NewsSri Lanka

கோதாபய வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது

37 பேர் காயம், 45 பேர் கைது; கைதானவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படலாம்?

நேற்று (மார்ச் 31) மிரிஹானவில் ஆரம்பித்த மக்கள் போராட்டம், கொழும்பு புறநகரிலுள்ள பங்கிரிவத்தை வீதியில் அமைந்திருக்கும் ஜனாதிபதி ராஜபக்சவின் இல்லத்தின் முன்னர் தொடர்வதாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வார்ப்பாட்டத்தின்போது ஒரு பொலிஸ் பஸ், ஒரு ஜீப், இரண்டு பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டுள்ளன எனவும் ஒரு தண்ணீர் பாய்ச்சி வாகனம் முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் காரணமாக 17 பொதுமக்களும், 17 பாதுகாப்புப் படையினரும், 3 ஊடகவியலாளரும் காயமுற்ற நிலையில் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிகிறது. ஒரு பெண் உட்பட இதுவரை 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவ்வார்ப்பாட்டங்களுக்குப் பின்னால் தீவிரவாதக் குழுவொன்று செயற்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக பல நகரங்களில் மக்கள் தன்னிச்சையாக தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டங்கள் பல்லாயிரக் கணக்கான மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றனவெனினும் இதுவரை அனைத்தும் ஒழுங்காக நடைபெற்று முடிந்திருக்கின்றன. தன்னிச்சையாக எழும் மக்கள் போராட்டங்கள் எதுவித இலச்சினைகள், அடையாள பதாகைகளையும் கொண்டிராமையால் இவற்றை யார் ஒழுங்கு செய்கிறார்கள் என்பதைக் கூற முடியாது. இவற்றின் பின்னால் சில அரசியல்வாதிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் இதுவரை தெரியவில்லை.

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரும் துன்பங்களி எதிர்கொள்கிறார்கள். கோதாபயவின் முறைகேடான நிர்வாகமே இதற்குக் காரணம் என்று நம்பும் மக்கள் தற்போது வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்.

கொழும்பு நகரத்தின் பல பாகங்களும் தொடரும் மின்வெட்டுக் காரணமாக இருளில் மூழ்கியிருந்தும் இப் பிரதேசங்களில் இவ்வார்ப்பாட்டம் காரணமாகப் பிரகடனப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதெனத் தெரிகிறது.

இவ்வார்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் சார்பாகம்பல வழக்கறிஞர்கள் இலவசமாகத் தமது சேவைகளை வழங்க முன்வந்துள்ளார்கள் எனவும் அதே வேளை கைது செய்யப்பட்டவர்களைத் தாம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்திருப்பதாகப் பொலிசார் வழக்கறிஞர்களுக்குக் கூறியுள்ளதாகவும் அறியப்படுகிறது.

நியூஸ்ஃபெர்ஸ்ட் தொலைக்காட்சி நிறுவனம் பதிவுசெய்த, ஜனாதிபதி இல்லத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பற்றிய காணொளி இங்கே இணைக்கப்படுகிறது.