கோதாவின் இலங்கைக் குடியுரிமை விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குப் போகிறது!

Spread the love

நவம்பர் 13, 2019

பொதுஜன பெரமுன வேட்பாளர் கோதபாய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமைப் பத்திரத்தை விலக்குமாறு இரண்டு சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்ற மாதம் நிராகரித்துத் தீர்ப்பளித்திருந்தது. இத் தீர்ப்பின் மீதான மேன்முறையீடு ஒன்றை உச்ச நீதிமன்றத்துக்கு, இப்போது அந்த செயற்பாட்டாளர்கள் இருவரும் செய்திருக்கிறார்கள்.

மேன்முறையீட்டு நீதிமன்றம்

பூரவேசி பலய குடிமைச் சமூக அமைப்பின் நிறுவனர்களான பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் காமினி வியாங்கொட ஆகிய இருவரும் முந்நாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்சவுக்கு நவம்பர் 21, 2005 இல் புதிதாகப் பதவியேற்ற அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சவால் வழங்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை செல்லுபடியாகாதென அறிவிக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தார்கள்.

பல நாள் விசரணையின் பின்னர் மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், அக்டோபர் 4 அன்று அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருந்தது.


ஒரு வாரத்தின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் எழுத்து மூலம் கொடுத்த தீர்ப்பில், ‘அமைச்சரவையை உருவாக்குவதற்கு முதல் ஒரு அமைச்சருக்குரிய முடிவுகளை எடுப்பதற்கு நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்த ஜனாதிபதி ராஜபக்சவுக்கு அருகதை இருந்தது. அதைப் பாவித்து கோதபாயவுக்கு இரட்டைக் குடியுரிமை அந்தஸ்தை வழங்கியிருக்கிறார்’ எனக் காரணம் காட்டியுள்ளது. அத்தோடு, ‘இரண்டு செயற்பாட்டாளர்களும் இம் முறையீட்டைப் பல வருடங்களுக்கு முன்னரே செய்திருக்க வேண்டுமெனவும் இப்பொழுது செய்வது அரசியல் காரணங்களுக்காக. எனவே அவர்களுக்கு இந்த அருகதை இல்லை’ எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

நேற்று உச்ச நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு விண்ணப்பத்தில், ‘புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி, அமைச்சரவையை நியமிக்குமுன்னரே ஒரு அமைச்சரின் அதிகாரத்தைப் பாவித்தமை எழுதப்பட்ட சட்டத்தில் இருக்கிறது’ எனக் கூறியதன் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தவறிழைத்திருக்கிறதா எனக் கேட்கப்பட்டிருக்கிறது.

அத்தோடு, புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதியின் அதிகாரப் பிரயோக விடயத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தைப் புரிந்து கொள்ளவில்லை எனவும் அவ் விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

பதிவைச் செய்வதில் காட்டிய கால தாமதம் மற்றும் அவர்களுக்கு வேறு அரசியல் நோக்கம் இருக்கிறது, இந்த முறையீட்டை மேற்கொள்வதற்கு ஏற்ற மக்கள் சார்ந்த அக்கறை அவர்களுக்கு இல்லை என்ற வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்குப் பதிவாளர்கள் மீது குற்றஞ் சாட்டியது தவறு எனத் தீர்ப்பளிக்கும்படியும் இவ்விருவரும் உச்சநீதிமன்றத்தைக் கேட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கை | பாராளுமன்றத் தேர்தல் காலவரையின்றி பின்போடப்பட்டது
>/center>