கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முறுத்தெட்டுவ ஆனந்த தேரரை அவமதித்த மாணவர்கள்!

பல்கலைக்கழக மாணவர்களின் செயல் முன்மாதிரியானது – சோபித தேரர் புகழாரம்

கொழும்பு பல்கலைக்கழக சட்டக்கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட புதிதாக நியமிக்கப்பட்ட வேந்தர் முறுத்தெட்டுவ ஆனந்த தேரரிடமிருந்து தமது பட்டங்களை வாங்காமலும் படங்களை எடுத்துக்குக்கொள்ள மறுத்தும் புறக்கணித்ததன் மூலம் அவரை அவமானப்படுத்திய சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.

பட்டமளிப்பு விழாவின்போது வேந்தரிடமிருந்தே மாணவர்கள் தமது பத்திரங்களைப் பெறுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்ட முறுத்தெட்டுவ தேரரை சில மாணவர்களும், விரிவுரையாளர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டோமென்று தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக தேரரிடமிருந்து தமது பட்டப் பத்திரங்களை வாங்காமல் துணைவேந்தரிடமிருந்து அவற்றைப் பெற்றும், அவரோடு நின்று படம் எடுத்துக்கொண்டும் நடந்துகொண்டதன் மூலம் மேடைஅயில் வைத்துப் பகிரங்கமாக அவரை அவமானப்படுத்தியுள்ளார்கள்.



சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்தைப் பகிரங்கமாகவும் படு மோசமாகவும் விமர்சித்து வந்த மூறுத்தெட்டுவ தேரருக்கு கொழும்புப் பல்கலைக்கழக வேந்தர் பதவியை வழங்கியதைத் தொடர்ந்து அரசாங்கத்தை விமர்சிப்பதை அவர் நிறுத்தியிருந்தார்.

இப்பட்டமளிப்பு வைபவத்தில் மேடையில் அமர்ந்திருந்து பட்டங்களை வழங்கிக்கொண்டிருக்கும் தேரரை மாணவர்கள் புறக்கணிப்பது பற்றிய ‘ஹிரு’ ஊடகத்தின் சிங்களத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காணொளியொன்று இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

Courtesy: Hiru News
ஒமால்பே சோபித தேரர்

அதே வேளை கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் இந்நடவடிக்கை முன்மாதிரியானது என ஒமால்பெ சோபித தேரர் பாராட்டியுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது ” பட்டமளிப்பின்போது கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் காடிய சுய மரியாதை எதிர்ப்பு நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியதும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுமாகும். இது ஜனாதிபதியும் அரசாங்கமும் இதன் மூலம் முறையான செய்தியொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் ” என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

“பல நியமனங்கள், பதவிகள் அரசியல், தனிப்பட்ட மற்றும் நண்பர்கள் என்ற காரணத்துக்காக வழங்கப்படும்போது பலர் மெளமனாக இருந்து பார்த்துக்கொண்டிருக்கையில் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். மஹாநாயக்கர்கள் உட்படச் சகல மதத் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என ஒமால்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.