கோதாபயவுக்கு எதிராக ஸ்கொட்லாந்தில் சுவர் ஒளிபரப்புகள்


COP26 சூழல் மாநாட்டிற்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு எதிராக ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உட்பட கிளாஸ்கோ போன்ற நகரங்களெங்கும் கட்டிடங்களின் மீது ஒளிபரப்பின் மூலம் பதாகைகளை ஒளிரச் செய்து தமிழர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.

“இனப்படுகொலைக்காகத் தேடப்படும் இலங்கையின் ஜனாதிபதி” போன்ற வாசகங்களை, இரவு நேரங்களில் பாரிய எழுத்துக்களில் கட்டிடங்களின் மீது ஒளிரச்செய்வதன் மூலம் தமிழர்கள் இவ்வெதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.

எடின்பரோவிலுள்ள ஸ்கொட்டிஷ் பாராளுமந்றக் கட்டிடம், வரலாற்றுப் பெருமை வாய்ந்த ட்றொன் கேர்க் கட்டிடம், கிளாஸ்கோவில் பராஸ் சந்தை, பீப்பிள்ஸ் பலஸ் மியூசியம் மற்றும் மக்லெனன் ஆர்ச் ஆகிய கட்டிடங்கள் இவ்வொளிப் பதாகைகளினால் ஒளிரப்பட்டன.

“கோதாபய ராஜபக்சவும் அவரைப் போன்ர இதர போர்க்குற்றவாளிகளும் நீதிக்கு முன்னர் கொண்டுவரப்படும்வரை நாம் ஓயப் போவதில்லை. ராஜபக்ச இனப்படுகொலை புரிந்த ஒரு போர்க்குற்றவாளி. புரிந்த குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்படும்வரை, ஸ்ட்லாந்திலோ அல்லது உலகில் எந்த நாட்டிலுமோ அவருக்குப் பாதுகாப்பான இடம் எதுவும் இருக்க முடியாது என இவ்வெதிர்ப்பியக்கத்தின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான துர்க்கா தெரிவித்துள்ளார்.

இதைவிட ஸ்கொட்லாந்தில் வெளிவரும் ‘தி ஹெரால்ட்’, ‘தி நாஷனல்’ போன்ற பல பிரபல பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களைச் செய்வதன் மூலமும் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் கோதாபயவுக்கு எதிரான தமிழர்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.