கோதாபய கடற்படைத் தளத்திற்காக 617 ஏக்கர் தமிழ் நிலத்தை அபகரிக்க இலங்கை கடற்படை முயற்சி

2017 இல் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலிந் பிரகாரம், முல்லைத்தீவு வட்டுவாகை கோதாபய கடற்படைத் தளத்திற்காக தனியாருக்குச் சொந்தமான 617 ஏக்கர் நிலத்தைச் சுவீகரிக்க இலங்கை அரசு முயற்சிகளை எடுத்துவருகிறது.

2018 இல் இன் நிலங்களின் உரிமையாளர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கைகளினால், கடற்படை இக் காணி சுவீகரிப்பைக் கைவிட்டிருந்தது. இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்ற காரணத்துக்காக அப்போதைய வடக்கு மாகாணசபை அங்கத்தவர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ரி.ரவிகரன் ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

தற்போது, ஜூலை 8ம் திகதி, முல்லைத்தீவு மாவட்ட நில அளவையாளர் பி.நவஜீவன் அவர்களால் இக் காணிச் சொந்தக்காரர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின்படி, காணி அமைச்சின் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் பிரகாரம், இத் தனியார் நிலங்கள் அளவிடப்படவிருக்கிறது எனத் தெரியவருகிறது. ஜூலை 29 அன்று, இக் காணிச் சொந்தக்காரர்களை, முள்ளிவாய்க்கால் கிராம சேவகர் அலுவலகத்துக்கு வரும்படி இக் கடிதம் மூலம் பணிக்கப்பட்டிருக்கிறது. இச்சந்திப்பின்போது கடற்படை முகாமின் நிர்மாணத்துக்கான எல்லைகள் தீர்மானிக்கப்படவுள்ளதாக இக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. (தமிழ் கார்டியன்)