Sri Lanka

கோதபாயவின் திரிசங்கு நிலை | ஜனாதிபதியாகலாம் அல்லது நாடற்றவராகலாம்!

சிறிலங்கா பொதுஜன பெரமுன குழப்பம்

கோதபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சிறீலங்கா பொதுஜன பெரமுனஅதிர்ச்சியில் உள்ளதாகவும் கோதபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்கள் திங்களிரவு மஹிந்த ராஜபக்சவின் விஜேராம மாவத்த இல்லத்தில் சந்தித்து கோதபாய சந்திக்கும் சட்டச் சவால்கள் பற்றி ஆலோசித்ததாகவும் கோதா தேர்தலில் போட்டியிட முடியாத சந்தர்ப்பம் ஏற்படின் அவரது இடத்துக்கு சமால் ராஜபக்சவை நியமிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளதாக கொழும்பு ரெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குடிமைச் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்த தேனுவர ஆகியோர், கோதபாயவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக நவம்பர் 21, 2005 இல் வழங்கப்பட்ட பத்திரம் உண்மையானதல்ல எனவும், சிறிலங்கா குடியுரிமை இல்லாத ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் கூறி கடந்த வெள்ளியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். இவ் வழக்கு நீதிமன்றத் தலைவர், நீதிபதி யசந்தா கொடாகொட தலைமையிலான மூவரால் விசாரிக்கப்படவுள்ளது. மற்ற இருவரும் முறையே நீதிபதி அர்ஜுனா அபயசேகரா மற்றும் மஹிந்த சமயவர்த்தன ஆவார்கள்.

கோதபாயவின் இரட்டைக் குடியுரிமை செல்லாது எனவும் அதை மீளப்பெறும்படியும் கோரி விண்ணப்பதாரிகள் வழக்குத் தொடுத்துள்ளனர். இவ் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் கோதபாய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது போய்விடும்.

சிறிலங்கா குற்றப்பிரிவு கொழும்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 26 அன்று சமர்ப்பித்த அறிக்கை B யின் (நூறு பக்கங்களைக் கொண்டது) பிரகாரம் குற்றச்சாட்டுக்கான போதுமான சான்றுகள் உள்ளதாகத் தெரியவருகிறது. கோதபாயவின் இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பம் தொடர்பான பத்திரங்கள் எதுவும் எந்தவொரு அமைச்சிலும் காணப்படவில்லை என குற்ற விசாரணைப் பிரிவு நீதிபதிக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

கோதபாயவின் இரட்டைக் குடியுரிமைப் பத்திரத்தின் இலக்கம் 15305A எனவும் நேற்று சி.ல.பொ.பெரமுனவினால் ருவிட்டரில் வெளியிடப்பட்ட பத்திரத்தில் காணப்படும் இலக்கம் 15305 எஅனவும் அது வேறொருவரின் பெயரில் பதியப்பட்ட இலக்கமெனவும் குற்ற விசாரணைப் பிரிவு கண்டறிந்துள்ளது. இது விண்ணப்பம் பற்றி மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதே வேளை கோதபாய ராஜபக்சவின் வழக்கறிஞர்கள் கோதபாய வெளிநாடு போவதற்கென சட்டமா அதிபரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர் எனவும் உரிய பத்திரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றதன் பின்னர் அவர் வெளிநாடு செல்லமுடியுமெனக் கூறப்பட்டதாகவும் தெரியவருகிறது.

வழக்கின் மீதான தீர்ப்பு வழங்குவதை அக்டோபர் 3ம் திகதிவரை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் இறுதித் திகதி அக்டோபர் 7 ஆகும்.

வழக்கில் சாதகமான தீர்வு எட்டினால் கோதபாய ஜனாதிபதியாவார். தீர்வு சாதகமற்றதாக முடிந்தால் கோதபாய நாடில்லாத ஒருவராவார் என அவருக்குத் தொடர்பான வட்டாரங்களில் பேசப்படுவதாக அறியப்படுகிறது.