Dr.S.Sivayogan,MDHealthSri Lanka

கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவலினால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றம் – ஓர் அகநோக்கு – 02

Dr. சா. சிவயோகன்
உளமருத்துவ நிபுணர்

கொவிட்-19 தொற்றுக் காரணமாக நாம் நீண்ட நாட்களாக வீட்டில் அடைபட்டிருக்க வேண்டியிருக்கின்றது. இதனை எவ்வாறு சமாளிக்கலாம்?

உண்மைதான். ஒரு தொற்றுநோய் வந்து எமது வாழ்க்கை முறைமையை பலவழிகளில் புரட்டிப் போட்டு விட்டிருக்கிறது. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றாக நாம் தனித்தனியே எமது வீடுகளுக்குள் முடங்கிப்போயிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அது ஒன்றுதான் ஓரளவுக்குத்தானும் நம்மையும், நாம் சார்ந்திருக்கும் சமூகத்தையும், நாட்டையும் காப்பாற்றுவதற்கு உதவும் பொறிமுறையாக இருக்கிறது. எனவே, இது ஒரு தனிமனித முயற்சி என்பத்கு அப்பால், ஒரு சமூகக் கடப்பாட்டுடன் கூடிய அர்ப்பணிப்பாகவும் மாறிவிடுகின்றது.


இக் கட்டுரை, வடமாகாணத்தில், தற்போதய நோய்த் தொற்றுக் கட்டுபாட்டுச் சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு வழும் மக்களின் உள, உடல் ஆரோக்கியத்தை முன்வைத்து எழுதப்பட்டது. இதன் சில பகுதிகள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களது வாழ் சூழலுக்கும் பொருந்தலாம் என்பதனால் இங்கே பிரசுரமாகிறது – ஆசிரியர்


இந்த விடயமானது எவ்வளவுதான் எமது புத்திக்குத் தெரிந்தாலும் மனம் ஏனோ அங்கலாய்க்கின்றது. நாம் இதுவரை காலமும் செய்து வந்த காரியங்களைத் தங்கு தடையின்றிச் செய்ய முடியமால் இருக்கும் ஒரு சூழலை எம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு நாளாவது ‘லீவு போட்டுவிட்டு’ வீட்டில் நிம்மதியாக இருக்க வேணும் என்று ஆசைப்பட்ட காலம் நினைவுக்கு வந்தாலும், இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படி ஆளை ஆள் பார்த்துக் கொண்டு இருக்கிறது எனும் சலிப்பு மேலோங்குகின்றது. இந்தச் சலிப்பின் காரணமாக நாம் வெளியில் எட்டிப் பார்த்துவிட்டு, மெதுவாக அயல் வீடுகளுக்கோ, அடுத்த தெருவில் அரைக்கதவில் இருக்கும் கடை ஒன்றிற்கோ, குட்டிச் சந்தைகளுக்கோ, குடும்பத் தரிசிப்புகளுக்கோ புறப்படத் தொடங்கி விட்டோம். அத்துடன் எமக்குப் போக முடியாதபோது, எம்மை நோக்கி நடமாடும் வியாபாரிகளை வரவழைத்து, அவர்களிடம் ஏதாவது பெற்றுக் கொள்ள விழைகிறோம். கிளினிக், மருந்து மாத்திரை, மதவழிபாடு, பணப்பரிவர்த்தனை என கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சாட்டாகக் கொண்டு வெளியே செல்கிறோம். உண்மையில்,வெளியே திரிந்து விட்டு வரும் பொழுது கிடைக்கின்ற ஒரு மகிழ்ச்சி, ஒரு பெருமிதம் சொல்லில் மாளாது.

ஆயினும், இவ்வாறான எமது செயற்பாடுகள் யாவும் அடிப்படையில் வீட்டில் இருக்க வேண்டும் என்ற நடைமுறை என்ன என்ன காரணங்களிற்காக உருவாகியதோ, அவை அனைத்தையும் கேலியாக்கி, தவிடுபொடியாக்கி விடுகின்றன. கொவிட்-19 வைரஸ் தொற்றானது குடும்பங்களுக்குள்ளும், சிறிய குழுமங்களுக்குள்ளும் மட்டும் கட்டுப்படுத்தபட்டிருக்கும் மூன்றாவது நிலையிலிருந்து, எமது கைகைளைப் பறித்துக் கொண்டு சமுதாயம் முழுவதும் பரவிவிடுகினற் நான்காம் நிலைப் பேரிடர்
ஏற்படுவதனைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட “வீட்டில் இருப்போம்” என்கிற நடைமுறை பயனற்றுப் போவதற்கு, நாம் ஒவ்வொருவரும் பங்களித்துக் கொண்டிருக்கிறோமோ எனும் பயம் தொற்றிக்கொள்கிறது.

எனவே, விரும்பியோ விரும்பாமலோ நாம் வீட்டில் இருக்க வேண்டும் என்பதுவே காலத்தின் கட்டாயமாகிறது. அதனையும் ஒருக்கால் விசுவாசத்தோடு முயன்று பார்த்தால் என்ன? எம் கண்ணுக்கு முன்னால் எண்ணில் அடங்காதவர்கள் நோய் வந்து நொடித்துப் போவதையும், எம் அன்புக்குரியவர்கள் செத்து மடிந்து போவதையும் காணாது இருப்பதற்கு நாம் செய்கினற் ஒரு தியாகமாக அல்லது தவமாக
இதனைச் செய்து பார்த்தால் என்ன? தவம் என்பதனை ‘வாழ்வை ஒறுத்தல், மனதைக்
குவியப்படுத்துதல், தொடர் முயற்சி செய்தல் என்று எளிமையாக வரையறுக்கலாம். “செய்க தவம். செய்க தவம். தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்” எனும் பாரதியின் கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வந்து போகின்றன.

சரி வீட்டில் ஒரேயடியாய் இருந்து என்ன செய்வது? இது ஒரு நல்ல கேள்விதான். வீட்டில் செய்வதற்கு வேலைகளா இல்லை. நாம் எமது வீட்டைத் துப்பரவாக்கி, ஒழுங்கமைத்து எவ்வளவு காலம் விதவிதமாகச் சமைத்து எவ்வளவு காலம்? பின்வளவில் உள்ள குப்பைகளை வெளியாக்கி, உக்கி உரமாகக் கூடியதைப் புதைத்து, ஏனையவற்றைப் பொருத்தமாக வெளியகற்றி எவ்வளவு காலம்? எலுமிச்சை மரத்துப் பாத்தியை ஒரு தடவை வடிவாகச் சரிபண்ண வேணும் என்று நினைத்து எவ்வளவு காலம்? கனக்க ஏன்? கேற்றடியிலை இருக்கிற புல்லைச் செருக்கித் துப்பரவாக்க வேணும் என்று திட்டம்போட்டு எவ்வளவு காலம்?

வீட்டில் இருந்தால் மாறி மாறி வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. வீடு என்பது நாம் வாழுகின்ற ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட வெளி அல்லவா? அதில் கொஞ்சம் ஓய்வாக இருந்து வாழ்க்கையை மீட்டிப் பார்த்தால் என்ன? வாழ்க்கைத் துணையாக வரித்துக் கொண்ட ஜீவனோடு சற்று மனம் விட்டு உரையாடியானால்தான் என்ன? எம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் இன்னமும் எம்முடன் வாழும் கொடுப்பினை இருந்தால் அவர்கள் மனமாற அவர்களுடன் பழைய நினைவுகளை மீட்டிப் பார்த்தால் என்ன? இவ்வளவும் ஏன்? நாம் கனகாலம் காணாதிருந்த எமது பிள்ளைகளின் ‘சுயரூபங்களைத்’ தரிசித்தால் என்ன? எங்களது வாழ்வை இவ்வளவு காலமும் தாஙக்கி வந்த எமது இல்லத்தை இரசித்தால் என்ன? வீடு எவ்வளவு இனிமையானது, அதில் விருப்போடு இருப்பது என்பது எவ்வளவு ஆனந்தமானது? இயந்திரமாய் ஓடியாடித் திரிந்த வாழ்க்கையில் ஓர் இடைவேளை கிடைக்கின்றதென்றால், அதனை ஏன் பாழ்படுத்த வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே. வாழுவதற்கு ஒரு வீடு வேண்டும். நாம் இப்போது வீட்டில் இருக்கிறோம்.

ஆயினும், எல்லோராலும் வீட்டில் விட்டேத்தியாக இருக்க முடியாது. அவர்களது குணவியல்பு, அவர்கள் தற்பொழுது செய்து கொண்டிருக்கும் தொழில், அவர்களுக்காக வரித்து இருக்கின்ற தனிப்பட்ட பொறுப்புகள் போன்றன அவர்களை வீட்டில் சும்மா இருப்பதற்கு விட்டுவிடாது. அவர்கள் தொடரந்துஇயங்க வேண்டித்தான் இருக்கின்றது. அம்மா வைத்தியசாலைக் கடமைககுச் செல்ல வேண்டித்தான்இருக்கின்றது. அப்பா சில தினங்களுக்குத் தானும் ‘பார்மசியைத்’ திறந்து வைக்கத்தான் வேண்டியிருக்கின்றது. அண்ணா ஊரடங்கு ஒழுங்காக நடைபெறுவதனை உறுதி செய்ய வேண்டிய பணியில் இருக்கிறான். இந்த வெயிலில் மாமா ஒன்றைவிட்டு ஒருநாள் தானும் தண்ணீர் பாய்ச்சாமல் விட்டால், அவருடைய ஆயிரங் கன்றுகளும் வாடிச் சோர்ந்து செத்துப்போய் விடும். ஆக, சிலருக்கு வீட்டை விட்டு வெளியே போய்வர வேண்டித்தான் இருக்கிறது. அதுதான் நியதி என்றால், அவர்கள் மிகுந்த அவதானத்தோடும், தேவையான முற்பாதுகாப்புகளோடும் வெளியே சென்று வரட்டும். ஆனால், சென்று வந்தததும் முறையாகத் தமது ஆடைகளைத் தோய்த்து வெயிலில் உலர்த்துவதோடு, வீட்டினுள் நுழைவதற்கு முதல் தம்மை முழுமையாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளுதல் அவசியமானது. கொவிட்-19 எங்கும், எப்படியும் தொற்றிவிடலாம் என்பதனைப் பற்றி வெளியே சென்று வருபவர்கள் எப்போதும் விழிப்போடிருக்க வேண்டியது அவசியமானது. எம்மையே நம்பியிருக்கும் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புத் தொடர்பான எமது அக்கறையை நாம் எப்போதும் வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பௌதீக ரீதியாக வெளியே செல்ல வேண்டிய தேவைகள் இல்லாதவர்கள் வீட்டில்இருந்தபடியே தமது பணியை முன்னெடுக்கலாம். தற்காலத்துத் தொலைத்தொடர்பு சாதனங்களின் துணையோடு அவர்கள் படிக்கலாம், படிப்பிக்கலாம், குழுக் கலநது; ரையாடலில் ஈடுபடலாம், உசாத்துணைகளை உசாவலாம், ஆய்வுக் கட்டுரைகளை எழுதலாம், வியாபாரம் செய்யலாம், கலைகள் பயிலலாம், கருத்துக்கள் பகிரலாம், உலகோடு உலாவலாம், உயிர்ப்போடு இருக்கலாம்.

வீடு இனிமையானது. அது எமது இன்பங்களையும், துன்பங்களையும் தாங்கி நிற்பது. வீட்டில் இருந்தபடி எத்தனையோ விடயங்களைச் செய்யலாம். வீடு எம்மை நாமே மீள்கண்டுபிடிப்புச் செய்வதற்கு உதவும். அது நாம் இழந்த விடயங்களை அடையாளங்கண்டு அவற்றைத் திரும்பவும் பெற்றுக் கொள்வதற்கு உதவி செய்யும். எமக்கு ஒரு வீடு இருக்கின்றது. அதனைவிட வேறு என்ன பேறு வேண்டும்? வீட்டில் இருப்போம். பாதுகாப்பாக இருப்போம். நமக்காகவும், நாம் சார்ந்தவற்றிற்காவும், நாட்டுக்காகவும்.