கோதாவின் சிங்கப்பூர் பயணம், பாராளுமன்ற ஒத்திவைப்பு – பின்னணி என்ன?
மாயமான்
நடு இரவில் திடீரெனப் பாயைச் சுருட்டிக்கொண்டு வெளியே ஓடும் ஒருவரைப் பற்றிப் பல வியாக்கியானங்கள் எழுவதைத் தவிர்க்கமுடியாது. கோதாவின் சிங்கப்பூருக்கான தாவலையும் இப்படித்தான் பார்க்க வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கும், தனவந்தர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சிங்கப்பூர், கிட்டத்தட்ட கனடியத் தமிழர்களின் ‘கியூபா’ மாதிரி. வீட்டில் மனைவியோடு சணடை என்றதும் உடனே ‘ரிக்கெட் புக்’ பண்ணும் அதே வியாதி தான்.
“பாவம் மனிசன் நெஞ்சுக்குள்ள நொந்திருக்கும் அதை உடனே செக் பண்ணவேணும் எண்டு போயிருப்பார்” என்பது ஒரு வாதம். ஊரில் பிரச்சினை என்றதும் வெளிநாடு ஓடும் பழக்கம் கோதாவின் பிறவிக்குணம் என்பது இன்னொரு வாதம். போர் முடிந்த கையோடு அமெரிக்காவுக்கு ஓடினார். விவசாயிகள் ஊர்வலங்கள் வைக்கும்போது நியூ யோர்க் ஓடினார். பங்காளிக் கட்சிகள் போர்க்கொடி தூக்கும்போது ஸ்கொட்லாந்துக்கு ஓடினார். இப்போது யுகதனாவி மின்னிலையத்தை அமெரிக்காவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார் என கையில் ஆதாரங்களோடு பாராளுமன்றத்தில் சீனாவின் செந்தோழர்கள் ஒரு கை பார்க்கிறோம் எனத் தயாராகுகையில் ‘ஆள் மிஸ்ஸிங்’. இது குறித்து கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் ஒருவர் இப்படிக் கிண்டலடித்திருந்தார்: “உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களுக்கு முதல்நாள் இப்படித்தான் கோதா சிங்கப்பூர் சென்றிருந்தார். இந்தத் தடவையும் அவர் இல்லாதபோது கொழும்பில் குண்டு வெடிக்கக்கூடாது என்று இறைஞ்சுகிறேன்”.
நாடு ஸ்தம்பித்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. அதற்கான பல புறக்காரணிகள் இருந்தும், தப்பியோடுவதற்கான பல பாதைகளை அவை வழங்கியிருந்தும் மனிசன் ‘ஆர்கானிக் பசளை’ என்ற ஆப்பை இழுப்பதிலேயே மினக்கெட்டார். ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த வரிச்சலுகை மூலம் கஜானாவுக்குக் காசு வருவது குறைந்தது. உயிர்த்த ஞாயிறுத் திட்டத்தை அரங்கேற்றி ஆட்சியைக் கைப்பற்றியதன்மூலம் அவர் இழுத்த ஆப்பினால் நாட்டின் உல்லாசப்பயண வருமானம் காய்ந்துபோனது. இப்போது இலங்கையின் வரலாற்றிலேயே முதல் தடவையாக வெளிநாட்டுச் செலாவணி தேக்கம் $1.3 பில்லியனுக்கு வற்றிப் போய்விட்டது. வேறு வழியில்லாமல் ஒதுங்கியிருந்த troubleshooter பசில் பிரதரைக் கொண்டுவரவேண்டி ஏற்பட்டிருக்கிறது. அவரது நிபந்தனைகள் நாட்டைச் சீனா பக்கமிருந்து அமெரிக்க , இந்திய நலன்களைக் கவனிப்பதாக இருந்தன. பசிலரின் அடுத்தகட்ட நகர்வையே கோதாவின் இப்பயணம் காட்டுகிறது என்பது எனது எண்ணம்.
மூன்று ராஜபக்சக்களிலும் ஓரளவு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயற்படுபவர் பசில் பிரதர் எனக்கூறப்படுகிறது. வார்த்தை ஜாலங்களிலும், ஏமாற்று வித்தைகளிலும் மஹிந்த கெட்டிக்காரர். அவரிடம் தமிழர்கள் மட்டுமல்ல இந்தியாவும், அமெரிக்காவும் ஏமாந்ததின் முடிவுதான் இறுதிப் போர். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம் என்று அறிவித்ததன் பின்னரும் அதற்கு முன்னதாகப் பேரம்பேசி விடுதலைப்புலிகளின் 100 மூத்த தலைவர்களையும் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக மூன்றாவது நாடொன்றுக்கு அனுப்புவது, அரசியல் பிரிவைச்சேர்ந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவது என்ற தீர்மானத்தின் அரச தரப்பு பிரதிநிதியாகச் செயற்பட்டு இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் வாக்குறுதியைக் கொடுத்தது பசில் பிரதர் என்கிறார்கள். ஆனால் அண்ணன்மார் இருவரும் ஆட்டையைப் போட்டுவிட்டார்கள். இதைக் கூறுவதற்குக் காரணம் பசில் பிரதர் மீதான ஒரு character build up என நீங்கள் நினைக்கலாம். அதில் உண்மையும் இருக்கிறது.
பொருளாதாரத்தில் நாடு அதலபாதாளத்தை நோக்கிப் போகிறது என அறிந்த பின்னர் தான் அண்ணன்மார் troubleshooter தம்பியை நாடுகிறார்கள். நாட்டை மீட்டெடுப்பது தமது ராஜபக்ச ராச்சியத்தை நிறுவுவதற்கு அத்தியாவசியமானது என்பதை உணர்ந்தபின்னர் கோதாவின் ஆலோசனைக்குழுவான வியத்மக கல்லாநிதிகள் (நன்றி: தாயகம் ஜோர்ஜ்) ஓரங்கட்டப்பட்டு அதிகாரம் பசில் பிரதரிடம் கைமாறுகிறது. அதற்குப் பின்னர் சீனா out, இந்தியா , அமெரிக்கா in. இப்போது அவர் இந்திய-அமெரிக்க ‘ஏகாதிபத்திய’ அங்கிள்களின் பாலகுமாரன்.
அமைதிப்படை கையாள்தலில் கைகளை வெட்டிக்கொண்டதற்குப் பின்னர் இந்தியா தனது கையாளலை soft approach ஆகவே மேற்கொண்டு வருகின்றது. இலங்கை விடயத்தில் அமெரிக்க ஆலோசனையின்றி இந்தியாவோ, இந்திய ஆலோசனையின்றி அமெரிக்காவோ இயங்குவது மாதிரித் தெரியவில்லை. காரணம் தென்னிலங்கை தீவிர சிங்களவாதிகளுக்கு இந்தியா நிரந்தர எதிரி. அமெரிக்கா சந்தர்ப்ப எதிரி. சீனா நிரந்தர நண்பன். இந்தச் சமன்பாட்டில் அவ்வப்போ யப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா ஆகியன சில சமன்படுத்துக் காரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த சில வாரங்களில் நடைபெற்ற இலங்கை சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளில் இச் சமன்பாட்டின் பிரயோகம் பாவிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க வருகை. இதில் சமபந்தப்பட்ட அனைத்துப் பங்காளிகளும் ‘அமத்தி வாசிக்கிறார்கள்’ என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போரின்போது மஹிந்த இப்பங்காளிகளுக்குக் கொடுத்த ஒரு வாக்குறுதியையேனும் நிறைவேற்றவில்லை. எனவே இந்தத் தடவை இப்பங்காளிகள் இலங்கை மீதான தமது வலையை வேறுவிதமாகப் பின்னுகிறார்கள். இதில் மஹிந்தா அவுட். இது தமிழருக்கு உதவி செய்வதற்காகச் செய்யப்படுமொன்றில்லை. அவர்களின் சொந்த நலனுக்காகவென்றாலும் இதனால் உதிரப்போகும் விளைபொருள் நிச்சயமாகத் தமிழருக்கு நலந்தருமென்ற நம்பிக்கை இருக்கிறது. அமெரிக்காவுக்கு வந்து போனதற்குப் பிறகு சுமந்திரன் அண்ட் கோ வின் அதிநம்பிக்கை தரும் (மிடுக்குத்தனமான என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்) கருத்துக்கள் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல இருப்பதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள். “இவர்களென்ன 13ஐப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் 13 பிளஸைத் தருவதாக மஹிந்தவே சொல்லிவிட்டார்” எனச் சுமந்திரன் வழக்கமான தொனியில் பேசுவது ‘something big is in the making’ என்ற ஒரு உணர்வைத் தருகிறது.
இந்தத் தடவை இந்த ‘ஏகாதிபத்தியக் கூட்டணி’ இரண்டு வழிகளில் இலங்கைக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒன்று உள்ளிருந்து, மற்றது வெளியிருந்து. உள்ளிருந்து எடுக்கப்படும் போராட்டத்துக்கு அவர்கள் பாவிப்பது பசில் பிரதரை. வெளியிருந்து தமது ராஜதந்திர இயந்திரத்தை. இலங்கையின் பொருளாதாரச் சீரழிவு உச்சத்தில் இருப்பது சாதகமாக இருப்பினும், இன்னும் GSP+, IMF போன்ற ஆயுதங்கள் கைவசம் இருக்கின்றன. அதே வேளை ‘ஓர்கானிக்’ உரக் கொள்கை என்ற ஆப்பை இழுத்தே தீருவேன் என்ற நிலையிலிருந்து கோதா வெளிவர மறுக்கும் நிலை பசில் பிரதருக்குச் சங்கடமாக இருப்பினும் இந்த ஏகாதிபத்தியக் கூட்டணியைப் பாவித்து முதலில் நாட்டைப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீட்டுக்கொள்வதே பசில் பிரதரின் நோக்கம். இதன் ராஜபக்சக்கள் இழந்த பிரகாசத்தை மீட்டுவிடலாமென்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக இந்த ஏகாதிபத்தியக் கூட்டணிக்கு சில சலுகைகளைச் செய்ய அவர் தயாராகவுள்ளார். இதில் தெற்கில் அமெரிக்க முதலீடுகளும், வடக்கு கிழக்கில் இந்திய முதலீடுகளும் முன்னணி வகுக்கும். தமிழருக்கு அதிகாரப் பரவலாக்கத்தைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் இந்தியா தனது முதலீடுகளைப் பாதுகாத்துக்கொள்ளும் அதே வேளை தெற்கில் அமெரிக்க முதலீடுகளின் மூலம் சீனாவைப் புறந்தள்ளும் நடவடிக்கைகளை அமெரிக்கா பார்த்துக்கொள்ளும்.
கூட்டமைப்பின் அமெரிக்க வருகையும் அதைத் தொடர்ந்து காங்கிரஸில் இரண்டு சபைகளின் (செனட் + ஹவுஸ்) ஒன்றிணைந்த அழுத்தத்தின் பின்னர் ராஜாங்கச் செயலாளர் அந்தொனி பிளிங்கன் இரு இலங்கை படையதிகாரிகள் மீது பயணத்தடை விதிப்பதும் ‘இது ஒரு ஆரம்பம் மட்டுமே’ என்றொரு அச்சத்தை இலங்கை அரசுக்குத் தருவாதாக இருக்கலாம். இப்பேச்சுவார்த்தைகளில் பங்குபெறுவதற்கு அழைக்கப்பட்ட பல்வேறு தரப்புகளின் தெரிவு அரசியலுக்கு அப்பால் சென்றிருக்கிறது. இவர்களைத் தெரிவதில் சுமந்திரனின் கை பலமாக இருந்திருக்கிறது என்பது துலாம்பரமாகத் தெரிகிறது. ‘ராஜாங்கத் திணைக்களம்’ அவர்களை அழைக்கவில்லை எனப் பரிதாபமாகக் குரலெழுப்புபவர்களைப் பார்த்துக் கண்ணீர் தான் வருகிறது. அது ஒருவகைப் பொறாமையின் வெளிப்பாடு. ஆனால் முந்திய தடவைகள் போல சில தமிழ் உறுப்பினர்களை ராஜாங்கத் திணைக்களத்தின் உணவுச்சாலையில் வைத்துப் பேசிவிட்டு அனுப்பிய மாதிரி இந்தத் தடவை நடைபெறவில்லை. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் வாய்ப்பூட்டோடு திரிகிறார்கள் எனவே படுகிறது.
கோதாவின் பாய்ச்சல்
இந்நிலையில் கோதா ஏன் திடீரென சிங்கப்பூர் போனார் எனபது குறித்துப் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சுகாதாரப் பரிசோதனை என்பது எப்போதுமே ஒரு ready made answer. அதே வேளை உண்மையாக சுகாதாரக் காரணங்களுக்காக்ச் செல்வதை ‘குடும்ப விடயமாகச் சென்றிருக்கிறார்’ எனக் கூறுவதும் வழமை. ஆனால் பாராளுமன்ற அமர்வைத் தற்காலிகமாக – ஒரு வாரத்துக்கு- இடைநிறுத்திவிட்டு, அதுவும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அவசரம் அவசரமாக வெளியிட்டு பாராளுமன்றத்தை முடக்கிவிட்டு ஏன் செல்ல வேண்டும்? இதற்கு முன்னர் 20 ஆவது திருத்தம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்க அதிக காலத்தைக் கொடுக்ககூடாது என்பதற்காக விடுமுறை நாட்களைப் பயன்படுத்தியது போலவே இம்முறையும் நத்தார் / புதுவருட விடுமுறை நாட்களைப் பாவித்துக் கால அவகாசம் பெற்றுக்கொள்வது எதற்காக?
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன எனச் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஒன்று – கெரவலப்பிட்டியவில் அமைந்திருக்கும் யுகதனாவி மின்னிலையத்தின் 40% மான பங்குகளை அமெரிக்காவின் New Fortress Energy நிறுவனத்துக்கு விற்றமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை ஆளுங்கட்சியின் பங்காளிகளுடன் மோதலை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வொப்பந்தத்தின் பின்னணி பற்றி இரண்டு வருடங்களுக்கு எதுவுமே வெளியிடப்படமாட்டாது என இரு தரப்பும் இரகசிய ஒப்பந்தம் செய்திருந்தனவெனவும் தற்போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார இதுபற்றிய ஒரு ஆதார ஆவணத்தைக் கையில் வைத்துக்கொண்டு மிரட்டுகிறார் எனவும் கூறப்படுகிறது. மற்றது சர்வதேச நாணைய நிதியத்திடம் (IMF) கடன் வாங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தைப் பெறுவது. இவ்விரண்டு விடயங்களும் திங்களன்று (ஜனவரி 10) அமைச்சரவை விவாதத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன எனவும் இவ்விரண்டு விடயங்களும் அதில் தோற்கடிக்கப்படக்கூடிய நிலை ஏற்படுமெனவும் ராஜபக்சக்களுக்குத் தெரிந்தபடியால் தான் இந்த பின்வாங்கல் எனவும் கூறப்படுகிறது.
அதே வேளை தலைமன்னாரிலும், பூனகரியிலும் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு கொடுப்பதாக பசில் பிரதரால் வாக்குறுதியளிக்கப்பட்ட திட்டங்களுக்கு எதிராக ராஜபக்சக்களின் செந்தோழர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து வருகிறார்கள். இதற்குப் பின்னணியில் சீனாவைத் தவிர வேறெதும் இருக்க முடியாது. எனவே இந்த சகோதர முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியே வருவதற்கான திட்டமிடுதல், கால அவகாசம் வாங்குதல், எதிர்நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் காரணமாக ராஜபக்ச அண்ட் கோ இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம். இதன் பின்னணியில் பசிலும் அவரது பின்னணியில் ‘ஏகாதிபத்தியக் கூட்டணியும்’ இருந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. (இந்தளவு தூரத்துக்கு திட்டமிடும் தகைமை கோதாவுக்கு இருக்கமுடியாது என்பதில் உங்களுடன் நானும் உடன்படுகிறேன்). அத்தோடு இதுவரை கோதாவின் கையைப் பிடித்துக் கையெழுத்துப் போட்டு வந்தவரான அவரது செயலாளர் டாக்டர் பி.பி.ஜயசுந்தரவின் பதவிக்கும் ஆபத்து வந்திருக்கிறது என்ற செய்தியும் கசிந்துள்ள நிலையில், அரசாங்கத்துக்குள் பசில் பிரதரின் கை ஓங்கிவருகிறது எனவும், அது உண்மையாகும் படசத்தில் அவரது handlers ஆன ஏகாதிபத்தியக் கூட்டணியும், அதில் உதிரும் குறுணிகளாகத் தமிழருக்கு ‘ஏதாவதும்’ கிடைக்கலாம். அதை 13+ ஆக்குவதற்கு நமது விக்கிரமாதித்தர்கள் முயல்கிறார்கள். வெற்றி கிடைத்தால் நல்லதே.
அதற்கு கோதா தனது ஆப்பை இழுப்பது அவசியம்.