Spread the love
ரணிலின் உதவியுடனே கோதபாய சிறீலங்கா கடவுச் சீட்டைப் பெறமுடிந்தது!

ஜனாதிபதி தேர்தலில் கோதபாய போட்டியிடுவதற்குத் தடையாகவிருந்த குடியுரிமையை மீளப்பெறுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தனது உள் விவகார அமைச்சர் வஜிர அபயவர்தன மூலம் உதவிகளை வழங்கினார் என ‘கொழும்பு ரெலிகிராப்’ பத்திரிகை செய்தி வெளியுட்டள்ளது.

பிரதமர் ரணிலும் கோதபாய ராஜபக்சவும் ‘இணை பிரியாத திருடர்கள்’என்று கருதப்பட்ட வதந்தி உண்மையென்பது தற்போது நிரூபணமாகியுள்ளதென மூத்த ஐ.தே.கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2019 ஜனாதிபதி  தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க குடியுரிமையைத் துறந்தால் சிறீலங்கா குடியுரிமையை விரைவாகப் பெறுவதற்குத் தான் உதவி செய்வேன் என உறுதிகூறியிருந்ததாகச் செய்திகள் கசிகின்றன.

அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கான அனுமதியை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வழங்கிய மறு நாளே சிறீலங்கா குடியுரிமையைப் பெறுவதற்குத் தேவையான தேசிய அடையாள அட்டையை அபயவர்தனவின் கீழுள்ள ஆட்பதிவு மற்றும் குடிவரவுத் திணைக்களம் கோதபாயவிற்கு வழங்கியிருந்ததென கொழும்பு ரெலிகிராப் கூறுகிறது. இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் குடிவரவுத் திணைக்களம் மூடப்பட்ட பின்னர் கோதபாய ராஜபகசவின் நேரடி வரவு இல்லாமலேயே அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு இந்த அடையாள அட்டை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறதென்பதற்கான ஆதாரங்களும் வெளிவந்துள்ளன.

பிரதமரின் தலைமைப் பணியாளரான சகல ரத்னாயக்கா கோதபாயவின் வீட்டில் ஞாயிறு (ஆகஸ்ட் 4) அன்று இருந்ததை ஐ.தே.கட்சியின் தவிசாளரான காபிர் ஹஷிம் அவர்கள் கண்டிருந்தார் எனவும் ரத்நாயக்காவும் ராஜபக்சவும் நீண்ட உரையாடலைச் செய்துகொண்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.

விக்கிரமசிங்கவின் மருமகளும் பிரதரின் தலைமைப் பணியாளருமான இஷ்னி விக்கிரமசிங்க, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி போட்டியிடச் சந்தர்ப்பம் வழங்கப்படாவிடின் தனது குடும்பம் கோதபாயவிற்கே ஆதரவளிக்கும் என அக்டோபர் 2018 இல் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

அதே வேளை, கோதபாய ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படாவிட்டால் தாம் ரணிலுக்கு ஆதரவாகக் களமிறங்குவோமென கோதபாய ஆதரவாளர்கள் மஹிந்த ராஜபக்சவை எச்சரித்துள்ளரரெனவும் அறியப்படுகிறது.

‘பொண்ட்’ பத்திர ஊழலின் சூத்திரதாரியான அர்ஜுன் அலோய்சியஸ் இற்கு மிக நெருக்கமான டிலித் பெரேரவுடன் கோதபாய மிக நெருக்கமான நட்புறவை வைத்துக் கொண்டிருக்கிறார். கோதபாய ஜனாதிபதியாக வரும் பட்சத்தில் தன்னையும், தன் குடும்பத்தையும், ரணில் விக்கிரமசிங்கவையும் அவர் பாதுகாப்பார் என உத்தரவாத்ம் தந்தால் கோதபாயவின் தேர்தல் செலவுகளைத் தான் பொறுப்பேற்பார் என அலோய்சியஸ் கூறியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Related:  கருணா விடுதலைப்புலிகளின் தலைவரின் இருப்பிடத்தைக்கூடக் காட்டித்தரவில்லை - சரத் பொன்சேகா

கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் லாஸ் ஏஞ்ஞலிஸ் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து கோதபாயவிற்கு அழைப்பாணையை வழங்கியபோது கோதபாய கொழும்பிலிருந்த நண்பர் டிலித் ஜயவீரவை அழைத்து ஆலோசனை கேட்டார் எனவும் அப்போது ஜயவீரவுடனிருந்த இஷ்னி விக்கிரமசிங்க தான் ரணிலுடன் பேசி இவ் விவகாரத்தில் சிறீலங்கா அதிகாரிகளின் ஒத்துழைப்புக் கிடைக்காமல் செய்வதற்குத் தான் வழிவகுப்பதாக உததரவாமளித்ததாகவும் நம்பகமான செய்திகள் கிடைத்துள்ளதாக கொழும்பு ரெலிகிராப் மேலும் தெரிவிக்கிறது. இது தொடர்பாக லசந்தாவின் மகள் அஹிம்ச விக்கிரமதுங்கவின் வழக்கறிஞர்களுடன் காவல் துறையினரோ, வேறு அதிகாரிகளோ ஒத்துழைக்கக் கூடாது என்பதற்காக பிரதமரின் அலுவலகம் வழக்குத் தொடுநர் நாயகத்தின் திணைக்களத்திற்கு (Attorney General’s Dept) அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிய வருகிறது.

அக்டோபர் 2018 சதியின்போது இஷ்னி விக்கிரமசிங்க கோதபாய ராஜபக்சவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையேயான சந்திப்பொன்றை அலரி மாளிகையில் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் மூடிய கதவுகளின் பின்னால் நடைபெற்ற இச் சந்திப்பில் பேசப்பட்ட விபரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை எனவும் அறியப்படுகிறது.

இதே வேளை, விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரங்களை அவரது மருமகள் இஷ்னியே முன்னெடுத்து வருவதாகவும் கோதபாய தரப்பில் பல செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் களமிறங்கியிருப்பதாகவும் ரணில் தனது தேர்தலுக்குப் பின்னதான இருப்புக் குறித்தே கரிசனை கொண்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. 2015 இல் ராஜபக்ச தரப்பிடமிருந்து ஐ.தே.கட்சிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற்காக உழைத்தவர்களைப் பற்றி ரணில் எதுவித அக்கறையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை எனவும் கோதபாய ஆட்சியில் வன்முறையின் கரங்கள் எப்படியெல்லாம் நீளப் போகிறது, எங்கள் வாழ்வு அரசியலில் மட்டுமல்ல நிஜமாகவே முடியப்போகிறது என அந்த ஐ.தே.கட்சி உறுப்பினர் கூறினார் எனவும் கொழும்பு ரெலிகிராப் அபாயச் சங்கை ஊதியிருக்கிறது.

 

 

Print Friendly, PDF & Email