News & AnalysisSri Lanka

“கோதாபய ஒரு உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, ஒரு வெற்றுடல்” – அனுரகுமார திசநாயக்கா கடும் சாடல்

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை. தடுப்பூசியைப் போட்டுகொள்ளும் உரிமை இந்நாட்டின் ஒவ்வொரு மக்களினதும் உரிமை. பாராளுமன்ற உறுப்பினர் என்ற சலுகைகயைக்கொண்டு தடுப்பூசி பெற்றுக்கொள்வதை நான் விரும்பவில்லை

அனுர குமார திசநாயக்கா

“கோதாபய ராஜபக்சவின் ஆணவத்தினால்தான் இந்நாட்டு மக்கள் மரணித்துக்கொண்டிருக்கிறார்கள்” என, ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக ஆற்றிய தனது உரையின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசநாயக்கா சாடியிருக்கிறார்.

“நந்தசேன கோதாபய ராஜபக்ச ஒரு கருணையற்ற, நாட்டு மக்கள் மீது எந்தவித பொறுப்புணர்வும் கொண்டிராத ஒரு வெறும் உலர்ந்துபோன கோது” என ஊடகவியாளர் மத்தியில் திசநாயக்கா தெரிவித்தார்.

“மருத்துவ அதிகாரிகள் தமது உண்மையான அனுபவங்களையும், கருத்துக்களையும், புத்திமதிகளையும் ஜனாதிபதிக்கு முன்னால் கூறுவதற்கு அஞ்சுகிறார்கள். தமது கருத்துக்களைத் தெரிவிப்பதன் மூலம் தாம் வேறு பிரச்சினைகளுக்குள் மாட்டுப்பட்டுவிடுவோம் எனநினைத்து அவர்கள் வாய்மூடி மெளனிகளாக இருக்கிறார்கள். உயிராபத்தை விளைவிக்கக்கூடிய திரிபுகளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதித்தது முதல், மோசமான தடுப்பூசி வழங்கல் திட்டம் வரை அரசாங்கம் எதையும் சரியாக நிர்வகிக்கவில்லை.

“சுகாதார அமைச்சர் பாத்திரங்களை ஆற்றில் எறிகிறார் அல்லது சூனியக்காரரின் பொய்யான மருந்துகளுக்காகப் பரப்புரை செய்கிறார். டாக்டர் அனில் ஜசிங்கா போன்ற மூத்த பொதுச் சுகாதார அதிகாரிகளை ஓரங்கட்டி சம்பந்தமில்லாத சூழல் அமைச்சிற்கு மாற்றப்பட்டார். அவரைப் போலவே வேறு திறமையுள்ள பலருக்கு வெளிநாட்டு தூதுவராலய பதவிகளைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

“ஜனாதிபதி ராஜபக்ச ஆணவம் நிரம்பப்பெற்ற, கருணையற்ற, அரசியல் முதிர்ச்சியற்ற ஒருவர். அவரது குறும்பார்வையுடனான கொள்கைகள் நாட்டை வைரஸின் அழிவுப்பாதைக்கு இழுத்துச் சென்றுள்ளன. கடவுளின் பேரினால் இப்போதாவது அவர் மனம் மாறி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

“கருணையற்ற, உணர்வுகளேயில்லாத, ஈவிரக்கமற்ற, வெறும் கோது போன்ற ஒரு மனிதனிடம் எவர்தான் ஆளும் பொறுப்பைக் கொடுப்பார்? மக்களுக்காக இரங்க முடியாத ஒருவர் எப்படிச் செயற்திறனுள்ள ஒருவராக இருப்பார்? இதுவே தான் எம் முன்னாலிருக்கும் எமது தோல்வி கண்ட பரிசோதனையின் முடிவு.

“நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் ஜனாதிபதி அவர்களே. உங்கள் கருத்துக்களுக்கு மாறான பார்வைகளைக் கொண்டவர்களையும் ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

“225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை. தடுப்பூசியைப் போட்டுகொள்ளும் உரிமை இந்நாட்டின் ஒவ்வொரு மக்களினதும் உரிமை. பாராளுமன்ற உறுப்பினர் என்ற சலுகையைக் கொண்டு தடுப்பூசி பெற்றுக்கொள்வதை நான் விரும்பவில்லை. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அது கிடைக்கவேண்டும்; அது அவனது உரிமை. அரசாங்கத்தின் செயற்திறனின்மையால் தான் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை.

ஜனாதிபதி கோதாபயவின் அரசாங்கம், கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்களைக் கைவிட்டு விட்டது. நோயிலிருந்து எம்மைப் பாதுகாக்க அதனிடம் வழிகளோ, விருப்பமோ இல்லை. எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும்படி அது கூறிவிட்டது. எனவே, நான் மக்களிடம் கேட்டுக்கொள்வது, “உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பாதுகாக்க அரசாங்கம் என்று எதுவும் இல்லை. அந்தப் பொறுப்பு இப்போது எங்கள் எல்லோரது கைகளிலும்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார் அனுர குமார திசநாயக்கா.