Sri Lanka

கொழும்பு புறநகரில் வாழும் தமிழர்கள் மீது பொலிசார் பாரபட்சம் காட்டுகிறார்கள் – மனோ கணேசன் பா.உ. குற்றச்சாட்டு

கொழும்பு நகர்ப்புறத் தமிழ் வாசிகளிடம் பொலிசார் மிகவும் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி பா.உ. மனோ கணேசன் பாராளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். புறநகர் வாசிகளிடம் தகவல்கள் பெறப்படும்போது அவர்களது இனம், மதம், பேசும் மொழி ஆகியவை பற்றிக் கேட்கப்படுகிறதெனவும் அவற்றைப் பெறுவதற்கான தகவல் பத்திரம் சிங்கள மொழியில் மட்டுமே இருப்பதனால் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் எனவும் இனவழிப் போராட்டம் எதுவும் நடைபெறாத போது இனம், மதம், மொழி பற்றிய தகவல்கள் ஏன் சேகரிக்கப்படவேண்டும்; இதுபற்றி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரைறான் அலிஸ் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மனோ கணேசன் கேட்டிருக்கிறார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் அலிஸ், “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் பா.உ. மனோ கணேசன் சபையைத் திசை திருப்ப முயற்சிக்கிறார். அவர் குறிப்பிட்ட தகவல் சேகரிக்கும் பத்திரம் இன, மத வேறுபாடு பாராது அனைத்து கொழும்பு வாசிகள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக அடையாளம் கண்டுகொள்வதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

“தகவல் சேகரிப்பதற்காக மேகொள்ளப்படும் இத் திட்டம் குற்றச் செயல்களைத் தடுக்க உதவும்; இதற்கு இங்கு வாழும் மக்கள் பற்றிய அனைத்து விடயங்களும் தேவைப்படுகின்றது. மக்களைச் சிரமப்படுத்துவது அமைச்சின் நோக்கமல்ல. இருப்பினும் பத்திரத்தில் தமிழ் மொழி இல்லை என உறுப்பினர் கணேசன் கூறும் விடயம் பற்றி நான் உடனடி நடவடிக்கை எடுப்பேன். மூன்று மொழிகளிலும் இப்பத்திரம் வழங்கப்படுவதை நான் உறுதி செய்வேன்” என அமைச்சர் அலிஸ் மேலும் தெரிவித்தார்.