Dr.S.Sivayogan,MDSri Lanka

கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவலினால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றம்: ஓர் அகநோக்கு – 03

Dr. சா.சிவயோகன், MD
உளமருத்துவ நிபுணர், யாழ்ப்பாணம்
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியோடிருத்தல் (social distancing) என்பது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த விடயத்தை எவ்வாறு கையாளலாம்?

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கொவிட்-19 வைரஸானது மிக இலகுவில், ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றக் கூடியது. தொற்றுள்ள ஒருவரிடமிருந்து சுவாசப்பாதை வழியூடாக அல்லது ஏனைய வழிகள் ஊடாக வெளிப்படுத்தப்படும் வைரஸானது, இன்னுமொருவரின் உடலினுள், இலகுவாக அவரது வாய், மூக்கு, மற்றும் கண்களின் வழி தொற்றிக் கொள்கின்றது. பொதுவாக, தொற்று ஏற்பட்டவருடனான நேரடித் தொடுகை, அவர் தொட்ட மற்றும் உபயோகித்த பொருட்களின் மீதான தொடுகை, அவரது வெளிச்சுவாசம், தும்மல் இருமல் போன்றவற்றின் போது வெளிப்படும் சிறுதுளிகள் பரவியிருக்கின்ற பௌதிகச் சூழலுக்குமுகங்கொடுத்தல் போன்றவற்றினால் இந்தத் தொற்று நிகழ்கின்றது. தொற்று நிகழ்ந்த பின்னர், அந்தத் தொற்றுக்குள்ளானவர் தொற்றின் காரணமாக ஏற்படும் உடல் ரீதியிலான அறிகுறிகளை வெளிக்காட்டுவதற்கு முன்னரே பிறருக்குத் தொற்றைப் பரப்பக்கூடிய ஒருவராக மாறிவிடுவார். இந்த வைரஸின் தன்மை அப்படிப்பட்டது. எனவே, நோய் வெளிப்பாடுகளைக் காட்டும் ஒருவரிடமிருந்து மாத்திரமில்லாது, நோய் அறிகுறிகள் வெளித்தெரியாது இருக்கும் ஏனைய பலரிடமிருந்தும் இந்தத் தொற்று பரவலாம். இன்னுமொரு வகையில் கூறினால் இந்தத் தொற்றைப் பரப்புவது யார் என்றஅடையாளம் தெரியாமலே கொவிட்-19 தொற்றுப் பரவிக் கொண்டிருக்கும்.


இக் கட்டுரை, வடமாகாணத்தில், தற்போதய நோய்த் தொற்றுக் கட்டுபாட்டுச் சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு வழும் மக்களின் உள, உடல் ஆரோக்கியத்தை முன்வைத்து எழுதப்பட்டது. இதன் சில பகுதிகள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களது வாழ் சூழலுக்கும் பொருந்தலாம் என்பதனால் இங்கே பிரசுரமாகிறது – ஆசிரியர்


எனவே, இந்தப் பரவுகையைத் தடுப்பதற்குரிய மூன்று முக்கிய வழிகளாகப் பினவரும் முறைகள் முந்மொழியப்படுகின்றன. முதலாவது, நாம் அடிக்கடி கைகளைச் சவர்க்காரமிட்டு முறையாக
கழுவிக் கொண்டிருப்பதன் மூலம் எமது கைகள் ஊடாகத் தொற்று ஏற்படாதிருப்பதனை உறுதிசெய்தல். இரண்டாவது, கண், மூக்கு, வாய்வழி மூலம் தொற்று எற்படுவதனைத் தவிர்த்துக் கொள்வதற்காகப் பொருத்தமான பாதுகாப்புக் கவசங்களை அணிதல்.தொற்றாளர் அடையாளந்தெரியாத ஒருவராக இருக்கக்கூடும் என்பதனால், நாம் எல்லோரிடமிருந்தும் ஒரு பௌதிக இடைவெளியைப் பேணவேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்படுகின்றது.

துரதிஷ்டவசமாக இந்த ‘ஆளிடைப் பௌதிக இடைவெளி’ (interpersonal physical distance) என்பது, அதாவது ஒருவருடைய உடலிலிருந்து போதியளவு தூரம் (1 – 2 மீற்றர்) விலகியிருத்தல் என்பது, ‘சமூக இடைவெளியோடிருத்தல்’ (social distancing) எனத் தவறாகப் பெயரிடப்பட்டு விட்டது.

பெயரில் என்ன இருக்கின்றது? பெயருக்குப் பின்னால் இருக்கின்ற விடயத்தை, அதாவது கொவிட்-19 ஆனது சமுதாயத்தினுள் பரவிப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தாது இருப்பதற்கான எமது சமூகப் பகளிப்பை, நாம் எவ்வாறு பொறுப்புணர்வோடு நடைமுறைப்படுத்தலாம் என்பதில் கவனஞ்செலுத்துதலே தற்பொழுது முக்கியமானதாகின்றது.

ஆட்களுக்கிடையில் போதியளவு பௌதிக இடைவெளியைப் பேணுதல் என்பது எமது சமுதாயத்தில் அதிக சவால்கள் நிறைந்த ஒரு நடைமுறையாகவே இருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, எமது பண்பாட்டில் இவ்வாறு ஒருவரிடமிருந்து மற்றவர் சற்று விலகியிருந்தபடி கருமமாற்றுவது என்பது இல்லவே இல்லை. ஆசிரியரைச் சுற்றியபடி காணப்படும்.முன்பள்ளி மாணவர்கள், முண்டியடித்தபடி பாடசாலை வாசலை விட்டு வெளியேறும் உயர்வகுப்பு மாணவர்கள், ஒருவரின் தோளோடு தோள் நின்றபடி வழிபடும் ஆலய மரபுகள், தோளுக்கு மேலால் நடைமுறைப்படுத்தப்படும் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் சிறுகடை வியாபாரங்கள், பொதுப் போக்குவரத்துகள், வைத்தியசாலை நடைமுறைகள், வரிசையில் நிற்க வேண்டிய நிலைமைகள், விழாக்கள், கொண்டாட்டங் நன்மை தீமைகள் என எமது பண்பாட்டில் எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே போதியளவு இடைவெளியைப் பேணுதல் என்பது ஒருபோதும் இருக்கவில்லை. எனவே. திடீரென்று இவ்வாறு இடைவெளியைப் பேணுவது என்பது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கின்றது.மேலும், இவ்வாறு போதியளவு இடைவெளியைப் பேணிக்கொண்டு கருமங்களை ஆற்றுவதற்குரிய வெளி (space) உண்மையாகவே பல இடங்களில் இல்லை என்பதே நடைமுறை யதார்த்தமாக இருக்கின்றது. உதாரணமாக, நம்மிடையே இருக்கின்ற பல கட்டிட அமைப்புகள் ஆட்களுக்கடையே தேவைப்படுகின்ற குறைந்தளவு இடைவெளியைத்தானும் கணக்கிலெடுக்காமலே கட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால், இக்கட்டிடங்களுக்குள்ளே வழங்கப்படுகின்ற சேவைகளானவை அதிக அளவினதான சேவை பெறுநர்களை இலக்கு வைத்து வழங்கப்படுகின்றன. பாடசாலைகள், பஸ்தரிப்பிடங்கள், அலுவலகங்கள், ஆலயங்கள், வைத்தியசாலைகள், கடை கண்ணிகள், சந்தைகள் என மனதில் எழுகின்ற அத்தனை உதாரணங்களிலும் இடப்பற்றாக்குறையும், நெருக்கியடித்தபடி இருக்கும் சூழலுமே காட்சிப் படிமங்களாகின்றன.

பௌதிக இடைவெளியைப் பேணுவதற்கான இன்னுமொரு சவால் எமது வீடுகளில் இருக்கின்றது. உண்மையில், சாதாரண நேரங்களில்கூட வீடுகளில் போதியளவு பௌதிக இடைவெளியைப் பேணுவது ஆரோக்கியமானது. அது குறிப்பாக, தற்போதைய கொவிட்-19 தொற்றுச் சூழலில் மிகவும் முக்கியமானதாகின்றது. வீடுகளில் இருந்து வெளியே சென்று வருவோர், அல்லது வீடுகளுக்கு ஏதாவது தேவைகளுக்கு என வருவோர் வீட்டில் இருக்கும் ஏனையவர்களுக்கு, குறிப்பாக வீடுகளில் இருக்கும் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் சிறுவர்களுக்கு, தொற்றுகளைக் கொடுத்துவிடாமல் இருப்பதற்கு நாம் மேலே பார்த்த சுகாதாரப் பழக்க வழக்கங்களும், ஆட்களுக்கிடையிலான பௌதிக இடைவெளியைப் பேணுதலும் முக்கியமானது. ஆயினும், இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? பல வீடுகளில் இவ்வாறு பௌதிக இடைவெளிகளோடு புழங்குவதற்கான வெளி இருப்பதில்லை. நெருக்கமாக அமைந்திருக்கும் சிறுகுடிமனைகளில் இது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்.

இவ்வாறு ஆட்களுக்கிடையே போதிய இடைவெளியைப் பேணுவது என்பது சவால்கள் நிறைந்த விடயமாகவே இருக்கின்றது. அது எவ்வாறு இருந்தாலும், நாம் அதனை முடிந்தளவு கடைப்பிடித்தேயாகவேண்டும். நாம் தொடர்ந்தும் வாழவேண்டுமென்றால், எமது சந்ததியும், சமூகமும் தொடர்ந்து தழைக்க வேண்டுமென்றால் இப்பொழுது நாம் அதனைக் கடைப்பிடித்தேயாக வேண்டும்.கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நான் பணிபுரியும் இடங்கள், ஊடாடும் சமூக சூழல்கள், போய்வரும் வழிகளில் காணுகின்ற காட்சிகள் யாவும் ஆட்களுக்கிடையிலான பௌதிக இடைவெளியைப் பேணுதல் என்பது எவ்வளவு சவால்கள் நிறைந்தவை என்பதைக் காட்டி நின்றன. ஆயினும், மறுதலையாக, நடைமுறைச் சாத்தியமான பல தீர்வுகளையும் இந்த அவதானிப்புகள் தந்து நின்றன. காலத்தின் தேவையானது எமது நடத்தைக்கோலங்களில் மாற்றங்களை உருவாக்குகின்றன என்பதனையும் என்னால் உணரமுடிந்தது. உதாரணமாக, நாம் ஒரு சேவையைப் பெறுகின்ற பொழுது, இடைவெளி விட்டபடி வரிசையில் நிற்றல் என்பது இப்பொழுது மெல்ல மெல்ல அவதானிப்பதுவும், விடயங்களைச் சரியாகக் கிரகித்துக் கொள்வதுவும் சுலபமாகிவிடும். அப்படிச் செய்கின்ற பொழுது நாமும் மிகுந்த மன அமைதியோடும், புத்துணரச்சியோடும் காரியங்களை ஆற்றக்கூடியதாக இருக்கும். நடைமுறைககு வருகின்றது. கொவிட்-1 வைரஸ் தொற்றுப் பரவாமல் இருப்பதற்கு இந்த இடைவெளி இன்னமும் சிறிது கூடுதலாக இருக்க வேண்டும். அதை நாம் விரைவில் பழகிக்கொள்வோம்.

பௌதிக இடைவெளியைப் பேணிக்கொண்டு சேவைகளைப் பெறுகின்ற பொழுது, உதாரணமாக ஒரு வைத்தியரைக் காணும் பொழுது, நாம் உரத்துக் கதைக்க வேண்டியிருக்கின்றது. எம்மைப் பார்த்துப் பின்பு வைத்தியர் உரத்துக் கதைக்க வேண்டியிருக்கின்றது. பின்பு, அந்தச் சத்தங்களுக்கு மேலாக அடுத்தவர் கதைக்க வேண்டியிருக்கின்றது. இவ்வாறு எமது சூழல் சத்தங்கள் நிறைந்த சூழலாக மாறிவிடுகின்றது. இதனைத் தவிர்ப்பதற்கு நாம் எல்லோரும் மிகவும் மெதுவாகக் கதைக்க ஆரம்பித்தோமானால், ஒருவரை ஒருவர் உன்னிப்பாக அவதானிப்பதுவும், விடயங்களைச் சரியாகக் கிரகித்துக் கொள்வதும் சுலபமாகிவிடும். அப்படிச் செய்கின்றபோது நாமும் மிகுந்த அமைதியோடும் புத்துணர்ச்சியோடும் காரியங்களை ஆற்றக்கூடியதாக இருக்கும்.

இந்தக் காலப்பகுதி இன்னுமொரு விடயத்தையும் எமக்குக் கற்றுத் தருகிறது. ஆட்களுக்கடையே பௌதிக இடைவெளியைப் பேண வேண்டிய சிரமங்களே இல்லாத ஒருமுறை இருக்கின்றது. அது, ஒருவரை ஒருவர் இயலுமானளவு நேரடியாகக் காணுவதனைத் தவிர்த்துக் கொள்ளுதல் ஆகும். இன்றைய தொலைத்தொடர்பாடல் சாதனங்களின் வளர்ச்சியும், இணைய வழி இடம் பெறும் மெய்நிகர் (virtual) அலுவலகப் பண்பாடும், கல்விச் செயற்பாடுகளும், உண்மையில் ஆட்களை ஆட்கள் சந்திக்க வேண்டிய தேவைகளைக் குறைத்து விடுகின்றன. பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஊசாலடிக் கொண்டிருந்த நாம் தொழில்நுட்பகள் ஏற்படுத்தியிருக்கும் இந்த வசதிகளை இலகுவாகக் கற்று நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பை இந்த மோசமான தொற்றுநோய்ச்சூழல் எமக்குத் தந்திருக்கின்றது. இதனை நாம் சரியாக உபயோகித்தோமானால் எமது சமுதாயத்தை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்த்த முடியும்.

வீடுகளில் இவ்வாறு தனியாட்களுக்கிடையிலான இடைவெளியைப் பேணுவது என்பது உண்மையில் மிக அதிக சவால்கள் நிறைந்தவையாகவே இருக்கின்றது. எமது குடும்ப அமைப்பு மற்றும் குடும்ப இயக்கம் என்பன பௌதிக இடைவெளியோடிருத்தல் என்பதனைக் கேள்விக்குறியாக்குகின்றன. ஆயினும், நாம் கவனமாக இருக்க வேண்டும். இன்று கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும்.

இந்தவாறு இந்தத் தொற்றுநோய்க் காலத்தில் ஆட்களுக்கிடையே பௌதிக இடைவெளியைப் பேணப் பழகுவது என்பது நாம் ஒவ்வொருவரும் எமக்குத் தேவைப்படும் தனிப்பட்ட வெளியைப் (personal space) புரிந்து கொள்வதற்கும், மற்றவர்களுடைய தனிப்பட்ட வெளியை மதிக்கக் கற்றுக் கொள்வதற்குமான வாய்ப்புகளையும் தருகின்றது. அத்துடன், நாம் இதுவரை காலம் பற்றிப்பிடித்துக் கொண்டிருந்த சில விழுமியங்கள் மீதான தீர்க்கமான மாற்றங்களுக்கும் இது வாய்ப்பளிக்கின்றது. மிகவும் முக்கியமாக கணினித் தொழில்நுட்பமும், இணையப் பயன்பாடும் எவ்வாறு எமது நாளாந்தச் செயற்பாடுகளுக்கு உதவுகின்றன என்பதனைக் கற்றுக் கொள்வதற்கான ஒரு பெருவாய்ப்பை இந்த இடர்காலம் வழங்கியிருக்கின்றது. கொவிட்-19 மாத்திரமல்ல, ஏனைய தொற்றுநோய்ப் பரம்பல்கள் குறைவதற்கும், தனிமனித மற்றும் சமூகத்தின் பொதுவான ஆரோக்கியப் பழக்ககளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கும் இக்காலம் வழிசமைக்கின்றது. இந்தத் தற்காலிக மாற்றஙகள் யாவும் நிரந்தரமானவையாக மாறுகின்ற பொழுது எமது சமூகத்தின் ஆரோக்கியம், அதனது அனைத்துப் பரிமாணங்களிலும் மேம்பாடடையும்.

இறுதியாக ஒரு விடயம். ஆட்களுக்கிடையே இடைவெளியைப் பேணுதல் என்பது அதனது பௌதிகத் தன்மையை மட்டுமே குறித்து நிற்கின்றது. நாம் எல்லோரும் மனதளவில் இணைந்திருக்க வேண்டியது முக்கியமானது. இந்த மனதளவில் இணைந்திருக்கும் பழக்கம் என்பது மிகவும் இரசனைக்குரியது. உடலளவில் தள்ளியிருந்தபடி மனதளவில் இணைந்திருப்பது என்பது உண்மையில் ஒரு நல்ல பயிற்சியும் கூட. இது ஒருவர் மீது மற்றவருக்கு இருக்கின்ற அன்பு, அக்கறை, பரிவு மற்றும் புரிந்துணர்வு மீதான கூருணர்வை அதிகரிக்கின்றது.

தயவுகூர்ந்து நாம் எல்லோரும் மனதளவில் இணைந்திருப்போம். அது இப்பொழுது மிகவும் தேவைப்படுகின்றது. அது எமது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஆறுதல் தரும். பலத்தைத் தரும்.
பயன் தரும்.