கோதாகோகம: ரணில் ராஜபக்சவின் வாட்டர்லூவா அல்லது அரகாலயரின் முள்ளிவாய்க்காலா?

சிவதாசன்

எதிர்பார்த்தபடி ரணில் ராஜபக்ச வெற்றியீட்டியிருக்கிறார். பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் விரட்டப்பட்ட ஒருவர் பின் கதவால் நுழைந்து ‘மக்கள் பிரதிநிதிகளின்’ அமோக ஆதரவால் அரியணையேற்யிருக்கிறார். ஜனநாயகம் வெற்றியீட்டியிருக்கிறது என்பதால் முடிவுகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவரை அரியணை ஏற்றியதில் மிகப் பெரிய பங்கு அரகலாயர்களையே சாரும்.

அரகாலயரது புரட்சி அடித்தளமற்றது. அவர்களது சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்பது ஓரளவு எதிர்பார்க்கப்படதுதான். Plan B என்பது அவர்களிடம் இருக்கவில்லை.

Plan B இல்லாமையால் பிசு பிசுத்துப்போன உலகப் போராட்டங்கள் பல. அவற்றில் முக்கியமான ஒன்று மார்ட்டின் லூதர் கிங்கின் ‘நீண்ட (வாஷிங்டன்) பயணம்’. பல தலைநகருக்கு வரும் பல மில்லியன் சிவிலுரிமைப் போராட்டக்காரர்களைப் படைகள் மூலம் தடுத்து நிறுத்த ஜனாதிபதி கென்னெடிக்கு ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் அவர் தனது சமயோசிதமான நடவடிக்கையால், ஊர்வலக்காரர் எதிர்பார்த்தபடி பாதுகாப்பு படைகளின் கெடுபிடி எதையும் கொடுக்காமல் அவர்களை வரவேற்று உபசரித்தார். அவர்களுக்கு கழிப்பறை வசதிகள், உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. கிங்கின் உலகப் பிரசித்தி பெற்ற “I have a dream” பேச்சைத் தவிர அது எதையும் சாதிக்கவில்லை.

இதே போலத்தான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலமும். கடும் வெயிலில் கச்சேரிக்கு வந்த பிரமாண்டமான ஊர்வலத்திற்கு பழ ரசமும் தண்ணிரும் தந்து உபசரித்து அனுப்பி விட்டார் அப்போதைய யாழ் அரசாங்க அதிபர்.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களின் போதும் இரு தரப்பு அரசுகளும் தமது Plan B க்களாக பொலிஸ் / இராணுவப் பிரிவுகளைத் தயார் நிலையில் வைத்திருந்தார்கள். கிங்கிடமோ அல்லது தந்தை செல்வாவிடமோ Plan B எதுவும் இருக்கவில்லை. இரண்டு போராட்ட அணிகளுமே எதையும் சாதிக்காது கலைந்து போயின.

கோதா பதவி விலகவேண்டுமென்பது அரகாலயரின் முதல் நிபந்தனை. அவர் பதவி விலகினால் அடுத்து என்ன செய்யவேண்டுமென்பது பற்றிய திட்டமோ சிந்தனையோ அரகாலயரிடம் இருக்கவில்லை. அந்த வெற்றிடத்தைச் சரியாக இனம் கண்ட ரணில் அதற்குள் புகுந்துகொண்டதுமல்லாது கதவையும் பூட்டிக்கொண்டுவிட்டார்.

இப்படியான திருகுதாளங்களைச் செய்வது ரணிலுக்கு இதுதான் முதல் தடவையல்ல. 2020 பாராளுமன்றத் தேர்தலில் zero ஆக இருந்த ஐ.தே.கட்சியின் தலைவர் அவமானப்பட்டுப் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு ஓடிவிடவில்லை. தலைமைப் பதவியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். கட்சி உடைந்து சிதறப்போவது தெரிந்தும் மற்றவர்களுடன் சமரசம் செய்ய அவர் விரும்பவில்லை. சில நாட்களில் கட்சிக்கெனக் கிடைத்த ஒரே நியமன உறுப்பினர் பதவியையும் தனக்கெனப் பறித்துக் கொண்டார். ஓட்டைகளையும், நுணுக்கங்களையும் முற்கூட்டியே கண்டறிந்து அவற்றைத் தனக்குச் சாதகமாகப் பாவிப்பதில் ரணில் கெட்டிக்காரர். எனவே அவர் அடைந்திருக்கும் இப்பதவி அவருக்கு அரகாலயர்களால் வழங்கப்பட்ட ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

கோதாபய பதவி விலகியதும் அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்பதில் அரகாலயர் திண்ணமான முடிவெதையும் கொண்டிருக்கவில்லை. மூன்று ஆசனங்களைக் கையில் வைத்துக்கொண்டு ஜே.வி.பி. யினால் எதுவமே செய்யமுடியாது. எதிர்க்கட்சியோடு இணைந்து போக அவர்களது விழுமியம் இடம் கொடுக்காது. கோதா வெளியேறியதும் ஏற்பட்ட பாரிய உள்ளுடைவு (implosion) ஏற்படுத்தப்போகும் விளைவுகளைச் சமாளிக்க அரகாலயர்களிடம் எந்தவித திட்டங்களும் இருக்கவில்லை.

அரகாலயர்களின் இந்த திட்டமிடல் தவறு விளைவிக்கப்போகும் அடுத்த நிகழ்வு துரத்தப்பட்ட கோதாபயவுக்கு வழங்கப்படவிருக்கும் செங்கம்பள வரவேற்பு. அதை முன்னின்று நடத்தப் போபவர் ரணிலேயானாலும் பின்னணியில் பசில் ராஜபக்சவும் ராஜபக்ச சகபாடிகளும் இருக்கிறார்கள். ராஜபக்ச சாம்ராஜ்யத்தை மீட்பதற்கு இருக்கும் ஒரே வழி இதுவேதான். ரணிலின் திட்டமிடலின்படி அது அரங்கேறுகிறது.

போரில் முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் ஒருவனுக்கு வெளியேறும் பாதையொன்றை அமைத்துக் கொடுப்பதுகூட ஒருவகையான போர்த் தந்திரம் என்பார்கள். அல்லாதுபோனால் அவன் உயிர் போவதற்கு முன்னான இறுதிப் போரை நிகழ்த்தி வென்றுவிடவும் கூடும். அவனைப் பலவீனப்பட்ட நிலையில் வெளியே அனுப்புவது சிலவேளைகளில் அனுகூலமாகவும் அமையலாம்.

கோதாபயவை வெற்றிகரமாக முற்றுகையிட்ட அரகாலயர் உலகத்தில் அவர் எங்கும் தப்பியோடிவிட முடியாது என நினைத்தனர். ஆனால் அவர் இலங்கையிலிருந்து பாதுகாப்பாகத் தப்பியோடுவதற்கும் பாதுகாப்பாகத் திரும்பி வருவதற்குமான அத்தனை வசதிகளையும் செய்துவிட்டுத்தான் அவர் சென்றிருக்கிறார். அதைச் செய்துகொடுக்க உதவியது அவரது சகோதரர்கள் அல்ல அவரது நண்பரும் மாற்றாந்தாய்ச் சகோதரருமான ரணில் விக்கிரமசிங்க.

இலங்கையை விட்டு ஓடினாலும் தநது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திடவில்லை எனக் கூறப்பட்டது. அப்படிக் கையெழுத்திட்டிருந்தால் அவரது ராஜதந்திர பாதுகாப்பு உடனேயே அகற்றப்பட்டு அவர் ஒரு சாதாரண இலங்கைப் பிரஜையாக மாறியிருப்பார். இந்நிலையில் ஜெனிவாவில் ஐ.நா. நிறைவேற்றிய பிரேரணையின்படி (Universal Jurisdiction) அவரை எந்தவொரு நாடும் கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்க முடியும். அவர் பாதுகாப்பாக ஒரு மண்ணை அடையும்வரை பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திடாது பார்த்துக்கொண்டு அவர் தனது ராஜதந்திரப் பாதுகாப்பைப் பேனியதன் மூலம் அவர் தன்னைக் காப்பாற்றியிருக்கிறார். அதன் மூலகாரணம் ரணில்.

தனது தமிழ் குடிசனத்தைக் காட்டி சிங்கப்பூர் அவருக்கு தங்கும் அனுமதியை மறுத்தது. இஸ்லாமியரின் எதிர்ப்பைக் காட்டி மாலைதீவு அனுமதி மறுத்தது. குடிவரவு அட்டையைத் தூக்கியெறிந்த காரணத்தால் அமெரிக்கா நுழைவு அனுமதியை மறுத்தது. நாதியற்ற ஒரு ‘சிங்களப் போர்வீரனுக்கு’ இந்தக் கதியா என சிங்களச் சனங்களின் மனங்களில் ஒரு அனுதாபம் பிறந்தது. அதை உருவாக்கியதும், இன்று அனுபவிப்பதும் ரணில் ராஜபக்ச தான்.

ஒரு சாதாரண இலங்கைக் குடிமகன் கோதாபயவுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் ‘ராஜதந்திர அந்தஸ்தைக்’ கொடுக்கும் பயணச் சீட்டுடன் அவர் பல நாடுகளுக்கு விசா அனுமதியின்றிப் போயிறங்கலாம். மாலைதீவு, சிங்கப்பூர் ஆகியன இந்நாடுகளில் சில. அப்படியிருந்தும் ஜெனிவாவின் பிரேரணை அவரை இன்னும் துரத்திக்கொண்டே இருக்கிறது. இதனால் அவருக்குச் சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரே நாடு இலங்கை மட்டும் தான். எனவே அவரை இங்கு திருப்பி அழைப்பதற்கான திட்டமொன்றைத் தீட்டியேயாகவேண்டும். அதைத் தீட்டக்கூடிய சிங்களவர் மத்தியிலுள்ள ஒரே ஒரு வல்லுனர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே.

ராஜதந்திர பாதுகாப்புடன் கோதாபயவை வெளியே அனுப்பிவிட்டு அவரது பதவியைக் கைப்பற்ற ரணில் விரும்பியது அவரது பதவியாசை காரணமென்று நான் கூறமாட்டேன். ரணில் விக்கிரமசிங்க ஒரு படு சிங்கள தேசியவாதி. றோயல் கல்லூரியில் அவர் கல்விகற்ற காலம் முதல் அவரை அறிந்தவர்கள் இதையே கூறுகிறார்கள். இதே வேளை கோதாபய தவிர்ந்த ராஜபக்சக்கள் வெறும் போலித் தேசியவாதிகள். இதை நன்குணர்ந்த ரணிலுக்கு, 2009 இற்குப் பிறகு, கோதாபய மீது ஒரு நன்றி கலந்த அனுதாபம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. கலிபோர்ணியாவில் 711 கடையில் வேலைசெய்துகொண்டு பேரப்பிள்ளையுடன் தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருந்த கோதாபயவை இலங்கைக்குக் கொண்டுவந்ததே ரணில் தான் என்கிறார்கள். இதற்காகத் தனது கட்சியையே தாரைவார்த்தவர் ரணில். எனவே இப்போதுள்ள நெருக்கடியில் கோதாபயவைக் காப்பாற்றவேண்டிய கடமையும் ரணிலுக்கு உண்டு.

அதே வேளை, தனக்கு உதவி செய்தவர்கள், தனக்கு விசுவாசமானவர்கள், நண்பர்கள் என்று பலருக்கும் தனது அதிகாரத்தின் கீழ் பாதுகாப்புகளையும் வசதிகளையும் செய்து கொடுக்கும் பண்பு கோதாபயவிடம் உண்டு. அவரது விசுவாசிகளாக இன்றும் இருக்கும் இராணுவ ஜெனரல்கள், கருணா, பிள்ளையான், நிசங்க சேனாதிபதி, தெராணா ஊடக அதிபர் டிலித் ஜெயவீரா, ரணில் விக்கிரமசிங்க, அர்ஜுன் அலோய்சியஸ் ஆகியோர் பலர் இப் பட்டியலில் அடங்குவர். கோதாபய ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் பணமுறி ஊழலில் (Bond Scam) ஊழலில் மாட்டியிருந்த ரணிலையும் அர்ஜுனையும் முதலில் காப்பாற்றினார். நிசாங்க சேனாதிபதி 1000 முனாள் இராணுவத்தினருடன் தனியாக அமைத்திருக்கும் அவான்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்துக்கு ஆயுத, பண உதவிகளைச் செய்து வருவதுடன் சேனாதிபதி சில வாரங்களுக்கு முன்னர் நாட்டை விட்டுத் தப்பியோடுவதற்கும் அவர் உதவி செய்திருந்தார். லசந்தா விக்கிரமதுங்கா, தாஜுடீன் மற்றும் பல முக்கியமானோரின் கொலைகளுக்குப் பின்னணியில் இருந்தவர் சேனாதிபதி எனப்பலராலும் நம்பப்படுகிறது. ரவிராஜ், சிவராம், ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களின் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் கருணா,பிள்ளையான் குழுவினருக்கும் நிழல் கொடுப்பது கோதாபயதான். அண்ணன் தம்பிமார், மருமக்கள் எனப் பின்தொடரும் ஊழல் பெருச்சாளிகளைக் காப்பாற்றி வந்ததும் கோதாபாயதான். எனவே அவரைப் பாதுகாப்பாக இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக இந்த அனைவரும் பகீரத முயற்சிகளை எடுக்கிறார்கள். தமது அவமானப்பட்ட முகங்களுக்கு மக்கள், உலக ஆதரவு கிடைக்காது என உணர்ந்த இப் பிரகிருதிகள் ரணில் விக்கிரமசிங்கவை proxy ஆக முன்னுக்கு விட்டிருக்கிறார்கள். துணிச்சலோடு அக் கடமையை எடுத்தமைக்காக அவரைப் பாராட்டியேயாகவேண்டும்.

அரகாலயரின் அடுத்த நகர்வு

ஜூலை 20 ரணிலுக்கு முடியேற்றம் நிகழ்ந்தது. இரகசிய வாக்கெடுப்பு என்ற படியால் ராஜபக்ச கட்சி அங்கத்தவர்களுடன் இதர கட்சிகளைச் சேர்ந்த கால்வாரிகளும் இணைந்து மிகப் பேராதரவுடன் இம் முடியேற்றத்தைச் செய்திருக்கிறார்கள். ஜனநாயக விழுமியங்கள், சிறுபான்மை உரிமைகள் தொடர்பாக மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கும் பலர் இறுதி நேரத்தில் ரணில் பக்கம் சார்ந்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் ரணிலுக்கு எதிராகப் போட்டியிட்ட வர்கள் தங்கத் தாம்பாளத்தில் முடியை வைத்துக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் ராஜபக்ச குழு கடந்த சில நாட்களாகவே பேரம் பேசி உதிரிகளை வாங்க ஆரம்பித்துவிட்டது. இலங்கையில் இதுவே ஜனநாயகம் எனப் பழக்கப்பட்ட ஒன்று. எனவே ரணிலை வெல்லச் செய்ததன் இரண்டாவது பங்கு ராஜபக்சக்களுக்குப் போகிறது. உள்நாட்டில் ராஜபக்சக்களைப் பாதுகாக்க நிறையப் பேர் இருந்தாலும் வெளிநாடுகளில் அவர்களைப் பாதுகாக்க ரணில் ஒருவராலேயே முடியும். எனவே அவர்கள் எடுத்த முடிவும், தொடரும் ரணிலின் செயற்பாடுகளும் இதுவரை சரியாகவே அமைகின்றன.

இன்று (ஜூலை 22) காலிமுகத் திடலில் இருந்த அரகாலயர்களின் வாடி வீடுகள் பாதுகாப்பு படைகளால் தகர்க்கப்பட்டு அரகாலயகர்களுடன் கூடவே ஊடகவியலாளரும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ‘அரகாலயர்கள் மீது கைவைத்தால் நான் பதவி விலகுவேன் என மே 09 அன்று சூளுரைத்த ரணில் ஜனாதிபதியாக முடிசூட்டப்பட்டதும் செய்த முதல் வேலை இது. எனவே இதுவரை ரணில் என்ன சொன்னார் என்ன செய்தார் என்பதெல்லாம் தேவையற்றவையாகிவிட்டன. அவரும் ஒரு அரசியல்வாதி. தனக்கு அதிகாரம் கிடைத்ததும் அவர் இன்னுமொரு ராஜபக்சவாக மாறிவிட்டார். நேற்றைஅய் ருவிட்டர் செய்தியில் ஒரு அரகாலயர் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: “நாம் பிழையான ஒருவரை (கோதாபய) முதலில் வெளியே அனுப்பி விட்டோமா?” என்று.

இத்தோடு அரகாலயா முற்றாக அழிக்கப்பட்டு விடுமா அல்லது அடுத்த கட்ட நடவ்டிக்கைக்காக அது அஹிம்சை வழியைக் கைவிட்டு விடுமா என்பதே இப்போது இருக்கும் கேள்வி. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் ஜே.வி.பி. இளையோருக்கு நடைபெற்ற அட்டூழியங்களைக் காணாத இளையவர்களே இன்றய பயமறியாத அரகாலய இளம் கன்றுகள். எதுவும் நடக்கலாம். ஆனாலும் இப்போதும் Plan B அவர்களிடம் இல்லை. தேர்தல் ஒன்றே மாற்றத்தைக் கொண்டுவருமெனினும் அதற்கான மனநிலையில் மக்கள் இல்லை. எனவே இந்த அரகாலயப் புரட்சி மக்கள் மத்திக்கு நகர்த்தும் செயற்பாடுகளில் அரகாலயத் தலைமைகள் இறங்க வேண்டும். அப்போது அவர்களது Plan B புதிய தலைமை, புதிய பாராளுமன்றம் எனப் புதிய எதிர்காலமொன்று உருவாகும் சாத்தியமுண்டு. அதற்கு முதல் ஒரு புதிய தலைவர் ஒருவரை அவர்கள் தெரிவு செய்தாகவேண்டும். புதிய பாராளுமன்றத்தை அவர்கள் கைப்பற்றியாகவேண்டும்.

ரணில் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். அவரது எந்தப் பேச்சிலும், வாக்குறுதியிலும் நம்பிக்கை கொள்ளக்கூடிய வழியில் அவர் நடந்து கொள்ளவில்லை. தனக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை விட்டுக்கொடுக்க அவர் விரும்பமாட்டார். அரகாலயா 2.0 மட்டுமே புதிய இலங்கையை உருவாக்கும்.

வடக்கு கிழக்கிலும் அரசியல் தலைவர்களிடையே பாரிய மாற்றங்கள் அவசியம். இன்னும் ஓரிரு மாதங்களில் அங்கும் தமிழ் அரகாலயர்கள் வீதிக்கு இறங்குவதைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

மீதி இலங்கையில் அகிம்சைவழிப் போராட்டங்களில் மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு ரணில் போன்றோர் காரணமாக அமைந்துவிடுவார்களோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. “ஜே ஆர். ஒரு உண்மையான பெளத்தராக இருந்திருந்தால் நான் துப்பாக்கியைத் தூக்கியிருக்கத் தேவையில்லை” என தலைவர் பிரபாகரன் கூறியதைப் போல “ரணில் உண்மையான ஜனநாயகவாதியாக இருந்திருந்தால் நாம் வன்முறைக்குச் சென்றிருக்க மாட்டோம்” என எதிர்கால அரகாலயர் தலைவர் சொன்னாலும் ஆச்சரியபபடத் தேவையில்லை.

வாழ்க ……..?