Columnsசிவதாசன்

கோதாவின் இலங்கை…

நமோ நமோ மாதா…
சிவதாசன்
துட்டகைமுனு

அண்ணன் பிரதமர், தம்பி ஜனாதிபதி இதர குடும்பத்தினர், வாரிசுகள், மதகுருமார், மந்திராலோசகர் புடைசூழ ராஜபக்ச வம்சம் ஆட்சியிலமர்ந்தது தெய்வ அனுக்கிரகமெனச் சிங்கள பெளத்த குடிமக்களும் ஆடிப் பாடி மகிழ்கிறார்கள். நாட்டு மக்களின் கொண்டாட்டங்களைப் பார்க்க இன்னும் ஒரிரு தலைமுறைகளுக்கு அவர்களது ஆட்சி தான் போலிருக்கிறது.

30 ஆண்டு போரில் தமிழர் வெல்லப்பட்டுக் கந்தக வாடை காற்றை விட்டு நீங்க முன்னரே, 2015 இல் நடந்த தேர்தலில் தூக்கியெறியப்பட்ட ராஜபக்சவினரைச் சிங்கள மக்கள் திருப்பியழைத்தது ஏன்? அதுவும் அந்தளவு மூர்க்கத்துடன்?

காரணம் முழுக்க முழுக்க ரணில் – மைத்திரி கூட்டரசாங்கம் தான். ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்றது அராஜகம் என்பதன் அங்கீகாரம் தான் அவர்களைத் தூக்கியெறிந்துவிட்டு ரணில்- மைத்திரியிடம் மக்கள் ஆட்சியைக் கொடுத்தது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் செயற்படுத்துவோம், நீதித் துறையைச் சுதந்திர அங்கமாக்குவோம் என்று சொன்னதைப் பெரும்பான்மை, சிறுபான்மை இருபாலாரும் நம்பி அவர்களை ஆட்சியில் அமர்த்தினர்.

புதிய துடைப்பம் ஆரம்பத்தில் நன்றாகக் கூட்டியது உண்மை. சில அழுக்குகள் அப்பால் தள்ளிவிடப்பட்டன, அகற்றப்படவில்லை. ஊழல், உறவினரைப் பதவிகளிலமர்த்தல் என்பன எங்கும் போகவில்லை. ரணில்-மைத்திரி கூட்டு பகிரங்கமாக வெடித்தது. முஸ்லிம் பயங்கரவாதத்தைத் தடுக்கமுடியாமற் போனதற்கு இவ்விருவரும் தமக்குள் பிடுங்குப்பட்டதுவே காரணம். இவர்களை விட ராஜபக்சக்கள் எவ்வளவோ பரவாயில்லை என்னும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள்.

ரணில்-மைத்திரி குதிரைகளை நம்பிக் காசு கட்டியவர்கள் பலர். வாக்களித்த மக்கள், மேற்கு நாடுகள், சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தென்னிலங்கை மிதவாதிகள், கல்விமான்கள், ஜனநாயகவாதிகள் எனப் பலர். அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாக ஓடும் ரயிலிக்கு முன் எறிந்தது இந்தக் கூட்டு. முற்றிலும் சுய தேவைகளுக்காகவும், ஒருவரை ஒருவர் பழிவாங்குவதற்காகவும் மட்டுமே தான்.

விளைவு, ராஜபக்ச ஆட்சி. வாக்களித்த மக்களைக் குறைசொல்ல முடியாது.

ராஜபக்சக்கள் தந்திரவாதிகள், சாமர்த்தியவதிகள். சென்ற தடவை விட்ட தவறுகளைப் புரிந்து பாதைகளைக் கொஞ்சமேனும் மாற்றிக் கொண்டவர்கள். சிங்கள மக்களது வாக்குகளை மட்டும் கொண்டு வெற்றிபெற வேண்டுமெனச் சொல்லித் திட்டமிட்டுச் செய்துகாட்டியிருக்கிறார்கள்.

உண்மையில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையில் தான் தமிழருக்கு தீர்வு பெற்றுத் தரும் வல்லமை இருந்தது. அதற்கு ஒரு நல்ல பண்பாளரான ஜனாதிபதியைத் தெரிந்தெடுக்கும் பலம் சிறுபான்மையினரிடம் இருந்தது. மைத்திரி அப்படியானவர் எனப் பலரும் புளகாங்கிதமடைந்தார்கள். இறுதியில் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை ரணில்-மைத்திரி என்ற இரண்டு ஆண்டிகளும் கூத்தாடிக் கூத்தாடி உடைத்துவிட்டார்கள்.

பாராளுமன்றம் தமிழருக்கான தீர்வைத் தரும் வல்லமையற்றது. மூன்றில் இரண்டு பங்கு வாக்களித்து தமிழருக்கு ஒரு தீர்வை, மஹாவம்ச மனநிலையைக் கொண்ட சிங்கள மக்கள் தரமாட்டார்கள். கடந்த இரண்டாயிரம் வருடங்களாக தமிழர்பால் கொண்டிருக்கும் பயம் அவர்களுக்கு. சோழர்களுக்கு எதிராகப் பாண்டியர்களோடு கூட்டுச் சேர்ந்து தங்களைப் பாதுகாத்தவர்களுக்கு, பிரபாகரனுக்கு எதிராக கருணாவோடு கூட்டுச் சேர்ந்து தங்களைப் பாதுகாத்துக்கொண்டவர்களுக்கு, இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் தம்மைப் பாதுகாக்கும் வழிவகைகள் தெரியும். கங்கை, கடாரம் வென்ற தமிழ்ப்படைகளுக்கு அருகிலிருந்த இலங்கையைப் பிடிக்க முடியவில்லை. சிங்களம் எதையோ சரியாகச் செய்கிறது.

சின்னப் பாம்பென்றாலும் பெரிய தடியால் அடிக்கவேண்டுமென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சொல்பவர். முள்ளிவாய்க்காலை அடைந்தபோது அவரிடம் பெரிய தடியல்ல, சின்னத் தடிகூட இருக்கவில்லை. கள யதார்த்தம் தத்துவங்களைக் கூசாமல் உடைத்துவிட்டது.

இனித் தமிழர் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளவேண்டும். 30 வருட அஹிம்சை பலனளிக்கவில்லை. 30 வருட ஆயுதப் போராட்டம் பலனளிக்கவில்லை. அடுத்த 30 வருடம்?

ராஜபக்ச வம்சம் நீண்ட நெடுங்காலத்துக்கு வேரோடி விருட்சமாக வளரும் திட்டத்துடன் வந்திருக்கிறது. துட்டகைமுனுவிடம் ஆசிபெற்றுக் கோதபாய ஆட்சியமைத்திருக்கிறார். தமிழர் சிந்திய இரத்தமெல்லாம் சிங்கள தேசத்தின் நன்மைக்காகவென அவர் மனதார நம்பும்வரைக்கும் குற்ற உணர்வு அவரைத் தாக்கப்போவதில்லை. அவர் தொடர்ந்தும் அவராகவே இருப்பார். அவரிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது.

சோழ மன்னன் எல்லாளனின் விதிமுறை தழுவாத போர்முறைகளை மதித்து துட்ட கைமுனு அவரது சிதை புதைத்த இடத்தை வெறுங்கால்களுடனே கடக்கவேண்டுமென உத்தரவிட்டவன். கோதபாய ஒரு தொழில்நேர்த்தியுள்ள இராணுவத்தினராக இருந்தால் அவரும் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த பின்னர் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அவர் முயற்சிக்கலாம்.

கோதபாயவுக்கு மஹிந்தவைப்போல் அரசியல் செய்யத் தெரியாது. அவர் அரசியல்வாதியல்ல. கடுமையான இராணுவ அணுகுமுறையையே சிவிலியன் வாழ்விலும் பின்பற்றுவார் என எதிர்பார்க்கலாம். அவரைச் சுற்றியிருக்கும் சிங்கள பெளத்த தீவிரவாதிகள் அவரது சிங்கள பெளத்த மனநிலையை இளகவிடாது பார்த்துக்கொள்வார்கள். தமிழர் தரப்பு இதை உணர்ந்து தமது அணுகுமுறைகளை அனுசரித்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

எங்களிடம் தடியில்லை. பாம்பும் அடிவாங்கிக் கோபப்பட்ட பாம்பு. பாம்பு கொத்த வருவது தன் உயிர்ப் பயத்தினாலே தவிர எம் மீதான ஆத்திரத்தில் அல்ல. தமிழர் பயத்தினால் ஓடிவிட்டால் அது பாம்புக்கு வெற்றி. பாம்பைக் கொல்வதற்கு எங்களிடம் தடியில்லை என்பது உறுதியானால் ஒதுங்கிப் போவது மட்டும்தான் ஒரே தேர்வு.

கோதபாய ஒற்றைப்போக்கு மனநிலையைக் கொண்டவர். மஹிந்தவின் தானெழுந்தவாரியான நடைமுறைகள் அவரிடம் செல்லுபடியாகுமோ தெரியாது. கூட்டமைப்புடன் அவர் பேசினாலும் அவர்களது கோரிக்கைகள் எதற்கும் அவர் இணங்கப் போவதில்லை. வடக்கில் டக்ளஸ் தேவானந்தவும் கிழக்கில் வியாளேந்திரனுமே இந்தக் காபந்து அரசில் அவரது சிற்றரசர்கள்.

அடுத்த ஏப்ரம் மாதமளவில் பொதுத் தேர்தல் நடக்கும். அதில் மீண்டுமொரு வாக்குப் பேரலை அவரை நோக்கி வரும். மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அவர் 19வது திருத்தத்தை மாற்றி நிறைவேற்று அதிகார முறைமையை மீண்டும் பலப்படுத்துவார்.

ரணில் இல்லாத எதிர்க்கட்சி தொடர்ந்தும் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்க முடியாது. அதுவும் சிங்கள பெளத்த தீவிரவாதத்தையோ, சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாட்டையோ எடுக்காமல் பெரும்பான்மை வாக்குகளைப் பெறமுடியாது. ஆட்சியமைக்கச் சிறுபான்மையினரின் ஆதரவு தேவையென்றாலும் அது சிறுபான்மையினரின் அழிவுக்கு வழிவகுக்குமே தவிர தீர்வு எதையும் பெற்றுத் தந்துவிடாது.

எனவே தமிழரின் அணுகுமுறை, பாம்பு பலவீனப்படும்வரை பொறுத்திருப்பது அல்லது பாம்பை ஒரே அடியில் கொலைசெய்வதற்கான வழிவகைகளை ஆராய்வது. இரண்டாவதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலாவது நடப்பதற்குள் தமிழர் தம்முட் சண்டைகளினால் பலவீனப்பட்டுவிடுவர்.

நமோ நமோ மாதா…

3 thoughts on “கோதாவின் இலங்கை…

  • //அடுத்த ஏப்ரம் மாதமளவில் பொதுத் தேர்தல் நடக்கும். அதில் மீண்டுமொரு வாக்குப் பேரலை அவரை நோக்கி வரும்.// ?
    இதுவே யதார்த்தம், இனியும் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல்” மொட்டுடன் இணைந்து பயணித்தால் தமிழுக்கு இழுக்கு என்று கூற முடியாது எவரும்.

  • யதார்த்தம் இது தான்

  • துல்லியமான ஆய்வும், நியாயமான எதிர்வு கூறலும்.
    “நமோ நமோ மாதா”

Comments are closed.