Sri Lanka

கோதாவின் இரட்டைக் குடியுரிமையை விசாரிக்குமாறு கொழும்பு உயர்நீதிபதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவு!

செப்டம்பர் 23, 2019

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவின் அமெரிக்க -இலங்கை இரட்டைக் குடியுரிமையை விசாரித்து, விசாரணைகள் முடிவுற்றதும் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்ற விசாரணைப் பிரிவுக்கு கொழும்பு பிரதம நீதியரசர் லங்கா ஜெயரட் ன உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடிமகனாக இருந்த காலத்தில் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தபோது, எதிர்வரும் தனது ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காகப் பிரச்ச்சாரம் செய்தாரென மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் எல்.ஏ.சி.உயாங்கொட ஆகியோர் குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தனர்.

இது தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு கொழும்பு நீதிமன்றத்தில் செய்திருந்த முறைப்பாடு காரணமாகவே நீதியரசர் இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.

கோத்தபாயவின் இந்த நடவடிக்கை ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறும் செயல் எனவும், இதை பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஹிரு , டெரான தொலைக்காட்சி களுக்குப் பேட்டிகளை வழங்கியுள்ளனர் எனவும் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.

இத் தொலைக்காட்சி சானல்களிலிருந்து நிகழ்ச்சிகள் பற்றிய அசல் பதிவுகளைப் (original unedited)பெறுவதற்கு நீதிமன்றத்தை உத்தரவிடுமாறு குற்ற விசாரணைப் பிரிவு கேட்டுள்ளது.

இந்த இரு தொலைக்காட்சிச் சானல்களும் அசல் காட்சிகளை குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கும்படியம், சாட்சிகளைப் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.