னைப் பழைய பாதுகாப்பு செயலாளராக மாறும்படி புத்த பிக்குகள் கேட்கிறார்கள். பிரபாகரனை நாய் போல இழுத்துவந்த என்னை அந்த நிலைக்குக் கொண்டுபோகவேண்டாம்” என எச்சரித்திருந்தார். அதன் பிறகு பல கோதாபயவை விமர்சிப்பதைப் பலரும் தவிர்த்து வந்தனர்.

கோதாபய ராஜபக்ச இந்த விடயங்களில் மிக மோசமானவர் என்பது பலருக்கும் தெரியும். தமிழ் ஊடகவியலாளர் வித்யாதரன் உட்படப் பல ஊடகவியலாளர்களைக் கடத்தித் துன்புறுத்தியமைக்குப் பின்னால் கோதாபய இருக்கிறார் என்பது பலராலும் கருதப்படும் விடயம். சில ஊடகவியலாளர் கொல்லப்பட்டும், சிலர் நாட்டை விட்டு ஓடித்தப்பியும் உள்ளார்கள். சிலர் திரும்பி வந்து அவரது பாதங்களில் விழுந்தவர்களும் உண்டு.

ஜூன் 2008 இல் பொட்டல ஜயந்தா, சனத் பாலசூரியா ஆகிய இரு லேக் ஹவுஸ் பத்திரிகையாளர்களைத் தன் அலுவலகத்துக்கு அழைத்து எச்சரித்திருந்தார் கோதாபய. அவர்களது எழுத்துக்கள், அப்போதைய இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவை எரிச்சல் படுத்தியமைக்காக, ஃபொன்சேகாவின் முறைப்பாட்டுக்கமையை கோதாபய இந்நடவடிக்கையை எடுத்திருந்தார்.

“சரத் ஃபொன்சேகா இராணுவத்தினருக்குக் கடவுள் போன்றவர். அவர்களைக் கட்டுப்படுத்த என்னால் முடியாமல் போகலாம். எதுவும் நடந்தால் அப்போது என்னிடம் கண்ணீர் சிந்த வந்து நிற்காதீர்கள்” என அப்போது கோதாபய எச்சரித்திருந்தார். இது நடிபெற்று ஒரு வருடத்துக்குள் ஜயந்த கடத்தப்பட்டு மோசமாகத் தாக்கப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்டிருந்தார்.

மேற்படி அலுவலக எச்சரிக்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ‘தி நாஷன்’ பத்திரிகை ஆசிரியர் கீத் நொயாஹர் கடத்தப்பட்டு மோசமாகத் தாக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். ரக்பி விளையாட்டுக்காரர் சம்ஜுடீனின் கொலை விடயத்தில் கோதாபயவிற்குச் சம்பந்தம் இருக்கலாமென எழுதியமைக்காக நொயாஹர் கடத்தப்பட்டிருந்தார். அவரது சக ஊடகவியலாளரின் உடனடி நடவடிக்கையால் அவர் காப்பாற்றப் பட்டிருந்தார்.

வித்தியாதரன் விடயத்தில் மஹிந்த ராஜபக்ச தலையிட்டு அவரைக் காப்பாற்றியதாகக் கேள்வி.

2010 இல் அப்போதைய ‘சண்டே லீடர்’ ஆசிரியர் ஃபிரெடெரிக்கா ஜான்ஸ் மீதும் கோதாபய இதே போன்ற காரியத்தைச் செய்திருந்தார். தனது மனைவிக்காக ஒரு நாய்க்குட்டியை விமான மூலம் கூரியர் செய்து கொழும்புக்குக் கொண்டுவந்திருந்தமையை விமர்சித்து எழுதியமைக்காக கோதாபய அவரைக் கூப்பிட்டு எச்ச்சரித்திருந்தார். ” மக்கள் உன்னைக் கொல்வார்கள்” என அவரது அப்போது எச்சரிக்கை இருந்தது.

கோதாபயவின் அமெரிக்கக் குடியுரிமை துறப்பு விடயத்தில் விமர்சித்தமைக்காக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, ஊடகவியலாளர் காமினி வியாங்கொட ஆகொயோருக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

ஜான்ஸ், பாலசூரியா, ஜயந்தா, நொயாஹர் உட்படப் பல ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். லசாந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட ஆகியோருக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை.